Step into an infinite world of stories
முன்னுரை
புதிய நூற்றாண்டின் முதல் சரித்திரப் பெருநாவலை எழுத வந்திருக்கிறேன். வரலாறு என்றாலே சேர, சோழ, பாண்டியர்கள் மட்டுமே என்பதாக ஒரு மாயை நம்மிடையே உண்டு. பள்ளிக்கூடங்களிலோ அக்பரின் ‘தீன் இலாஹி’ மற்றும் அசோகர் மரம் நட்டு, குளம் வெட்டிய சுருக்கங்களே மிகுதி.
ஆனால் நிஜமான வரலாறு என்பது வேறு. அது காட்டும் உண்மைகள் குருதி தோய்ந்தவை. சிந்திக்கச் சிந்திக்க நம்முள் பற்றி எரிபவை. இன்றைய முன்னேற்றங்களை அளக்க அடித்தளமாக நிற்பவை.
அப்படி என்னை ஈர்த்த ஒரு வரலாறுதான் சேதுநாட்டு வரலாறு... ஆன்மிக நோக்கில் இது ஒரு மிகப் பெரிய புண்ணிய பூமி. இங்குள்ள ராமேஸ்வரம், காசிக்கு அடுத்து மக்கள் நேசிக்கும் பாவம் போக்கும் பட்டினம்.
இந்திய மண்ணிலும் இதுபோல் கடல்மிசை அமைந்த ஒரு ஆலயம் ஏதுமில்லை. கட்டடக்கலையும் சரி, சிற்ப சாஸ்திரமும் சரி உப்புக் காற்றுக்கு நடுவில் நெம்பிக்கொண்டு எழும்பி நிற்பது இங்கேதான்.
இதற்கடுத்து பல்லவனின் மாமல்லையை நாம் ஆழியை அண்டி நிற்கும் மேழியாகக் காணலாம். ஆனால் இங்கே சிற்பம் மட்டும்தான் இருக்கிறது. தெய்வம் நிலை பெற முடியவில்லை என்பது கண்கூடு.
இப்படிக் கலாபூர்வமாகவும், சிலாபூர்வமாகவும், பக்தி பூர்வமாகவும், பக்திபூர்வமாகவும் தலைசிறந்து விளங்கும் ராமேஸ்வரம், சேது நாட்டின் ஒரு கலசப் பகுதி.
இங்குள்ள கடற்கரையில் மட்டும் புயல் வீசியிருக்கவில்லை. சேது நாட்டின் மீதே பலவித கலாசாரப் புயல்களும் அரசியல் புயல்களும் வீசி, விதவிதமான வண்ணங்களைக் காட்டி இருக்கின்றன.
அவற்றிற்கு ஈடுகொடுத்து மறவர்கள் வாழ்ந்த வாழ்க்கை மனதை நிறைக்கின்றது. இவர்கள் தான் சேத நாடாக இந்த சேது நாடு ஆக முயன்ற போதெல்லாம் அதோடு மோதி, இந்த நாட்டையே மீட்டிருக்கின்றார்கள்.
இந்து வம்சாவளியில் இராமனுக்கும் சிவனுக்கும் நாதனாகி ‘இராமலிங்க விலாசம்’ என்றே தங்கள் கோட்டைக்கும் கொத்தளத்திற்கும் பெயரிட்டுக் கொண்டிருந்தாலும் இந்த சேதுபதிகள் இஸ்லாமியர்களோடும், கிறிஸ்தவர்களோடும் காட்டிய இணக்கம் வீரியமிக்கது.
சைவச் சார்பு நெறியில் தீவிரம் இருப்பினும் வைணவம் தழைக்கவும் வாரி வழங்கி இருக்கிறார்கள்.
இத்தனைக்கும் கங்கை போல் ஒரு நதியோ, காவிரியின் ஒரு பகுதியோ கூடப்பாயாத வானம் பார்த்த பூமி இந்தச் சேது நாடு.
மழை வந்தால்தான் தழைப்பு. இல்லாவிட்டால் மலைப்பு தான். அந்த மழையைப் பிழையின்றிப் பிடித்தாட்கொள்ளத்தான் கண்மாய்கள், ஊருணிகள் அணைகள்... இருப்பினும் பஞ்சம் அவ்வப்போது வந்து நெஞ்சம் கனக்க வைக்கும். இதனால் செல்வர் கூட்டத்தைவிட, வந்து செல்வோர் கூட்டம் மிகுந்த இந்த நாட்டு சேதுபதிகளில் கிழவன் சேதுபதிக்கு ஒரு தனியிடம் உண்டு.
பெயரிலேயே வினோதத்தைக் கொண்ட இவன் நிஜமான கிழட்டு வயதிலும் ஒரு இளைஞன் போல் வீரத்தோடு வாழ்ந்தவன். எதனாலோ தன்னை எல்லோரும் கிழவன் என்றே விளிக்க விரும்பினான். நானறிய இவன் போல ஒரு விசித்திரமான மன்னன் வரலாற்றில் இல்லை. இவனுக்கு 45க்கும் மேல் மனைவியர்...! அத்தனை பேரும் இவன் மரணத்தின்போது உடன்கட்டை ஏறியது நிச்சயமாக உலக அதிசயம்.
எவ்வளவோ யுத்தங்கள் - தொண்ணூறு சதம் அதில் வெற்றி மட்டுமே... வெள்ளையனிலிருந்து இஸ்லாமியர்கள் தொட்டு கிறித்தவர்கள் வரை இணக்கத்திற்கு இணக்கம், கணங்கினால் பிணக்கம் என்று இவன் வாழ்ந்த முறை...
பாளையக்காரனைப் போன்ற அந்தஸ்தில் இருந்த போதிலும் ஒரு சக்கரவர்த்தி போல மதுரை, தஞ்சை என்று தொட்டு டெல்லியில் ஒளரங்கசீப் வரை அரசியல் சதுரங்கத்தில் ஆடிச் சாய்த்த சாதுர்யம்...
தனது சின்ன நாட்டிலும் பட்டு நெய்து, முத்துக்குளித்து, புகையிலை பயிரிட்டு, கடல் வாணிபம் கண்டு, கலைகளையும் வளர்த்து கஜகர்ணமடித்த சாதுர்யங்கள் அடேயப்பா...! இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கும் அத்தனை நெருக்கடிகளும் அன்றும் இருந்தன. ஒற்றை மனிதனாகக் கிழவன் அவற்றைப் பந்தாடிய விதம் என்னை உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது! கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்புப் போல, கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் ஊகம் - இவற்றிற்கு நடுவில் வலுவான ஆதாரங்களோடு இந்த வேங்கைக் கிழவனைத் தாங்கி வருகிறேன். உடன் தொடருங்கள்.
இந்திரா சௌந்தர்ராஜன்
Release date
Ebook: May 18, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International