Step into an infinite world of stories
‘இந்தக் கதாநாயகருக்கு இரண்டு படம் புக் ஆகியிருக்கிறது, இன்னாருக்கு வாய்ப்புகள் இல்லாததால் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்' என்கிற ரீதியில்தான் முன்பெல்லாம் வார இதழ்களில் சினிமாச் செய்திகள் இடம் பெறுவது வழக்கம்.
'ஸ்டார் டஸ்ட்' படிக்கும் வழக்கம் உள்ள எடிட்டர் எஸ்.ஏ.பி. ஒருநாள், எங்களிடம் அதில் வெளியாகி இருந்த திரைப்படச் செய்திகளைக் காட்டி, "மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கிறது. ஸ்டார் டஸ்ட்டில் இதைத்தான் நான் முதலில் படிப்பது வழக்கம். ஒரு சினிமாச் செய்தியை ரத்தினச் சுருக்கமாக, சுவாரஸ்யமாகக் கொடுத்து, அதில் ஒரு பூனை படத்தையும் போட்டு... ம்ஹும்... நம்முடைய குமுதத்தில் இது மாதிரியெல்லாம் வருவதில்லையே!” என்று ஆதங்கப்பட்டார். கேட்டுக் கொண்டிருந்த ரா.கி.ரங்கராஜன் ஒரு முடிவு செய்தார்.
மறுநாள்! சினிமாச் செய்தி நிருபர் வழக்கமாக எழுதிக் கொடுத்ததை, ரங்கராஜன் எடுத்துக் கொண்டு போய் உட்கார்ந்து, தானே விசாரித்து வந்த மாதிரி கற்பனை செய்து ஒரு புது பாணியில் ஜாலியாக எழுதினார்.
எடிட்டர் அதைப் படித்து விட்டு, "அற்புதமாயிருக்கிறது. யார் எழுதியது? அவரை உபயோகப்படுத்திக்கலாம்..." என்று ஆவலுடன் ரங்கராஜனிடமே விசாரித்தார்.
"நான்தான் எழுதினேன்..." என்று ரங்கராஜன் கூறினார்.
அதில் இருந்து சூடு பிடித்தது.
ரங்கராஜன் 'வினோத்' என்னும் புது புனைபெயருடன் சினிமாச் செய்திகளை எழுத, அவை, 'லைட்ஸ் ஆன்' என்ற தலைப்பில் குமுதத்தில் வெளிவரத் தொடங்கின.
திரைப்பட செய்திகளைத் தொகுத்து வர 'செல்லப்பா' என்னும் ஒரே ஒரு நிருபர்தான்.
ஒரு முறை அவர், "செய்திக்காக நடிகை சீதா வீட்டுக்குப் போயிருந்தேன். பூட்டியிருந்தது. வந்துவிட்டேன்." என்று கூறினார்.
ரங்கராஜன் அவரிடம் “என்ன பூட்டு போட்டிருந்தது? அது என்ன நிறத்தில் இருந்தது?" என்று கேட்டார்.
"அய்யோ, பார்க்கவில்லையே சார்..."
"போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்."
உடனே செல்லப்பா மாங்கு மாங்கென்று சீதா வீட்டுக்குப் போய்ப் பார்த்து விட்டு என்ன கலர் பூட்டு யாருடைய தயாரிப்பு என்றெல்லாம் எழுதிக் கொண்டு வந்தார்.
அந்தச் செய்தி, 'சீதா வீட்டுக் கதவில் பச்சை நிற திண்டுக்கல் பூட்டு என்னை வரவேற்றது' என்று அடுத்த இதழ் லைட்ஸ் ஆன் பகுதியில் வெளியானது.
கொஞ்சம் பழகினதற்குப் பிறகு செல்லப்பாவுக்கே புரிந்து விட்டது. தானே எல்லாத் தகவல்களையும் சேகரித்துச் சொல்லத் தொடங்கினார். செல்லப்பா சேகரித்துக் கொண்டு வந்த சில அந்தரங்கமான விஷயங்களை எல்லாம் ரங்கராஜன் ஆபத்தில்லாமல் வடிகட்டி எழுதி இருக்கிறார். சில விஷயங்களை ரங்கராஜன் ஃபோன் மூலம் உறுதி செய்து கொள்வார்.
கே.பாலசந்தரிடம் 'துணை நடிகையின் கதைதான் நீங்க எடுக்கற ஒரு வீடு இரு வாசல் கதையா?’ என்று ஒரு கேள்வி. ரஜினியிடம், 'உங்கள் படங்களை டப்பிங் செய்யக்கூடாது என்று சொன்னீர்களாமே, என்னென்ன படங்கள்...?' என்று ஒரு விசாரிப்பு!
சினிமாத் துறையை எட்டிக் கூடப் பார்க்காமல், அறைக்குள் அமர்ந்தவாறே, இருபத்து நான்கு மணி நேரமும் சினிமாக்காரர்களுடனேயே பழகிக் கொண்டிருப்பது போலவே எழுதுவார்.
லைட்ஸ் ஆனில் இடம் பெறும் துணுக்குகளுக்குத் தனி அந்தஸ்து கிடைத்ததென்றால் அதற்குக் காரணம் ஒவ்வொரு செய்தியின் இறுதியிலும் முத்தாய்ப்பாக ஆங்கிலத்தில் அவர் எழுதிய பன்ச் லைன்தான்! அந்த இங்கிலீஷ் வாக்கியங்கள் எப்படி லைட்ஸ் ஆனில் இடம் பெற்றன?
'மறுபடியும் தேவகி' என்னும் அவருடைய தொடர்கதையில் கதாநாயகனான சக்கரபாணி அடிக்கடி ஷேக்ஸ்பியரின் வாக்கியங்களை சொல்லிக் காட்டுவான். கதையில் ஓரிடத்தில் ஷேக்ஸ்பியர் வாக்கியத்தைச் சொல்லி வில்லனிடம் மாட்டிக் கொள்வான்.
அந்தப் பாணி எழுத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. லைட்ஸ் ஆன் பகுதியிலும் அதே போல் ஆங்கில வாக்கியம் எழுதினால் என்ன என்று யோசித்தார். அவருக்கும் புத்திசாலித்தனமாக எழுத அந்தப் பாணி ஒரு வாய்ப்பாக அமைந்தது. மக்களுக்கும் வியப்பைக் கொடுத்தது.
ரங்கராஜன் ஒரு மகாவித்துவானின் பிள்ளை. மகத்தான இலக்கியங்களை எல்லாம் படைத்தவர். இருந்தாலும், துணுக்குச் செய்திதானே என்று அலட்சியமாகச் செய்யாமல் லைட்ஸ் ஆனையும் சிரத்தையோடு, ஒரு முக்கியத்துவம் கொடுத்து எழுதினார். திரைப்படத் துறையினருக்கு லைட்ஸ் ஆன் ஒரு தனி மரியாதையை அளித்தது.
லைட்ஸ் ஆன் எழுதும் ஒவ்வொரு முறையும் அவருக்கு உயிர் போய், உயிர் வரும். நாவலுக்குச் சேகரிப்பது போல் குறிப்புகள் என்ன, இங்கிலீஷ் சொற்றொடர்கள் என்ன? வேள்வி போல்தான் செய்தார்.
வினோத் எழுதுவதைப் படித்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியதே இந்தப் பாணிதான்.
அன்புடன்,
ஜ.ரா.சுந்தரேசன்,
Release date
Ebook: December 18, 2019
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International