ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
பஞ்சாப் பிரச்னையைப் பின்னணியாக வைத்து 1984லில் ஒரு இலங்கைத் தமிழர் என்னைக் காணவந்தார். பஞ்சாப் பிரச்னையைப் பாரபட்சமில்லாமல் நியாயமான நோக்குடன் நான் அலசுவதாகப் பாராட்டிவிட்டு, இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பற்றி நீங்கள் ஏன் ஒரு நாவல் எழுதக் கூடாது என்று கேட்டார். எங்கள் பிரச்னை என்ன என்று தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்குக்கூட சரியாகத் தெரிவதில்லை. உங்களால் தான் அதைத் தெளிவாக விளக்க முடியும். லண்டனில் இருக்கும் எனது நண்பர்களும் இதையே தாங்களும் நினைப்பதாக நேற்று டெலிபோனில் சொன்னார்கள். நீங்கள் எழுதுவது எங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும் என்றார்.
மௌனப் புயலை எழுதிய அனுபவத்தில் அரசியல் நாவல் எழுதுவது எத்தனை சிரமம் என்று நான் அப்பொழுது பூரணமாக உணர்ந்திருந்த ஆயாசத்தில் இருந்தேன். இலங்கைப் பரச்னையைப் பற்றியும் எனக்கு சரியாகத் தெரிந்திருக்கவில்லை. என்னால் இயலாத காரியம் அது என்று என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்தேன்.
1985ல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தபோது ஸிட்னியில் இருந்த இலங்கைத் தமிழர்கள் எனக்கு ஒரு வரவேற்பு கொடுத்துத் தங்கள் பரிதாபக் கதைகளைச் சொல்லி நான் அதை நாவல் வடிவமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கொடுத்த தகவல்களைக் கண்டு நான் பதறிப் போனாலும் நாவல் எழுதும் எண்ணம் ஏற்படவில்லை.
ஆனால் உலக நடப்புகளில் ஆர்வமும் மனித உரிமைப் போராட்டத்தில் ஈடுபாடும் கொண்ட எனக்குப் போகப் போக இலங்கைத் தமிழரின் போராட்டத்தைக் கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை. என்னுடைய பொது அறிவுக்காகச் சில விவரங்களைச் சேகரித்து அறிந்து கொண்டேன். ஒருமுறை தெற்கே சென்ற போது தானாக ராமேசுவரத்துக்குச் சென்று அகதிகளைக் காண திட்டமிட்டேன். மதுரை வரை சென்று உடல் சுகமில்லையென்று சென்னை திரும்பியபோது எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கல்கி ஆசிரியர் திரு. ராஜேந்திரன் அவர்கள் என்னைக் காணவந்தார். இலங்கைத் தமிழர் பிரச்னையை வைத்து ஒரு நாவல் எழுத முடியுமா என்றார். முதலில் ராமேசுவரம் சென்று அகதி முகாமைப் பார்த்துவிட்டு வாருங்கள். எழுத முடியும் என்று தோன்றினால் நாவல் எழுதுங்கள். நான் வற்புறுத்தவில்லை என்றார். எனக்கு மலைப்பாக இருந்தது. ஸ்ரீலங்காவையே பார்க்காமல் அங்கு நடக்கும் பிரச்னையைப் பற்றி எப்படி எழுதுவது?
ராமேஸ்வரப் பயணம் என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது சொந்த மண்ணில் நிற்க நிழல் இல்லாமல் ஓடிவந்த அகதிகளின் அரண்ட பார்வைகள் நெஞ்சை உருக்கின. எதேச்சாதிகார அரசினால் வன்முறைக்குத் தள்ளப்பட்டுச் சிதறல்களாக அமைதியை நாடி வந்திருந்த அவர்களது நிலை கண்ணீரை வரவழைத்தது. அங்கு சந்தித்த ஒரு இளம் அகதி என்னுடைய கதாநாயகன் ஜயசீலனாகப் பின்னால் உருவானார்.
