Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Cover for Vaalin Mutham

Vaalin Mutham

Language
Tamil
Format
Category

History

சென்னை நகரில் கிழக்கிந்தியக் கம்பெனி காலூன்றிக் கோட்டை எழுப்பிக் கொண்டதையும், தமிழ்நாட்டில் ஏழை எளிய தொழிலாளிகளைப் பிடித்துக் கப்பலேற்றி அடிமை வியாபாரம் நடந்து வந்ததையும் பின்னணியாகக் கொண்டு 'அடிமையின் காதல்' என்ற நாவலை எழுதிய பிறகு, அதேபோல் ஆராய்ச்சிகள் செய்து இன்னொரு சரித்திர நாவலைப் படைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டேன். அதன் பயனாக உருவானாதுதான் இந்த 'வாளின் முத்தம்.’ ராஜபுத்திரர்களுக்கும் அக்பருக்கும் ஏற்பட்டிருந்த சினேகிதம், பகைமை இரண்டையும் வைத்து எழுதப்பட்டது இந்தக் கதை. சமீப காலத்துச் சரித்திரமாக இருந்தபோதிலும் இதை எழுதுவதற்காக நான் சிறிது பாடுபட வேண்டியிருந்தது. ராஜஸ்தான் வட்டாரத்தில் சிறு பிரயாணங்களை மேற் கொண்டேன். அப்போதுதான் அஜ்மீருக்கு போனேன்.

ஒருநாள் அக்பர் ