Step into an infinite world of stories
ஆனந்த விகடனில் இருந்து அழைப்பு வந்திருந்தது. ஒரு தொடர் எழுதுங்கள் என்றார்கள். தலைப்பை அவர்களே முடிவு செய்து வைத்திருந்தார்கள் - ப.ப.ப.ப. கூடவே “உங்கள் பர்ஸை புஷ்டியாக்கும் ப்ராக்டிகல் தொடர்" என்ற சுண்டியிழுக்கும் துணை வரியும், எவ்வளவு பெரிய வாய்ப்பு! எழுதுவது மட்டுமல்ல, எழுத்தின் மூலம் எத்தனை பேருக்கு உபயோகமான சில யோசனைகளையாவது தெரிவிக்க இயலும்!
புத்தகங்கள் எழுதியிருந்தாலும், அதுவரை தொடராக எதையும் எழுதிப் பழக்கமில்லாததால், அது முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. எழுத ஆரம்பித்த பிறகு வாரத்தில் இருக்கும் ஏழு நாள்களும் மிக மிக வேகமாக ஓடுவதாகப்பட்டது. அடிக்கடி புதன் கிழமைகள் வருவதாகப்பட்டது. நேர நிர்வாகம் பிரச்னை இல்லை என்றாலும் வார நிர்வாகம் முதலில் கொஞ்சம் உதைக்கவே செய்தது.
சம்பாதிக்கும் வழிமுறைகளுக்கா பஞ்சம்? சொல்லப் போனால் எல்லாருக்குமே தெரிந்ததுதான் இது. என்ன விஷயம் என்றால், பலரும் தமக்குத் தெரிந்த வழிமுறைகளைக்கூடத் தாற்காலிகமாக மறந்துபோய், என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று புரியாமல் குழம்பிக்கொண்டிருப்பார்கள். நினைவூட்டி எடுத்துக்காட்டும் வேலை மட்டுமே என்னுடையது என்று முடிவு செய்துகொண்டேன். வெற்றி பெற்றவர்களைப் பற்றி எழுதுவது, அவர்களின் சிறப்பியல்புகளை, வித்தியாசமான முயற்சிகளை எடுத்துக் காட்டுவது என்று முடிவு செய்துகொண்டதும் வேலை சரசரவென ஓடியது. அதிகம் தேடவே தேவையிருக்கவில்லை.
திரும்பிய பக்கமெல்லாம் வெற்றி பெற்றவர்கள் தெரிந்தார்கள். பெரும்பாலும் சாதாரண நிலையில் இருந்து. முயன்று வெற்றி பெற்றவர்கள். நம்புங்கள்! இதுதான் உண்மை! நம் கண்முன்னே நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வெற்றியாளர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களை நாம் கவனிப்பதில்லை. கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்கா குறித்தும் ஐரோப்பா குறித்தும் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டுமென்றால் நமக்கிடையே இருக்கும் வெற்றியாளர்களை நாம் கொண்டாடித்தான் ஆகவேண்டும். அவர்களை தளன்றிக் கவனித்து, பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும். அவர்களிடமிருந்து பாடம் படிக்க வேண்டும். தொடர் வெளியாகத் தொடங்கிய இரண்டாம் மூன்றாம் வாரங்களில் இருந்தே தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. “நான் முப்பது வருஷமா ஆனந்தவிகடன் வாசகி!" என்று பேச ஆரம்பிப்பார்கள். தொடரில் குறிப்பிடப் பட்டிருப்பவரின் கூடுதல் விவரங்களைக் கேட்பார்கள். உரிமையோடு ஆலோசனை கேட்பார்கள். மிகவும் முயன்று நமது தொலைபேசி எண்ணை வாங்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வரும் பொழுது, வெற்றி பெறுவதற்கு மக்களிடம் இருக்கும் துடிப்பினை உணர முடிந்தது.
தொடரில் சொல்லப்பட்ட ஆலோசனைகளைப் பயன்படுத்தி தொழில் தொடங்கியிருக்கிறோம் என்று சிலர் நன்றி சொன்னார்கள். சந்தோஷமாக இருந்தது.
ஆசிரியர் அசோகனுக்கும், தொடருக்கு என்னுடன் கோஆர்டினேட் செய்த எஸ்.பி. அண்ணாமலை மற்றும் முருகேஷ் பாபுவுக்கும் என்னுடைய நன்றி. தங்களின் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்துகொண்ட வெற்றியாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
Release date
Ebook: 15 September 2020
English
India