Step into an infinite world of stories
இன்றைக்குச் சமுதாயத்தில் பெண்களின் பங்கு கல்வி, உத்தியோகம், விளையாட்டு, அரசியல் என்று சகல துறைகளிலும் அதிகரித்து வருவது சந்தோஷத்தையே தருகிறது. ஆனால்...
நம் தமிழ்நாட்டுப்... வேண்டாம். இப்படி குறுகிய வட்டம் வேண்டாம். நம் பாரதப் பெண்களின் குடும்ப வாழ்க்கையை மட்டும் உற்று நோக்கும்போது.... கவலையே அதிகரிக்கிறது.
ஒரு சுதந்திரமான, சந்தோஷமான, நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு பலப்படுத்தும் சக்திகளைவிட... தடைக் கற்களே அதிகமாய் தென்படுகின்றன. அவைகளின் ரூபங்களில்தான் மாற்றங்கள்.
நமது திருமண முறைகளில் அடிப்படையாய் எங்கேயோ ஒரு தப்பு ஒளிந்து கொண்டிருப்பது நிச்சயம். இதற்கு மாற்று என்ன என்று யோசிக்கிற மண்டைகளின் மேல் பண்பாடு, கலாச்சாரம் போன்ற வார்த்தைகள் ‘லொட்’என்று தட்டி ‘ஷ்! சும்மா உட்கார்’என்கின்றனவோ?
As it is.... Where it is.... கண்டிஷனில் பார்க்கும் போது மேலே குறிப்பிட்ட தடைக் கற்களின் லிஸ்டில் முதலாவதாக நிற்கிறான் - ஆண்! வழிவழியாய் பெண் என்பவள் ஒரு dependent என்கிற எண்ணத்தை ரத்தத்துடன் கரைத்து வைத்திருக்கும் இவனிடம் பக்குவமும், தேர்ந்த மனநிலையும், புரிந்து கொள்ளும் இதயமும், மனிதாபிமானமும், உறுத்தாத egoவும் இல்லாதபோது... இவன் ஒரு தடைக்கல்லாகிறான்.
ஆண்கள் அத்தனை பேரும் ராட்சசர்கள் என்கிற பொறுப்பற்ற கருத்தை கூட்டத்தோடு சேர்ந்து கத்திவிட்டுப் போவதல்ல என் நோக்கம். ஒரு பெண்ணின் சந்தோஷமற்ற வாழ்க்கைக்கு அவனும் ஒரு காரணமே ஒழிய... அவன் மட்டுமே அல்ல.
ஜன்னல் கைதிகள் - சில பெண்களின் பிரச்சினை வாழ்க்கைகளைச் சொல்கிற கதை. ஒரு எழுத்தாளன் பிரச்சினையைச் சொல்லி அதற்குத் தீர்வும் சொல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. அப்படித் தீர்வு என்று ஒன்றை அவன் எழுதினால்... அது அபத்தமானது. ஒரு பொதுத் தீர்வு அத்தனை வகைப் பிரச்சினைகளுக்கும் பொருந்தாது.
குடும்பத் தகராறா? டைவர்ஸ் செய்! என்று மேலோட்டமாக தூரத்தில் நின்று தீர்வு சொல்வது குழந்தைத்தனம். பிரச்சினையின் பரிமாணம், சம்மந்தப் பட்டவர்களின் அந்தரங்க மன உணர்வுகள் என்பவை யாரும் நுழைய முடியாத அந்தரங்கக் கோட்டை - நம் சொந்தக் கனவு மாதிரி.
-பட்டுக்கோட்டை பிரபாகர்.
Release date
Ebook: 6 April 2020
English
India