Step into an infinite world of stories
ரொம்ப வருஷங்களாக எனக்குள் ஓர் ஆசை - தலையை மட்டும் வெளியில் நீட்டி பறக்கலாமா என்று யோசனை பண்ணிவிட்டு 'ம்ஹூம் வேண்டாம்' என்கிற தீர்மானத்துடன் மறுபடியும் பொந்துக்குள் தலையை இழுத்துக் கொள்ளும் கிளிக் குஞ்சு போல - ஓர் ஆசை.
ஆனால், சிறகுகள் துளித்துளியாக வளர்ந்து அந்தக் குஞ்சு திடுமென ஒருநாள் அழகான கிளியாகி பறக்க ஆரம்பித்துவிடும் தினுசில்தான், என்னுடைய அடிமனசு ஆசையும், படிப்படியாக உருப்பெற்று இன்று இந்தப் புத்தக வடிவில் வெளிப்பட்டிருக்கிறது.
சின்ன வயசில் வீட்டுக் குழந்தைகள் அத்தனை பேரும் சாயங்காலம் ஆனால் அம்மாவைச் சுற்றி உட்கார்ந்து விடுவோம். கற்சட்டி நிறைய வத்தல் குழம்பு, தயிர் சாதங்களைப் பிசைந்து வைத்துக் கொண்டு அம்மாவும் தினமும் ஒரு புதுக் கதையைச் சொல்லிக் கொண்டே நாங்கள் நீட்டும் கையில் சாதத்தை உருட்டிப் போடுவார். சட்டி சாதம் உள்ளே போவது கூட தெரியாது. கதை அத்தனை ஸ்வாரஸ்யமாக இருக்கும். எலிப்பெண் கதையைச் சொல்லும்போது உதடுகளைக் குவித்து எலி கத்துகிற மாதிரி 'ப்ச் ப்ச்' என்று ஓசைப்படுத்திக் கொண்டே கதையை விவரிப்பார். அம்மாவின் சாமர்த்தியமான வர்ணனையில் ராஜகுமாரியின் அழகும், காடுகளின் அடர்த்தியும், புலியின் கொடூரமும் கண்முன் தத்ரூபமாய் நிற்கும். கதைக் கதாபாத்திரங்கள் அழுதால் நாங்களும் அழுது, சிரித்தால் சிரித்து, அவர்களுக்குக் கடவுள் வரம் கொடுத்தால் எங்களுக்கே தந்த மாதிரி கையைத்தட்டி பரவசப்பட்ட அற்புதமான நாட்கள் அவை!
அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் இன்றைய குழந்தைகளுக்குக் கிடைக்கின்றனவா என்கிற கேள்வி என்னுள் எழுந்தபோது, இல்லை, நிச்சயமாய் இல்லை என்ற பதில் கிட்ட, அப்போதுதான் இது குறித்து நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அதன் விளைவு, 'அம்மா சொன்ன கதைகள்' என்ற 'பேசும் கதைப் புத்தகம்'.
இந்தக் கால குழந்தைகள் வாழ்க்கை, எங்கள் இளமைப்பிராய சூழலிலிருந்து அதிகம் மாறிவிட்டது. கூட்டுக் குடும்பங்கள் மறைந்து, தனிக் குடித்தனங்கள் தோன்றி விட்டதில் பல வீடுகளில் தாத்தா, பாட்டி, அத்தை போன்ற பெரியவர்களின் அன்பும், அரவணைப்பும் கிட்டாமலேயே குழந்தைகள் வளர்கிறார்கள். பொதுவாக இன்றைய தாய்களுக்குக் கதைகள் தெரிவதில்லை. தெரிந்தாலும் நேர்த்தியாகச் சொல்ல வருவதில்லை. அப்படியே சொல்ல வந்தாலும் பல அம்மாக்கள் வேலைக்குப் போகத் துவங்கி விட்டதில் குழந்தையை அருகில் உட்கார வைத்துக் கதை சொல்லி சீராட்ட, வாழ்க்கையின் மதிப்புகளை எடுத்துச் சொல்ல அவகாசம் கிட்டுவதில்லை - இதுதான் இன்றைக்கு நாம் பல இல்லங்களில் கண்முன் பார்க்கும் நிலை.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா என்று சிந்தித்தபோது 'பேசும் கதைப் புத்தகம்' இதற்கு ஒரு வழி என்பது புரிந்தது.
கதை சொல்லும் நம் பாரம்பரியத்தை மீண்டும் பிரபலமாக்கவும், 'என் சின்ன வயசின் இனிமையான அனுபவங்கள் என் குழந்தைக்குக் கிட்டவில்லையே' என்று பெற்றோர் ஏங்குவதையும் ஓரளவுக்காவது குறைக்க, இந்தப் 'பேசும் கதைப் புத்தகம்' ஒரு தீர்வாக இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
அம்மா சொன்ன கதைகளில் ஒன்றிரண்டில் ஆங்கிலக் கதைகளின் சாயல் இருப்பதை உணர்ந்த பிறகு என் அம்மாவிடம் பிற்காலத்தில் 'இந்தக் கதைகளை உனக்குச் சொன்னது யார் அம்மா?' என்று கேட்டிருக்கிறேன். 'சில கதைகளை நானே இட்டுக் கட்டிச் சொன்னேன்; சில கதைகள் என் அம்மாவும் பாட்டியும் எனக்குச் சொன்னவை' என்றார்.
என் அம்மாவே அதிகம் படிக்காதவர். அவருடைய தாயும், பாட்டியும் பள்ளிக்கூடத்தின் நிழலில்கூட ஒதுங்கி நிற்காதவர்கள். அப்படியிருக்க, ஆங்கிலக் கதையைப் படித்து அவற்றைத் தமிழாக்கம் செய்து கதையாகச் சொல்லியிருப்பார்கள் என்பதை கற்பனை பண்ணிப் பார்ப்பது கூட சிரமமாக இருக்கிறது. அப்புறம் சாயல் எப்படி வந்தது? ஒரே மாதிரியான எண்ணங்கள் மேற்கு, கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ளன என்பதுதான் சரியான கணிப்போ? சிந்திக்க வேண்டும்.
சின்ன வயசில் உடம்புக்கு முடியாத நாட்களில் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, 'குட்டிக் கதை வேண்டாம் - பெரீய்ய கதை வேண்டும்' என்று நான் அடம் பிடித்ததும், மணிக்கணக்கில் அம்மா முகம் சுளிக்காமல் கதைகளை இட்டுக் கட்டி சொன்னதும் இப்போது என் ஞாபகத்திற்கு வருகின்றன. அம்மாவுக்கு அந்தக் காலத்தில் எழுத வாய்ப்பு கிட்டவில்லை; அவரிடமிருந்து ஜீவ அணுக்கள் மூலம் அந்த கற்பனா சக்தி எனக்கு வந்திருப்பதோடு, வாய்ப்புகளும் கிடைத்ததில் இன்று நான் எழுத்தாளராக இருக்கிறேன். ஆக, இந்தத் திறமை எனக்கு அம்மா தந்த வரம். ஆசீர்வாதம். இதற்காக அம்மாவையும், இப்படி ஒரு அம்மாவைத் தந்ததற்காகக் கடவுளையும் கைகூப்பி மனம் நெகிழ்ந்து நமஸ்கரிக்கிறேன்.
'பேசும் கதைப் புத்தகம்' ஒரு கூட்டு முயற்சி, என்னைப் பொறுத்தவரை இது ஒரு ஊர் கூடி தேர் இழுக்கும் முயற்சிதான்.
புத்தகத்தின் கதைகள் இலக்கணத் தமிழிலும், ஒலி நாடாவில் பேச்சு வழக்கிலும் அமைவது நன்றாக இருக்கும் என்று பலரும் விரும்பியதால், அவ்விதமாகவே 'அம்மா சொன்ன கதைகள்' உருவாகியுள்ளன.
ஒவ்வொருவரின் வீட்டுக்கும், ஒரு அம்மாவாக வந்து உங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்ல இப்புத்தகத்தின் மூலம் வாய்ப்புக் கிட்டியது எனக்கு ஈடு இணையில்லா நிறைவைத் தருகிறது.
- சிவசங்கரி
Release date
Audiobook: September 24, 2020
Tags
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International