இலங்கைக்குச் செல்லாமல் இந்த நாவலை எழுத எனக்கு சம்மதமில்லை. அங்கு செல்ல விசா கிடைக்காது பத்திரிகையாளர் என்கிற காரணத்தால், எதிர்பாராமல் இந்திய இலங்கை ஒப்பந்தம் வந்தது. அதனால் விசா விஷயத்தில் இளக்கம் ஏற்பட்டு என்னால் இலங்கைக்குச் செல்ல முடிந்தது. நாவல் உருவாயிற்று.
கதை எழுதிய நாட்களில் நான் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இலங்கைத் தமிழர் பிரச்னைகளுடன் எப்படி ஒன்றிப் போனேன் என்று விளக்குவது கடினம். பல இலங்கைத் தமிழர்கள் என்னை ஆர்வத்துடன் சந்தித்து வெளியில் வராத எத்தனையோ செய்திகளை எனக்குச் சொன்னார்கள். புத்தகங்கள் கொடுத்தார்கள். ஜேம்ஸ்பாண்ட் நவீனத்தைப் படிப்பது போல் பிரமிப்பூட்டினார்கள். இந்த நாவலை எழுதுவது எத்தனைப் பெரிய சவால் என்று நான் ஒவ்வொரு நாளும் உணர ஆரம்பித்தேன்.
இது யார் சார்பாகவும் எழுதப்பட்ட நாவல் இல்லை மனித நேயத்துக்காக மனித உரிமைக்காகக் குரலெழுப்பும் நோக்கத்துடன் எழுதப்பட்ட நாவல் இது. சரித்திர காரணங்களால் வன்முறைப் போராட்டத்துக்குத் தள்ளப் பட்டவர்கள், மனித நேயத்தை உறுதிப்படுத்த, மனித உரிமைக்காகப் போராட்டத்தைத் துவங்கியவர்கள், நோக்கத்தை மறந்து திசை தப்பிப் போனதைக் கண்ட பதைப்பில் எழுதப்பட்ட நாவல் இது. கையில் ஆயுதம் இருக்கும் தெம்பில் தொலை நோக்கில்லாமல் யாதவ கூட்டத்தைப்போல் உங்களை நீங்களே உணர்ச்சி வசப்பட்டு அழித்துக் கொள்கிறீர்களே என்கிற துக்கத்தான் எழுதப்பட்டது. ஒதுக்கப்பட்ட சிறுபான்மைக் கூட்டத்தில் ஒற்றுமையில்லாவிட்டால் சரித்திரமே அவர்களை ஒதுக்கிவிடுமே என்கிற ஆதங்கத்தில் எழுதப்பட்டது.
இந்த நாவல் அப்போதிருந்த சூழ்நிலைக்கு ஏற்பக் கேள்விக்குறியுடன் நின்றிருக்கிறது. அமைதி என்றாவது வருமா என்கிற சந்தேகத்துடன் நிறைவு பெறாமல் இருக்கிறது. அப்படி முடிக்க நேர்ந்ததற்காக எனக்கு ஏற்பட்ட விசனத்தை விவரிக்க முடியாது.
நிரந்தர போர்க்களமாகத்தான் இலங்கையில் வடகிழக்கு மாகாணம் இருக்கும் என்று சோர்ந்து போன சமயத்தில் சமீபத்தில் அங்கு நடந்த தேர்தலும் அதில் பெருவாரியாகத் தமிழ் மக்கள் பங்குகொண்டு வாக்களித்ததும் நம்பமுடியாத பெரிய இனிய ஆச்சரியமாக இருக்கிறது. பல அச்சுறுத்தல்களுக்கிடையிலும் ஆண்களும் பெண்களும் பெருமளவில் வாக்களித்ததன் மூலம் இப்பொழுது கிடைத்திருக்கும் அரசியல் உரிமைகளின் அடிப்படையில் அமைதியான முறையில் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டிய காலம் இனி என்று வலியுறுத்தி விட்டார்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย