Step into an infinite world of stories
இந்தப் புத்தகத்தில் உள்ள நாவல் மாத நாவல்களாய் நான் எழுதியவை.
மாத நாவல்களை ஒரு உதிர்ந்து விழும் இலைச் சருகு போல சிலர் நினைத்துக் கொண்டிருக்க, பலரோ அவ்வளவும் தங்க இலைகள் என்பது போல அதன் மேல் ஒருவித பிரமையோடு இருப்பதைப் பார்த்தேன்.
குறிப்பாக எனது மாத நாவல்கள் சமீப காலத்தில் வாசகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவது எனக்கு மிகுந்த ஆச்சரியம் தருகிறது. சமீப நாட்களில், அதுவும் டிவி தனது ஆதிக்கத்தில் தமிழ் மக்களை தன் வசப்படுத்தியுள்ள இந்த சமயத்தில், படிக்கின்ற பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து முற்றிலும் அழிந்து ஒழிந்துகூடப் போய்விடும் என்றுகூட நான் சில சமயம் நினைத்ததுண்டு.
ஆனால் என்னுடைய அந்தக் கருத்து தவறானது என்பதை எனது நாவல்களுக்கான வரவேற்பில் உணர்ந்து கொண்டேன்.
என் பெயர் ரங்கநாயகி, கிருஷ்ண தாசி, ஆகாயம் காணாத நட்சத்திரம், ஆசை ஊஞ்சல், ஆசை நெசவு போல பல குடும்ப நாவல்கள் எழுதி அவை தொலைக் காட்சியில் சக்கைப் போடு போட்ட நிலையிலும் ஒரு அமானுஷ்ய எழுத்தாளன் என்கிற நிலையில் என்னைப் பார்ப்பவர்களே அதிகமாக உள்ளனர். எனவே எனது மாத நாவல்களில் அந்தப் பாட்டையில் என்னைப் பயணிக்க அவர்களும் வற்புறுத்துகின்றனர்.
அமானுஷ்யம் என்பது குடும்பம், மர்மம், நகைச்சுவை போல ஒரு தனிப் பிரிவான விஷயம். ரா.கி. ரங்கராஜன், சுஜாதா போன்றவர்கள் அவ்வப்போது இதில் மூக்கை நுழைத்தது உண்டு. விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத இந்த அம்சத்தை சர்வ ஜாக்கிரதையாகக் கையாண்டால் எழுத்தாளர் பெரிதும் பாராட்டப்படுவார். அதில் கொஞ்சம் பிசகினாலும் அந்த எழுத்தாளர் மலிவாகத்தான் பார்க்கப்படுவார்.
எனவே இந்த அம்சத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்பட பலரும் மிகவும் யோசிக்கிறார்கள்.
அடுத்து அமானுஷ்யம் என்றாலே அது நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயம் என்றாகி விட்டது. படிப்பதற்கு சுவையான, அதேசமயம் அறிவுக்கு ஒவ்வாததாக, நம்புவதற்குக் கடினமானதாகவும் இருப்பதால் இந்த அமானுஷ்யம் என்கிற புலியை வேட்டையாட அதிக சிரமப்பட வேண்டியும் உள்ளது.
இந்த சிரமத்தை நான் மாதாமாதம் பட்டாக வேண்டிய ஒரு நிலை. காரணம் வாசக ஆதரவு! நல்ல வேளை... நான் இம்மட்டில் மலிவாகப் பார்க்கப் படவில்லை. மதிப்பாகவே பார்க்கப்படுகிறேன்.
வாராவாரம் எல்லாக் கோயில்களிலும் இருந்து எனக்காக அர்ச்சிக்கப்பட்டு பிரசாதங்களை எனது வாசகர்கள் அனுப்பும்போதும், நாவல் வரத் தாமதமானால் போன் செய்து விசாரிக்கும் போதும் அவர்கள் வாழ்க்கையில் குழப்பம் நேரிடும்போது, என்னை ஒரு பேரறிஞனாகக் கருதி அவர்கள் ஆலோசனை கேட்கும் போதும் அந்த உண்மையை நான் புரிந்து கொள்கிறேன்.
நானும் இந்த அமானுஷ்யத்தை சாதாரணமாக அணுகுவதில்லை. கடைந்தெடுத்த நாத்திகப் பார்வையோடு தான் அணுகுகிறேன். சில சமயம் என் தனிப்பட்ட நம்பிக்கைகள் இந்த நாத்திக அணுகுமுறையைப் புறம் தள்ளிவிட்டு முன்னே பாய்ந்துவிடும் விபத்தை மட்டும் தவிர்க்க முடியவில்லை. ஒன்று நிச்சயம்.
இந்த வகை நாவல்கள் நிச்சயம் பெரிய அளவில் யோசிக்க வைக்கின்றன. நம்புகின்றவர்கள் 'ஆஹா என்ன ஒரு அற்புதமான கருத்து இது' என்று நெகிழ்வுடனும் நம்ப முடியாதவர்கள் 'இப்படியெல்லாமா மூடத்தனமாக சிந்திப்பது?' என்று கோபத்துடனும் தாக்கங்களுக்கு உள்ளாகிறார்கள். 'படித்தோம் தூக்கிப் போட்டோம் மறந்தோம்' என்கிற ரகத்தைச் சாராத இந்த வகை கதைகள் ஒரு விஷயத்தைக் கட்டாயம் செய்கின்றன. அது 'கேள்விகள் கேட்பது' என்கிற ஒன்றாகும். மாயமான மலையும் அந்த ரகத்தில் நிறைய கேள்விகளை எழுப்பும். எழுப்பட்டும்.
அன்புடன்
இந்திரா செளந்தர்ராஜன்
Release date
Ebook: 11 December 2019
English
India