Step into an infinite world of stories
Romance
சாருலதா ஒரு முடிவற்ற காதல் யாத்திரையின் தேடல். சத்யஜித்ரேயின் சாருலதா எப்படிப்பட்டவள். இயற்கையோடு இயற்கையாய் இயைந்து போயிருப்பவள். இயற்கையோடான ரசனை, சிநேகிப்பு, நேசிப்பு அவளை இயற்கையாகவே ஆக்கிவிடுகிறது. கவித்துவமான வாழ்விற்கான தேடலை, புரிதல் நிறைந்த துணையை, சொல்லுக்குள் அடக்க இயலாத ஏக்கத்தின் யுகாந்திரத் தவிப்பை அவளின் தேடல் உணர்த்திச் சென்றவண்ணமிருக்கின்றன. இந்தத் திரைக்காவியமானது இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நஷ்டனிர் அல்லது தி ப்ரோக்கன் நெஸ்ட் என்கிற நாவலின் மூலம், சத்யஜித்ரேயின் கைவண்ணத்தில் அபாரமான திரைக்கதையாக பரிமளித்தது. அந்தத் திரைக்கதையை அடியற்றி எழுதப்பட்ட நாவல் தான் இது, இந்தப் படம் 1964-ல் வெளிவந்திருக்கிறது. இது ஒரு வங்கமொழிப் படம். இந்தப் படத்துக்கு சிறந்த இயக்குநருக்கான விருது பெர்லின் திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகச் சிறந்த படத்துக்கான விருதை 1965-ம் வருடம் இந்தப் படம் பெற்றிருக்கிறது. கதை என்று பார்த்தால் இரண்டு வரிக்கதை தான். எந்தவிதமான மெலோடிராமாக்களும் இதில் கிடையாது. யதார்த்தமான நிகழ்வுகளின் நகர்வுகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் உணர்வுகள் ததும்பும் உயிரோட்டம் எங்கும் ததும்பியிருக்கிறது. இதில் வருகிற நாயகி சாருலதாவாக நடித்திருக்கிற மாதவி சட்டர்ஜி ஒரு அபாரமான நடிகை. இந்தப் படத்தை வெளிநாடுகளில் வெளியிட்டபோது, அதற்குத் தரப்பட்ட தலைப்பு தி லோன்லி வொய்ஃப். ஒரு அரசியல் நாளிதழ் நடத்திக்கொண்டிருக்கிற வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பூபதிக்கு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வாழ்க்கைப்பட்டு வருகிறாள் சாருலதா. அவனுடைய ஆசை நாட்டின் சுதந்திரம் மற்றும் வறுமையற்ற இந்தியா. உடலியல், பொருளியல், அரசியல் சார்ந்தே அவனின் தேடல் இருக்கிறது. செய்திகள்.... செய்திகள்.... செய்திகள்.... போசாக்கான உணவு, புகைபிடிக்கும் குழல், தன்னுடைய பத்திரிகை அலுவலகம் இவ்வளவு தான் அவனுடைய உலகம். இவளோ கனவுகளில், கற்பனைகளில், இலக்கியங்களில் நிஜத்தைப் பாக்க விரும்புகிறவள். குயிலோடு, கிளியோடு, செடிகொடிகளோடு சரளமாகப் பேசுகிறவள். அவள் அவளுக்காக, அவளுடைய உண்மைகளுக்காகவே வாழ விரும்புகிறவள். இயற்கையோடு நட்பு வைத்துக் கொண்டு தனது பிரத்யேக உலகத்தில் தன்னந்தனிமையில் சஞ்சரித்துக்கொண்டிருப்பவள். அப்போது தான் பூபதிக்கு உதவியாக அங்கே வந்து தங்குகிறான் அவனின் ஒன்றுவிட்ட தம்பி அமல். அவனுக்கும் கதை, கவிதை, கட்டுரை, இயற்கை என்று இவை அத்தனையிலும் சாருவைப் போலவே ஈடுபாடு. ஒரே மாதிரி ரசனை. சாருலதா மனதிற்குள் நிலவியிருந்த வெறுமையை அவனின் நட்பு விரட்டியடிக்கிறது. அவளுக்குள் அவள் உயிரூட்டி வைத்திருந்த அவளின் கனவு மனிதனாக அமல் இருப்பது அறிந்ததில் சாருலதாவுக்கு ஆச்சர்யம். இந்த மூன்று மையக் கதாபாத்திரங்களுக்குள் நடக்கிற உணர்வுப் போராட்டத்தைத் தான் ரே கவிதையாக, அழியாக் காவியமாக வடித்திருக்கிறார். ஒரு முழுக் கதையும் ஒரு வீடு, அதைச் சுற்றியுள்ள தோட்டம், அதன் ஓரமாயிருக்கிற பத்திரிகை அலுவலகம் முதலான இடங்களில் தான் நடக்கிறது. மொத்தமே ஐந்து கதைமாந்தர்கள் தான். அதில் ஒரு அற்புதமான காவியத்தை ரே சாத்தியப்படுத்திக் காட்டுகிறார். உடல் மயக்கத்தையும் கடந்த அபாரமான ஈர்ப்பாக இங்கே ஒரு பிளட்டோனிக் காதல் விரவி நிற்கிறது. இதனைக் கடந்து செல்கிற ஒவ்வொருவரின் உணர்விற்குள்ளும் ஊடுறுவிப் பதிவு கொண்டு விடுகிறது இப்படைப்பு. அவள் அவன் மீது கொண்டிருக்கிற அன்பை மௌனத்தால், கோபத்தால், அழுகையால், குறியீடுகளால் என்று தனதான சகல பரிமாணங்களிலும் வெளிப்படுத்துகிறாள். அவளுக்குள் சதா உறைவு கொண்டிருக்கிற அது, ஒரு இனம்புரியாத அன்பின் ஏக்கக் குரல். நீண்டு மௌனமாய் நிசப்தத்திற்குள் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கிற சுதந்திரம் தேடும் பெண்மையின் ஒருமித்த உணர்வின் குறியீடாய் உள்ளார்ந்த ராகமாய் இசைத்துக் கொண்டேயிருக்கிற உணர்வின் அடர்த்தி. இந்தக் நாவலைப் படிப்பது மட்டுமல்ல நினைப்பதும்கூட உணர்வின் ஒருமித்த மனக் குவிப்புடன் நிகழும் தியானிப்பே. ஒரு ஆழ்ந்த தியானிப்பிற்குள் பயணித்து, ஆயித்து, தெளிந்து, உளமேறி, சக்தியுற்று, எடை கரைந்து அதில் மிதக்கச் செய்கிற பரவச அனுபவம் அது. எத்தனை முறை பார்த்தாலும் அது விளைவிக்கிற சிலிர்ப்பு அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறதே தவிர, குறைந்ததேயில்லை என்கிற ஆச்சர்யம் தான் இதனைப் பார்த்துக்கொண்டே இருக்க வைக்கிறது. அதே உணர்வை நாவல் வடிவில் இதனை தரிசிக்கிற ஒவ்வொரு மனதும் எய்தும்....எய்திக் கொண்டேயிருக்கும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோடு இதனை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன். நேசத்தோடு, தி. குலசேகர்
Release date
Ebook: January 3, 2020
Tags
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International