Step into an infinite world of stories
Religion & Spirituality
யாரோ தட்டி எழுப்பியது போல் உணர்ந்து கண் விழித்தேன். கும்மிருட்டு. தட்டுத்தடுமாறி தலையணையருகே வைத்திருந்த கைபேசியில் மணி பார்த்தேன். இளம் காலை நேரம் 3.26. என்னைச் சுற்றி 'ஹர... ஹர சங்கர ஜெயஜெய சங்கர முழக்கம் ஒலிப்பதுபோல் உணர்ந்து எழுந்து உட்கார்ந்து கொண்டேன். என் படுக்கையறையில்தான் இருக்கிறேன். ஆனால் காஞ்சிபுரத்தில் ஸ்ரீமடத்தில் விஸ்வரூப தரிசனத்திற்கு காத்திருப்பது போல் உணர்ந்தேன். ஸ்ரீமடத்தில் பாவாடைச் சட்டையில் நானும், என் விரல்களைப் பிடித்துக் கொண்டு என் தந்தை வழிப் பாட்டியுமான (புதுக்கோட்டை பஜனை வாலாம்பாள்) நின்று கொண்டிருக்கிறோம். விஸ்வரூப தரிசனத்துக்குக் காத்திருக்கிறார்கள். பாட்டி திடீரென்று என்னை இழுத்துக் கொண்டு ஸ்ரீமடத்தின் பின்புறம் ஓடுகிறாள். அங்கேயும் பக்தர்கள் கூட்டம். தூரத்து மூலையில் மூங்கில் கட்டில் ஒன்று சார்த்தப்பட்டிருக்கிறது. அதற்குள்ளிருந்து பெரியவா எழுந்து நின்று தரிசனம் தரப் போவதாகவும் சொன்னாள். 'ஹரஹர சங்கரா சொல்லு என்று கட்டளையிட்டாள். முதலில் பெரியவா பிடித்திருக்கும் தண்டம் கண்களில் பட, பக்தர்களின் கோஷம் ஓங்கி ஒலித்தது. கொஞ்சம் கொஞ்சமாக மஹா பெரியவாளின் திவ்ய சரீர தரிசனம் கிடைக்க பக்தர்கள் மெய்மறந்து, பெரும் குரலில் ஹர.. ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.. என்று கோஷமிடுகிறார்கள்.
அடுத்தடுத்து காட்சிகள் குழப்பமாகத் தெரிய, நான் என் படுக்கையிலேயே உட்கார்ந்து கொண்டு, என் ஹ்ருதயத்திற்குள் என்ன தெரிகிறது என்று தெரிந்து கொள்ள முயற்சித்தேன். 'ஜனவரி மாத அனுஷ நட்சத்திரத்துக்குள்ள எழுதிடு' என்று பெரியவா என்னிடம் சொல்வது மிக நன்றாகக் கேட்கிறது. மனசு.... ரொம்பப் பரபரப்பாய், மேலும் கூடிய வேகத்துடன் ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர கோஷம் போடுகிறது. எனக்கு அதற்கு மேல் படுக்கை கொள்ளவில்லை. எழுந்து, சுத்தம் செய்து கொண்டு என் வீட்டுக் கூடத்திற்கு வந்தேன்.
அந்த தினம் நவராத்ரியின் இரண்டாம் நாள். (17.10.2012) அதிகாலை என்பதைத் தெரிந்து கொண்டேன். கூடத்தில் கொலு வைக்கப்பட்டிருந்தது. அந்த கொலுவில் 24.9.12. அன்று காஞ்சி ஸ்ரீமடத்தில் பிருந்தாவனத்தில் மஹா பெரியவாளை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும்போது அங்கிருந்தே பெற்றுக் கொண்டு வந்த மஹா பெரியவாளின் திருவுருவமும் வைக்கப்பட்டிருந்தது. அவரைப் பார்த்ததும் தான், நேற்று இரவு, நமஸ்கரித்துவிட்டு “என்ன பெரியவா, எவ்வளவு நாளா நானும் கெஞ்சிக் கெஞ்சிக் கேக்கறேன். உத்தரவு கொடுக்க மாட்டேங்கறேளே..ன்னு வருத்தப்பட்டுக் கொண்டது நினைவுக்கு வந்தது. “பெரியவா உத்தரவு கொடுத்துட்டார். என்னால இப்ப நம்ப முடியலை. நிஜமாவா? நிஜமாவா?னு என்னை நானே கேட்டு கேட்டு பிரமிச்சு நிக்கறேன். எனக்கு மனசுல ஒரு தெளிவு பிறந்தது. .
இரண்டு வருஷங்களாய் மஹா பெரியவா பத்தி நானும் ஒரு புத்தகம் எழுதணுங்கிற பேராசை என்னைத் தீவிரமாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. ஆசை தான் இருக்கே தவிர அதற்கான தைரியம் வரவில்லை. நிறையப் படிக்க ஆரம்பித்தேன். ஸ்ரீ மடத்துக்குப் போய் போய் பிருந்தாவனத்தில், சுவாமிகளை வேண்டிக் கொண்டேன். "எனக்கு உத்தரவு கொடுங்கோ. யார் மூலமாவது உங்க சம்மதத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கோ”ன்னு வேண்டிக் கொண்டேன். மஹாசுவாமிகளைப் பற்றி எத்தனையோ பெரியோர்கள், சான்றோர்கள், பரம பக்தர்கள், ஞான பண்டிதர்கள் நிறைய... நிறைய எழுதியிருக்கிறார்கள். நான் என்ன புதியதாக எழுதிவிட முடியும்னு எனக்குப் புரியத்தான் இல்லை . ஆனால் மஹா பெரியவா.. மஹா சாஹரம். அதுல எனக்குன்னு ஒரு துளி கிடைக்காமலா போய்விடும்? அதுவும் 'ஜனவரி அனுஷத்துக்குள்ள எழுது'ன்னு பெரியவாளே உத்தரவு கொடுத்தப்புறம்.. என்னை எழுத வைக்கிறதும், எழுத்தாகவும் பொருளாகவும் வந்து நிறைந்து நிற்பதும் அவரின் கருணையினால்தானே! என்கிற ஊக்கம் பிறந்து எழுதத் தொடங்கினேன்.
இதோ இப்ப எழுதிண்டிருக்கிற வெள்ளை நிறப் பேனா கண்ணில் பட்டது. அதுல ஸ்ரீ சிருங்கேரி பாரதி தீர்த்தப் பெரியவாளோட திருவுருவம் இருக்கு. இந்தப் பேனா சில தினங்களுக்கு முன் கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் அவர்கள் சில எழுத்தாளர்களுடன் என்னையும் அழைத்து ஸ்ரீ சிருங்கேரி பெரியவாளிடம் அறிமுகம் செய்து வைத்தபோது, ஸ்வாமிகள் ஆசீர்வதித்து வழங்கிய பேனா அது! என்ன பொருத்தம் பாருங்களேன். எது எது, எப்படி எப்படி, எப்போது நடக்கணுமோ அப்படித்தானே நடக்கும்! மஹா சுவாமிகளைப் பற்றி எழுதுவது என்று சங்கல்பம் செய்து கொண்டு எழுத ஆரம்பித்து விட்டேன். இனி இந்தப் பேனாவாச்சு... மஹா பெரியவாளாச்சு! என் மனசும் என் கையும் வெறும் இயந்திரம்தான். என்ன எழுதப் போகிறேனோ அது எனக்கும் புதியது. மஹா பெரியவாளோட பக்த கோடிகளில் ஒருத்தியாக நானும் படித்துப் பரவசப்படக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
- டாக்டர். ஸ்ரீமதி ஷ்யாமா சுவாமிநாதன்
Release date
Ebook: 3 January 2020
English
India