Step into an infinite world of stories
Short stories
நான் நிறைய புத்தகங்கள் படிப்பது வழக்கம். வயதாகி வேலை எதுவும் செய்யாமல் ஓய்ந்து உட்கார்ந்த போது பொழுதுபோகாமல் கஷ்டப்படுவேன். அப்போது என் பெண் கிரிஜா ஏதாவது எழுதிப் பாரேன் என்று அடிக்கடி சொல்வாள். கிரிஜா எனக்கு பெண் மாத்திரம் இல்லை. எனக்கு தைரியம் கொடுக்கும் உற்ற தோழி. எனக்கு மனது கவலையாக இருக்கும் போது தைரியம் சொல்வாள். அவளுடைய தூண்டுதலின் பேரில் எழுத ஆரம்பித்தேன். எழுத எழுத ஆர்வம் அதிகமாகி மேலே மேலே எழுத ஆரம்பித்தேன். விதவிதமான கற்பனைகள், விதவிதமான எண்ணங்கள். கதைகள் வளர ஆரம்பித்தன.
என் பால பருவம் குறுகிய கிராமங்களில் தான். அதனால் எனக்கு கிராமங்களைப் பிடிக்கும். என் கதைகள் கிராமங்களைச் சுற்றியே இருக்கும். எனக்கு மூன்று குழந்தைகள். மூன்று பேரின் வீட்டிலும் நானும் என் கணவரும் மாறி மாறி இருப்போம். அங்கு இருக்கும் சமயத்தில் அங்கேயே எழுதுவேன். இருக்கும் இடத்துக்கும் கதைகளுக்கும் சம்பந்தம் இருக்காது. ஆனால் எழுதிக் கொண்டேயிருப்பேன்.
இந்தக் கதைகளெல்லாம் நாலைந்து வருடங்களுக்கு முன்பு எழுதியது. அப்போது மனதில் தைரியம் இருந்தது. நிறைய எழுதினேன். இப்போது இன்னும் எழுத ஆர்வம். எழுதத்தான் முடியவில்லை. கைகள், கண் பார்வை இடம் கொடுக்கவில்லை.
சின்ன வயதில் எனது கிராமத்தில் என் தோழர்கள், அக்கம்பக்கத்து வீட்டில் உள்ள கோழிகள், ஆட்டுக் குட்டிகள், துள்ளி ஓடும் கன்று குட்டிகள் இவைதான். மனசு பூராவும் சந்தோஷம். எனக்கு அவைகள் தான் பொழுதுபோக்கு. அழகாக துள்ளி ஓடும் ஆட்டுக்குட்டி வெகு அழகு. கிராமத்தில் தான் இந்த அழகு. நகரத்தில் கிடைக்காது.
அந்த நாளில் ஸ்கூட்டர் கிடையாது. சைக்கிள்தான். அதுவும் நிறைய இருக்காது. நான் வளர வளர அது எனக்கு பிடித்தமானதாக விட்டது. என் கணவருடன் நிறைய சைக்கிளில் போயிருக்கிறேன்.
என் புகுந்த இடமும் கிராமம் மாதிரிதான் இருக்கும். பெரிய கூட்டுக் குடும்பம். வேலை அதிகம் இருக்கும். வேடிக்கைப் பார்ப்பதற்கோ, ரசிப்பதற்கோ நேரமே இருந்ததில்லை.
ஓய்ந்து உட்கார்ந்து 83 வயதுக்கு மேல் எழுத ஆரம்பித்த போது கதைகள் கோர்வையாக எழுத வந்தது எனக்கே ஆச்சர்யம். நான் எழுதியதும் முதலில் என் கணவர் படிப்பார். அதில் இருக்கும் பிழைகளைத் திருத்திக் கொடுப்பார். பிறகு என் குழந்தைகளிடம் கொடுத்து படிக்கச் சொல்வேன்.
நானும் கதைகள் எழுதி, இப்போது அவை ஒரு புத்தகமாக வருவது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. திரு. திருப்பூர் கிருஷ்ணன், டாக்டர் பாஸ்கர், திருமதி. காந்தலக்ஷ்மி சந்திரமௌலி போன்ற பிரபல எழுத்தாளர்கள் என் கதைகளைப் படித்து கருத்து சொல்லும் அளவிற்கு அவைகள் இருப்பது மனதுக்கு பெருமையாக இருக்கிறது. என் பிறப்பில் அது நிறைவைக் கொடுக்கிறது.
நானும் ஏதோ சாதித்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே! நிறையப் பேர் சிரமம் எடுத்து இந்தப் புத்தகத்தை தயாரித்திருக்கிறார்கள். அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.
கதைகளைப் படித்தபின் எனக்கு கடிதம் எழுதுங்கள். எல்லோருக்கும் மனமார்ந்த ஆசீர்வாதம்.
கமலா நடராஜன்
Release date
Ebook: 3 August 2020
English
India