ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
புகழ்பெற்ற சாமியார்கள் மதத்தலைவர்கள் பலரையும் புரட்டிப் புரட்டி அவமதித்த கேலி செய்த சமய ஒளி ஓஷோ, அவர் ஒருவர் கூட கிண்டலடிக்காமல் "அவர் சொன்ன ஞானம் முழுவதும் அவர் பெற்ற அனுபவம். அதில் இரவல் அறிவு இம்மியும் கிடையாது. முழுமையும் சொந்தமாக உணர்ந்தது" என்று பாராட்டிய ஒப்பற்ற ஞானி ரமணர்... ரமணர் மட்டுமே.
சத்தியத்தைத் தரிசிக்கும் ஆர்வம் தணலாய்த் தகிக்க நெருப்பு மலையாம் அண்ணாமலையை நோக்கி ஈர்க்கப்பட்ட ஜோதிதான் பகவான் ரமண மகிரிஷி. மதத்தின் ஆன்மாவைப் புறந்தள்ளி விட்டு சவமாகிப்போன சடங்குகளில் மனிதனைப் புதைத்த சமயத்தலைவர்கள் நடுவே, சடங்குகளைப் புறந்தள்ளிவிட்டு ஆன்மாவை அறிமுகப்படுத்திய ஆனந்த நிலையே ரமண மதம். அவன், அவர் என்றில்லாமல் அதுவாகி நின்ற பூரணம் ஸ்ரீ ரமணம்.
பார்க்க வந்த ஒருவர் நூற்றி எட்டு நமஸ்காரம் செய்வதாகப் பிரார்த்திக்கொண்டதாய் மூச்சிறைக்க மூச்சிறைக்க நூற்றி எட்டு முறை நமஸ்கரிக்க முயன்றபோது, " இந்த சர்க்கஸ் வேலை எல்லாம் இங்க எதுக்கு? பக்தி உள்ள இருந்தா போதும்" என்று உண்மை பேசிய உயரம் ரமண உயரம்.
அவரது வாழ்க்கையை வார்த்தைகளில் வடிப்பது சுலபமல்ல. மௌனத்தை மொழிபெயர்க்கும் வல்லமையுடன் பேசா ஊமை மேற்கொள்ளும் பெரு முயற்சி அது. ஆனால் பெயர்ப் பொருத்தம் வாய்த்த ரமணா, அழகாக அப்பணியை ஆற்றி இருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு அகல்விளக்கு.
ரமண பக்தி இன்றி இப்பணி செய்திருக்க முடியாது. அவருக்கு என் வாழ்த்து - பாராட்டு. வெறும் வாழ்க்கை வரலாறு என்கிற அளவில் எழுதவில்லை. பகவானுடைய உபதேசங்கள் இடை இடையே ஒலிக்கிறது. மொழிநடை தங்கமாய் அங்கங்கே தக தகிக்கிறது. தத்துவச் செறிவு புத்தகம் முழுவதும் கனம் சேர்க்கிறது. ரமணபக்தி ஊதுபத்தியாய் மனசெல்லாம் பரவி கம கமக்கிறது.
சின்னவயது வெங்கட்ரமணன் திருச்சுழியிலிருந்து வெளியேறி தன் தலைச்சுழியை மாற்றியமைத்துக் கொண்ட பகவான் ரமணராய் விரிவடைந்த வரை பலப்பல சம்பவங்கள், பலப்பல உரையாடல்கள், பல்வேறு நபர்கள், என்று நூல் அடர்த்தியாக நெய்யப்பட்டுள்ளது. கோர்வையாகக் கால அமைப்பில் சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பகவான் ரமணர் பெயரில் வெளிவந்த நூல்கள் எப்படி உருவாயின என்கிற விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு அன்பர்களின் வருகையால் உலகம் எப்படி திருவண்ணாமலையைத் திரும்பிப் பார்த்தது என்பது பற்றியெல்லாம் சுவைபட ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார் ஆசிரியர். எழுத்து முறையால் காட்சிகள் கண்முன் விரிவது அவருக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். சகல ஜீவராசிகளும் ரமணர் சந்நிதியில் முக்தி பெற்றதைப் படிக்கும் போது "அட... இவை முக்தி பெற முடியும் என்றால்.. நமக்கும் ரமண சந்நிதியில் முக்தி உண்டு" என்று கலங்கும் ஆன்மாக்கள் திடமடையும்.
ரமணரை அறிய விரும்பும் அன்பர்கட்கு இந்நூல் ஓர் அற்புதமான அறிமுகம். ரமண உபதேச மணிமாலை அவர் வழிவர விழைவோர்க்கு அரிய உபகரணம். மனதில் என்ன சிந்தனை தோன்றினாலும் சிந்தனை வழி தொடராது, எங்கிருந்து இந்த எண்ணம் புறப்பட்டது என்பதைக் கவனித்தால் சிந்திப்பது நின்று மனம் அடங்கும் என்கிற உண்மையை எளிமையாகப் புரிய வைத்துள்ள ஆசிரியரை வாழ்த்துகிறேன். பணிகள் தொடர பரம்பொருளைப் பிரார்த்திக்கிறேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 11 มกราคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย