Step into an infinite world of stories
Non-fiction
திரைப்படம் என்பது இருபதாம் நூற்றாண்டுக் கலைவடிவம். மனித இனத்திற்கு அறிவியல் வழங்கிய ஒரே கலை திரைப்படம் தான். இதர நுண்கலைகளான இசை, ஓவியம், சிற்பம், நாடகம், இலக்கியம் ஆகியவை ‘புகைப்படம்' எனப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புடன் இணைந்ததால் தோன்றியதுதான் திரைப்படக்கலை.
மற்ற கலைகள் எப்போது உருவெடுத்தன என்பதற்கு எந்தவொரு ஆதாரமோ வரலாறோ இல்லை. ஆனால் திரைப்படம் என்ற கூட்டுக்கலை (COMPOSITE - ART) 28.12.1895 அன்றுதான் தோன்றியது. ஆம், ஃபிரான்ஸ் நாட்டுத்தலைநகரான பாரீஸில் அன்றுதான் உலகின் முதல் திரைப்படத் திரையிடல் 'லூமியே சகோதரர்களால்' (LUMIERE BROTHERS) நடத்தப்பட்டது.
ஆதலின் உலகத்திரைப்பட வரலாறு அன்று முதல்தான் தொடங்கியது!
இந்தியத்திரைப்பட வரலாறு 1913ஆம் ஆண்டு தாதாசாகிப் பால்கே உருவாக்கிய “ராஜா ஹரிச்சந்திரா...” என்ற மவுனப் படத்திரையிடலுடன் அன்றைய பம்பாய் நகரில் தொடங்கியது.
தென்னிந்தியத் திரைப்பட வரலாறு 1916ஆம் ஆண்டு நடராஜ முதலியார் உருவாக்கிய "கீசகவதம்...” என்ற மவுனப்படத்திரையிடலுடன் அன்றைய ‘மதராஸ்' நகரில் தொடங்கியது.
இந்தியாவின் முதல் பேசும் படமான "ஆலம் ஆரா...” 1931ஆம் ஆண்டு மார்ச் திங்களில் அன்றைய 'பம்பாய்' நகரில் திரையிடப்பட்டதும் தமிழிலும் தெலுங்கிலும் பேசிய முதல் படமான “காளிதாஸ்" அதே ஆண்டு அக்டோபர் திங்கள் அன்றைய 'மதராஸ்' நகரில் திரையிடப்பட்டதும் யாவரும் அறிந்த வரலாறே.
இந்தியத் திரைப்பட வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் நூல்களெல்லாம் ஆண்டு வாரியாக, தேதி வாரியாக 1931 முதல் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ச்சியாகப் பதிவு செய்துள்ளன. நான் அவ்வாறு செய்யாமல் தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றைப் பல்வேறு கோணங்களில் நோக்கி, 1931 முதல் 2005ஆம் ஆண்டு இறுதி வரையிலான காலகட்டத்தில் வெளியான அத்தனை திரைப்படங்களையும் ஐந்து 'பார்வை'களாக, இந்நூலில் சில தலைப்புகளில் பதிவு செய்துள்ளேன். அவை:
1. திரைப்படங்களான இலக்கியங்கள்.
2. திரைப்படங்களான நாடகங்கள்
3. திரைப்படங்களில் யதார்த்தமும் மண்ணின் மணமும்
4. சுதந்திர வேள்வியில் தமிழ்ப்படங்கள்
5. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள்
உலகின் பல்வேறு நாட்டுத் திரைப்படங்களும் அந்தந்த நாட்டுப் பாரம்பரிய இலக்கியங்களையும், நாட்டுப்புறக் கதைகளையும், மேடை நாடகங்களையும் அடிப்படையாகக் கொண்டு தான் உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கப்பட்டும் வருகின்றன.
அந்த வகையில், எழுதப்பட்ட தமிழிலக்கியங்கள் எந்தளவிற்கு தமிழ்ப்படங்களாக உருவாகியுள்ளன என்பதை இந்நூல் விவரிக்கிறது.
அதேபோல பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் மேடையேற்றப்பட்ட தொழில்முறை நாடகங்களும், பயில்முறை நாடகங்களும் எவையெவையெல்லாம் தமிழ்ப் படங்களாக உருமாற்றம் பெற்றுள்ளன என்பதையும் விவரிக்கிறது.
பெரும்பாலான தமிழ்ப்படங்கள், வர்த்தகரீதியிலான வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு 'ஜிகினாத் தாளினால் சுற்றப்பட்ட மசாலாப் பண்டங்’களாகத்தான் உருவாக்கப்படுகின்றன. 'கானல் நீரைத் தேடி அலையும் காட்டுமான்' போல அலைந்து திரிந்து, 'யதார்த்தமும் மண்ணின் மணமும்' கொண்ட சில தமிழ்ப்படங்களை இனம் கண்டு விவரித்துள்ளேன்.
இந்திய நாட்டு விடுதலைப் போர் நடந்து கொண்டிருந்த இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏராளமான மேடை நாடகங்களிலும் பல தமிழ்ப்படங்களிலும் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவான பாடல்களும், கதையமைப்புகளும் இடம் பெற்றிருந்தன. அவற்றைத் தேடிப்பிடித்து ஆய்வு செய்து “சுதந்திர வேள்வியில் தமிழ்ப்படங்கள்" என்ற பகுதியில் விவரித்துள்ளேன்.
ஒரு மொழியில் ஏற்கனவே வெளிவந்த திரைப்படத்தின் வசனங்களையும் பாடல்களையும் மற்றொரு மொழிக்கு மாற்றம் (DUB) செய்து வெளியிட முடியும் என்ற தொழில்நுட்பத்தை, இந்திய திரையுலகிற்கு முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்ததே தமிழ்த்திரையுலகம்தான்! 1944ல் தொடங்கிய அந்த வரலாற்றையும் வளர்ச்சியையும் ஆய்வு செய்து இந்நூலில் விவரித்துள்ளேன்.
- அறந்தை மணியன்
Release date
Ebook: December 10, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International