Step into an infinite world of stories
Fantasy & SciFi
நான் அடிப்படையில் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகன். பள்ளிப் பருவத்தில் அவருடைய படங்களை முதல் நாளே பார்க்கும் தீவிரத்துடன் போலீஸிடம் அடி வாங்கியெல்லாம் பார்த்தவன். பிறகு பல வருடங்களுக்குப் பிறகு அவரை சந்தித்துப் பழகியவன். என் மீது அதிக நேசம் கொண்டவர் நடிகர் திலகம்.
அவரைப் பற்றிய தொடர் என்றவுடன் எனக்குள் ஒரு உற்சாக ஊற்று! உடனே ஒப்புக்கொண்டேன். உடனே எனக்குத் தோன்றிய தலைப்பு 'செலுலாய்ட் சோழன்.' காரணம் நான் 1996-ஆம் வருடம் தமிழன் எக்ஸ்பிரஸ் ஆசிரியராக இருந்தபோது, அப்போது என் உதவியாசிரியராக இருந்த கவிஞரை இதே தலைப்பில் கவிதை எழுதச் சொன்னேன். அவர் எழுதி பத்திரிகையில் வந்த கவிதை பல நாட்கள் நடிகர் திலகத்திற்குச் சொந்தமான சாந்தி தியேட்டரில் பெரிய அளவில் பல வருடங்கள் இடம் பெற்றது.
இதைப் படிக்கும் பலர் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள், இந்தப் படத்தை எழுதியிருக்கலாமே, அந்தப் படத்தை விட்டுவிட்டீர்களே! என்று குறைபடவும் வாய்ப்பு உண்டு. நான் எடுத்துக் கொண்ட படங்களைச் சொல்வதற்கே எனக்கு மூன்று வருடங்கள் பிடித்தது.
உதாரணமாக 'வணங்காமுடி', 'தங்கமலை ரகசியம்,' 'மகாகவி காளிதாஸ்' போன்ற படங்களை பற்றி நான் பேசவில்லையே என்று குறைபடலாம். சிவாஜி நடித்த அத்தனைப் படங்களையும் பற்றி சொல்வது என் நோக்கமல்ல. சிவாஜி என்கிற மாபெரும் நடிகர் இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் தமிழும், நல்ல ரசனையும், இசையும் என்றோ செத்துப் போயிருக்கும் என்பது என் சொந்தக் கருத்து.
அந்த மனிதர் தான் எனக்குத் தமிழையும், தேச பக்தர்களையும், சரித்திர நாயகர்களையும், புராண புருஷர்களையும், தமிழ் வளர்த்த சான்றோர்களான ஆழ்வார்களையும், நாயன்மார்களையும், சமூக புருஷர்களையும் முதலில் எனக்கு திரை மூலமாக ஊட்டினார்.
சின்ன வயதில் நான் 'கப்பலோட்டிய தமிழன்' படத்தை பார்த்திராவிட்டால், எனக்கு மகாகவி பாரதியார் தெரிந்திருக்க மாட்டார். அந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் பாரதியார் பாடல்கள்.
நல்ல தமிழுக்கும், பக்தி இலக்கிய தமிழுக்கும் என்னை இட்டுச்சென்றவர் நடிகர் திலகம்.
புராணங்கள் கற்பனை என்று நம்பிக்கையில்லாதவர்கள் வாதிடலாம். ஆனால் அந்தக் கற்பனையில்தான் எத்தனை கதாபாத்திரங்கள். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அது போல பாத்திரப்படைப்பின் மூலமாக காவியங்களை எழுதக்கூடிய எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்களா?
இந்த இதிகாசங்களை, புராணங்களை, முதலில் நான் தெரிந்து கொண்டது சிவாஜி என்கிற திரை நாயகன் மூலமாகத்தானே! அவர் மூலமாகத்தானே எனக்குப் பல நல்ல அறிவுள்ள திரை இயக்குனர்கள் அறிமுகமானார்கள்.
அதனால் நடிகர் திலகத்தை களமாக வைத்துப் பல விஷயங்களை சொல்ல முயன்றிருக்கிறேன். உதாரணமாக 'திருவிளையாடல்' படம் மூலமாக திருவிளையாடற் புராணத்தைப் பற்றி சொல்ல முயன்றிருக்கிறேன்.
'பராசக்தி' படம் மூலமாக சில மனதிற்கு உடன்பட்ட பகுத்தறிவு விஷயங்களை அலசிப் பார்க்க முயன்றிருக்கிறேன்.
'திருவருட்செல்வர்' படத்தின் மூலமாக நாயன்மார்கள் வரலாறு சிலவற்றை சொல்ல முயன்றிருக்கிறேன்.
'திருமால் பெருமை' படத்தின் மூலமாக ஆழ்வார்களின் தமிழும் கோதை நாச்சியாரான ஆண்டாளின் நாச்சியார் திருமொழியை தெரிந்து கொண்டு எழுதத் தலைப்பட்டிருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் நடிகர் திலகம் வெறும் சினிமா நடிகர் மட்டுமல்ல. பல அருமையான விஷயங்களை தன் பிம்பத்தின் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு பறைசாற்றிய பிரசாரகர் என்றுதான் சொல்வேன்.
அதனால் இது நடிகர் திலகத்தின் திரைப்பட எண்ணிக்கையின் அட்டவணைத் தொகுப்பு அல்ல.
இது நடிகர் திலகம் வாழ்ந்த காலத்தின் நினைவூட்டல். மன நிறைவுகள்.
இதற்கு முன்னுரை அளித்த என் ஞானத்தந்தை கலையுலக மார்க்கண்டேயன் திரு சிவகுமார் என் நெஞ்சார்ந்த நன்றி!
சுதாங்கன்
Release date
Ebook: 2 June 2020
English
India