Step into an infinite world of stories
Fiction
சுதாகரும், குமாரும் ஒருவர்மேல் ஒருவர் கையைப் போட்டுக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தனர். அந்தப் பிணைப்பை பாசம் என்று கூறமுடியாது. தூக்கத்தில் ஒருவரை ஒருவர் தலையணை எனத் தவறாக நினைத்துக்கொண்டதுதான். அவர்கள் படுத்திருந்த கோலத்தைப் பார்க்க முழுமதிக்குச் சிரிப்பு வந்தது. சிறுவர்களைப் போல் உறங்கும் அவர்களைத் தட்டி எழுப்பினாள். “சுதாகர்... எழுந்திரு... எழுந்திரு. குமார்... ஏய்...” இருவரையும் உலுக்க இருவரும் எழுந்தனர். கண்மலர்ந்த அவர்கள், ஏதோ புது உலகத்திற்கு வந்ததைப் போல் திருதிருவென விழித்தனர். சுதாகர், அவசரமாக லுங்கியைச் சரிசெய்து கொண்டு எழுந்தான். “மணி என்ன?” “ஆறரை.” “இன்னைக்கு இன்டர்வியூவுக்குப் போகணும். சீக்கிரம் எழுப்புன்னு ராத்திரியே சொல்லிட்டுத்தானே படுத்தேன்.” “மறந்துட்டேன்” - முழுமதி மன்னிப்புக் கேட்டாள். “ஆமா. உனக்கென்ன? பொழுது விடிஞ்சதுமேவா இன்டர்வியூ நடத்தறாங்க” - கேட்ட தம்பியை முறைத்தான். “பொழுது விடிஞ்சதுமே திமிர் பேச்சு பேசாதே. நான் சில விஷயங்களை தயார் பண்ணனும்.” “ஆமா! அப்படியே தயார் பண்ணிக்கிட்டு போய் எல்லாக் கேள்விக்கும் டாண் டாண்னு பதில் சொல்லி வேலையை வாங்கிட்டு வந்திடுவே பாரு...பெரிதாகச் சிரித்தான், குமார். “அடுத்தவங்களைக் கிண்டல் பண்ணுவதை விட்டுட்டு ஆகவேண்டியதைக் கவனி. கல்லூரியில் ஆறு, ஏழு பாடங்களை ‘பாஸ்’ ஆகாமல் வைச்சுக்கிட்டு பேச்சைப் பாரு” எரிச்சலாகத் திட்டிவிட்டு வெளியே சென்றான், சுதாகர். “என்ன கூழ் வைச்சிட்டியா?” என்றான் குமார். “வைச்சிருக்கேன். கொண்டுவரட்டா?” “இப்ப வேண்டாம். பிறகு குடிக்கிறேன்” என எழுந்தான். முழுமதி வெளியே வந்தாள். கனிமொழிக்குப் பால் ஆற்றிக் கொடுத்துவிட்டு சீதாவின் அறைக்கு அனுப்பினாள். முகம் கழுவிக்கொண்டு துண்டால் துடைத்தபடியே வந்த சுதாகருக்குக் காபி கொடுத்தாள். “இதென்ன... காபியில் சர்க்கரையே இல்லை...” கத்தினான் சுதாகர். “சர்க்கரை பத்தலைன்னா ஏன்டா இப்படி கத்துறே? கொஞ்சம் இரு. போடுறேன்.” “கத்துறேனா? இந்த ஒரு தம்ளர் காபியில்தான் இன்றைய உற்சாகமே அடங்கியிருக்கு, தெரிஞ்சுக்க. காலையில் எழுந்ததும் முதன்முதலா குடிக்கிற காபியினால் உண்டாகிற உற்சாகம், திருப்திதான் பொழுது சாயிறவரை சாதிக்க வைக்கும். இப்படி சப்புன்னு ஒரு காபியைக் குடிச்சா, காலையிலேயே எல்லா வேலையுமே பாழ்தான்” சலித்துக்கொண்டான். “அப்படின்னா இந்த ஒரு தம்ளர் காபியில்தான் உன் எதிர்காலமே அடங்கியிருக்கா?” -’க்ளுக்’கென சிரித்துவிட்டாள், முழுமதி. “எதையும் ஒழுங்கா செய்யத் தெரியலை. சிரிப்பு என்ன வேண்டிக்கிடக்கு?” சுள்ளென அவன் எரிந்து விழ, ஏனோ துடித்துப் போனாள், முழுமதி.
© 2024 Pocket Books (Ebook): 6610000533176
Release date
Ebook: 14 February 2024
English
India