Step into an infinite world of stories
இரண்டாயிரத்து எட்டு ஜனவரி முதல் எழுதப்பட்ட பதினேழு கதைகள் இவை. இத்துடன் என் சிறுகதையின் எண்ணிக்கை நூற்றுப் பன்னிரண்டு. நூற்றைம்பதைத் தொட்டதும் ஓய்வு பெற்றுவிடலாமா எனும் கேள்வி பிறக்கையில், ஈதென்ன கிரிக்கெட் சாதனைப் பட்டியலா எனும் பக்கக்கேள்வியும் கிளைக்கிறது.
1975-ல் தொடங்கிய என் கதை மொழி இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் வெகுவாக மாறி வந்திருப்பதைத் தொடர்ந்து வாசிக்கும் எவரும் உணரலாம். சிலசமயம் தோன்றும் இது எனது இழப்பா, மீட்டெடுக்க முனைய வேண்டுமா, இல்லை இதுவே என் இயல்பான போக்கு எனத் தொடர்ந்து போகவா என. தள்ளி நின்று உற்று நோக்கி வாட்டம் திருத்தும் சங்கதியா இது என்ற கேள்வியும் உண்டு. முப்பது வயதின் மொழி நடை அறுபது வயதிலும் சாத்தியமா என்ன?
கதைத்தன்மை குறைந்துவிட்டது. கட்டுரைத் தன்மை மிகுந்துவிட்டது என்றெல்லாம் நண்பர்கள் சொல்வதுண்டு. அந்தக் கூற்றில் உண்மை இல்லாமலும் இல்லை. என்னால் செய்யக்கூடுவது என்ன என்றும் யோசிக்கிறேன். உயரத்தை, திசையை வேகத்தை, கோணத்தை மாற்றிக்கொள்ள இது வெள்ள நிவாரண விமானப்பயணத் திட்டமா? எனக்கு இருக்கும் எதிர்க்கேள்வி, வாசிப்பதில் இடைஞ்சல் இருக்கிறதா என்பது.
படைப்பு மொழி பற்றி எனக்கும் சில கேள்விகள் உண்டு. எழுபதுகளில் எழுத வந்தவனின் படைப்பு மொழியும் இரண்டாயிரத்துப் பத்தில் எழுத வருகிறவனின் படைப்பு மொழியும் எங்ஙனம் ஒன்றாக இருக்க இயலும்?
புதுமைப்பித்தனின், ஜானகிராமனின், லா.ச.ராமாமிர்தத்தின், ஆ.மாதவனின் மொழியை இன்று எவராலும் திரும்பி ஆள இயலுமா? படைப்புத்திறனை, உத்தியை, தொனியை, மொழியை, அவர்களே தொடர்ந்து எழுதுவார்களாயினும் மாற்றாதிருத்தல் சாத்தியமா?
தொடர்ந்து பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்களே எனும் எதிர்கேள்வியை நீங்கள் வைக்கலாம். அதற்குப் பதில் சொல்லப்புகுந்தால் அஃதோர் இலக்கியத் திறனாய்வும் அமையலாம். சமீபத்தில் வெளியான வெங்கட் சாமிநாதனின் 'நினைவின் சுவட்டில்' எனும் தன் வரலாற்றுக் கட்டுரை நூலில் ஓரிடத்தில் அதற்கு நுட்பமான பதிலொன்று இருக்கிறது.
சில சமயம் தோன்றும் - கதைத் தன்மை, கட்டுரைத் தன்மை என்றெல்லாம் இலக்கணம் இருக்கிறதா என. யாரைப் பின்பற்றிப் போவது, யார் வழி நடத்துவது? பின்பற்றிப் போவதும் வழி நடத்துதலுக்கு ஒப்புக் கொடுப்பதும் படைப்பாளுமைக்கு உட்பட்டதா? படைப்பாற்றல் இரண்டாம் தவிலா? அது முதல் தவிலின் தாளக்கட்டால் நடத்தப் படலாமா?
அல்லால் நிறுத்திவிட்டு 'வாழி' பாடிவிடலாமா? ஆகவே நண்பர்களே 'நீர்வழிப் படூஉம் புணை' என்பதும் ஒரு இலக்கியக் கொள்கை தான். நீர்வழி என்பது காலத்தின் போக்கு. ஆனால் எதிர்நீச்சல் என ஒன்று இல்லையா என்பீர்கள். வேகவதிக்கு எதிரேற விட்டதொரு சிற்றேடு தொன்மங்களில் இல்லையா என்பீர்கள். ஆனால் அதற்கான புயவலியும் சுவாச கோளங்களின் குதிரை சக்தியும் மனத்திட்பமும் தன்னலமற்ற போராட்ட உணர்வும் வேண்டும்.
ஈண்டு, படைப்பு பரிசிலுக்கும் பட்டு சால்வைக்கும் பாடிக் கொண்டிருக்கிறது முக்காலே முண்டாணியும். நானும் தேடிக் கொண்டிருக்கிறேன் எதனையும் கண்டு எய்த மார்க்கம் இன்றி.
மிக்க அன்புடன்,
நாஞ்சில் நாடன்.
Release date
Ebook: April 6, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International