Step into an infinite world of stories
எஸ்.வி.வி: இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் தமிழுக்கு அணி செய்த பல சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1934-க்கு முன்பு திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்து கொண்டே ஆங்கிலத்தில் சிறந்த நகைச்சுவைக் கட்டுரை களையும், ஹாஸ்ய சொற்சித்திரங்களையும் "ஹிந்து' பத்திரிகையில் எழுதி வந்தார். அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த திரு. கல்கி, அதிபர் திரு. வாசன் ஓரிரவு திருவண்ணாமலைக்கே போய் எஸ்.வி.வி.யை சந்தித்து, தமிழிலும் விகடனுக் காக எழுதும்படி கேட்டுக்கொண்டார்கள். அது முதல் தமிழுக்குப் பிறந்தது புதுயோகம். 1933-லிருந்து 1950 வரை எஸ்.வி.வி. மிக உயர்தரமான நகைச்சுவைக் கதைகள், ஹாஸ்ய சித்திரங்கள், நாவல்கள், நெடுங்கதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய நகைச்சுவை பல வகையானது. இலேசான புன்னகையை வரவழைக்கக் கூடியவை. Satire என்ற கேலிச்சித்திரங்கள், குபீரென்று வெடிக்கும் ஹாஸ்யம் இப்படி பலவகை. தமிழில் நகைச் சுவை நூல்கள் மிகவும் குறைவு. அந்தக் குறையை நிறைவு செய்ய அவருடைய நூல்கள் பெரிதும் உதவுகின்றன. எஸ்.வி.வி.யின் சிறுகதைகளையோ அல்லது நாவல்களையோ படிக்கையில், நாம் ஒரு கதை படிக்கிறோம் என்ற பிரக்ஞை மறந்து போய் ஒரு நெருங்கிய ஹாஸ்ய உணர்வு நிறைந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்ற வைத்துவிடும். இந்த எழுத்து தற்கால வாசகர்கள் படித்து ரசிக்க வேண்டிய எழுத்து.
Release date
Ebook: 6 April 2020
English
India