Step into an infinite world of stories
வேண்டும் ஒரு பேய் மழை
எப்போதேனும் வழி தவறி வந்து போகிற ஒற்றை மழையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது எனது மண். அதன் மடியில் சுரக்கும் ஒற்றை ஊற்றுக்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாங்கள்.
பாலாறும், பொன்னை ஆறும் நுரைத்தோடிய எங்கள் மாவட்டம், இன்று கருத்த பாம்புகளைப் போல நெளிந்து நெளிந்து ஓடும் தோல் கழிவு நீரின் முகம் பார்த்து முகம் பார்த்து மூச்சுத் திணறி கிடக்கிறது.
மாளாத தாகத்தோடு தவித்த எமது பாட்டன்களைப்போல இருபுறமும் கைகளை விரித்து மல்லாந்து படுத்துக் கிடக்கிறது பொன்னை ஆறும், அணைக்கட்டும். ஆந்திர மாநிலத்தின் வஞ்சனையால் எங்களைப் போலவே செயலற்றுக் கிடக்கிறது எங்களது ஆறும். இதன் கரையில் செழித்திருந்த எமது ஊரின் இளசுகள் இன்று ஏர் கலப்பைகளின் வாசம் அற்று, காதில் இடுக்கிய கைப்பேசிகளோடு பக்கவாதக்காரர்களைப் போல கழுத்தைக் கோணிக் கொண்டு வாகனங்களில் பறக்கிறார்கள் இரும்புத் தொழிற்சாலைகளையும், ரசாயணத் தொழிலகங்களையும் நோக்கி.
இந்த மண்ணில் பிறந்தாலும் இதனோடு ஒட்டவும் முடியாமல், விலகவும் ஒப்பாமல் ஓடுகிறது எனது நாட்கள்.
எனது இடுக்கி சிறுகதைத் தொகுப்புக்குப் பிறகும், அதன் தொடர்ச்சியான சில நிகழ்வுகளுக்குப் பின்னரும், மேடு பள்ளங்களையெல்லாம் சமமாக்கி விடுகிற ஒரு பெரு மழையைப்போல எழுதிக் குவித்துவிடவேண்டும் என்கிற என் எண்ணங்கள் எங்கள் மண்ணை நெருங்கும் மழையைப் போலவே மாறிவிடுகிறது. என்றாலும் என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கும் சில பெருமழை மனசுகள் என்னை ஈரப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
வெயிலுக்கும், வறட்சிக்கும் பெயர் பெற்றிருந்தாலும் எனது மண் அதன் ஈரத்தை இன்னும் இழக்கவில்லை. காய்ந்த பூமியிலும் நீரைத் தேடித் தேடி சேமித்து வைத்திருக்கிற தண்ணீர் முட்டான் கிழங்குகளைப் போல வாஞ்சையை சேமித்து வைத்திருக்கிறார்கள் எனது மனிதர்களும்.
நா மணக்க, காதினிக்கப் பேசும் பிற வட்டாரத் தமிழுக்கு இணையாக மணக்கிறது எங்கள் தமிழும். வந்து கொண்டு இருக்கிறாயா என்பதை "வந்துகினு கீறியா' என்றும், தின்று விட்டாயா என்பதை 'துண்டியா' என்றும் சுறுக்கெழுத்தைப்போல சுறுக்குத்தமிழ் பேசிய எம் மக்களின் அவசரம் மற்றவர்களுக்குக் கேலியாகக் கூட இருக்கலாம்.
வற்றாத நதிப் பாசனங்களுக்கு வக்கற்றுப் போனதால், மாடு பூட்டி கவலை இரைப்பும், புகை கக்கும் ஆயில் இன்ஜின் பாசனுமுமாய் அல்லாடிய எம் மக்கள், கேழ்வரகு, கம்பு வரப்புகளுக்குள் ஓடி ஓடி மடை திருப்புகிறபோது பயிர் மறைப்பில் இருப்பவரைப் பார்த்து கேட்க முடியுமா? “எங்கே இருக்கிறாய் என்கிற முழுமையான வார்த்தைகளை? "எங்க கீற? தானே வரும்.
எனவே எனது கதை மனிதர்களும் இதையேதான் பேசுகிறார்கள். இந்த வேகமான வார்த்தைகள் வேகமான வாசிப்புக்குத் தடையாகக் கூட இருக்கலாம். வேறு வழியில்லை நண்பர்களே. மனிதர்களின் வாழ்க்கை அவர்களது மொழிகளில் தானே வாழ்கிறது.
மேகம் சுரக்கிறபோது பெய்துவிடும் மழையைப் போல, மனசு கனக்கிறபோது எழுதிவிடுகிற என்னால், அவற்றை இதழ்களுக்கு அனுப்பி வைக்கிற முனைப்பை காட்ட முடிவதில்லை. நண்பர்கள் புல்வெளி செ.காமராசன், கம்பீரன், மு.முருகேஷ் ஆகியோரின் முயற்சியால் இத்தொகுப்பில் உள்ள கதைகள் வெவ்வேறு இதழ்களில் அச்சாகி உள்ளன.
அவர்களுக்கும், இதழ் ஆசிரியர்களுக்கும், இந்த தொகுப்பை அழகு மிளிர வெளியிட்ட பாரதி புத்தகாலயம் நிறுவனத்திற்கும், தட்டச்சு செய்த கோ.பழனி மற்றும் அச்சக நண்பர்களுக்கும் ஈரமான நன்றிகள்.
எனது நிறைகளோடும், குறைகளோடும் என்னை அமைதியாய் ஆமோதிக்கிற துணைவி தே.மஞ்சுளா, எப்போதும் புதுப்புது வாசல்களைத் திறந்து விடுகிற எனது குழந்தைகள் ஓவியா, சிந்து, நிலவழகன், எனது பெற்றோர் மு.கண்ணன், சக்கரவேணியம்மாள், உடன் பிறந்தோர் க.நரசிம்மன், க.வேணுகோபால், க.சுந்தரமூர்த்தி, க.கோமதி, க.ஜானகி ஆகியோருக்கும் நன்றி சொல்வது ஒரு பூ மலர்வதைப்போன்ற மகிழ்வை உண்டாக்கலாம்.
இந்தத் தொகுப்பைப் படித்துவிட்டு உங்களுக்குள் தோன்றும் எதை வேண்டுமானாலும் எழுதி அனுப்புங்கள். தாகம் எடுத்த மண் உப்பு நீரையும் குடிக்கும், கழிவு நீரையும் குடிக்கும், மினரல் வாட்டரையும் குடிக்கும். தாகத்தோடு காத்திருக்கிறேன். நன்றி!
பிரியங்களுடன்
கவிப்பித்தன்
Release date
Ebook: 18 December 2019
English
India