Step into an infinite world of stories
Short stories
குழந்தைகள் கற்பனை உலகில் வாழ்பவர்கள் அவர்களுடைய இலக்கியம் மனமகிழ்ச்சிதான். மனித இயலுக்கு மீறிய வலிமை உடைய, பீமன், அனுமன் ஆகியோர் பற்றிய கதைகளில் அவர்கள் உற்சாகம் அடைகிறார்கள். அறிவியல் புதுமைகளும் விழிப்புணர்வும் மேம்பட்டிருக்கிற இந்தக் காலத்திலும் 'ஹாரிபாட்டர்' புத்தகங்களும், திரைப்படங்களும் வெற்றி பெற்று வருவதற்கு இதுதான் காரணம்.
குழந்தைகளிடத்தில் அறிவியலைத் திணிப்பதை நான் வரவேற்கவில்லை. தேவையான நேரத்தில் அதைத் தெரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களிடம் உண்டு.
"குழந்தைகளே... ஆகாய விமானம் என்று சொல்லக்கூடாது. அதைப் பறவைக்கப்பல் என்று சொல்லுங்கள்" எனப் புலவர் தணிகை உலகநாதன் ஒரு மாணவர் கூட்டத்தில் பேசினார். “கப்பல் எப்படி ஆகாயத்தில் பறக்கும்?” என்று ஒரு மாணவன் எழுந்து கேட்டான்.
"சரி. சரி. உங்களுக்கு இந்த வயதில் அது தெரியாது" என்றார் தணிகை உலகநாதன். உண்மைதான். தேவையான நேரத்தில் அது நல்ல தமிழ்ச்சொல் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மகாகவி பாரதியார் ‘கற்பனையூர்' என்ற மொழி பெயர்ப்புக் கவிதையில்,
‘குழந்தைகள் ஆட்டத்தின் கனவையெல்லாம் – அந்தக்
கோல நன்னாட்டிடைக் காண்பீரே.’
என்று பாடியுள்ளார். அவர்களது அரசாங்கம் கற்பனையும் மகிழ்ச்சியும் நிறைந்தது.
இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்ட கவிஞர் உமையவன், அருமையான கற்பனை மூலம் இந்த நூல் முழுதும் கொடிகட்டிப் பறந்திருக்கிறார். அனைத்துக் கதைகளையும் குழந்தைகள் விரும்புவார்கள். நல்ல படங்களுடன் இந்நூல் வெளிவரவேண்டும், என்பது என் விரும்பம்.
சுட்டி எலி (சுண்டெலி) பற்றி ஒரு கதை. தேர்ந்த சிறுகதையாசிரியரைப் போல அருமையான திருப்பத்துடன் கதையை முடித்திருக்கிறார்.
தின்பண்டங்கள் உள்ள ஜாடி திறந்திருக்கிறது. சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்த எலிகள் ஜாடிக்குள் சென்று ஒரு கை பார்க்கின்றன. ஜாடி மூடப்படும்போது சுட்டி எலி தவிர மற்றவை தப்பி விடுகின்றன.
(அடடா... நம் எலி உலகில் நண்பர்களைக் காண முடியாமல் அகப்பட்டுக் கொண்டோமே) என சுட்டி எலி வருந்துகிறது.
இங்கே ஒரு திருப்பம்.
வீட்டுக்காரர் வீடு மாற்றுகிறார். சாமான்களுடன் ஜாடியும் செல்கிறது. சுட்டி எலியின் மனம் என்ன பாடுபடும் என்று நினைத்துப் பாருங்கள்.
இங்கே மறுபடியும் ஒரு திருப்பம்.
வண்டி நிற்கிறது.
'தப்பித்தோம்' என்று சுட்டெலி மகிழ்கிறது. பழைய வீட்டுக்காரர் ஜாடியைத் திறந்தார்
சுட்டெலி வெளியே குதித்து, தன் கூட்டத்தாருடன் சேர்ந்து கொண்டது.
இந்த ஒரு கதை பெரிய பெரிய படங்களுடன் பலமொழிகளில் வெளிவந்தால் உமையவன் சர்வதேச எழுத்தாளர் ஆகிவிடுவார்.
என்னுடைய கவிதைகளைப் போலவே, அணிந்துரையும் சுருக்கமானது.
குழந்தைகளே! படித்து மகிழுங்கள். பெரியவர்களே..... கொஞ்சநேரம் குழந்தைகளாக மாறுங்கள்.
அன்புடன்
கவிமாமணி இளையவன்
Release date
Ebook: 2 July 2020
English
India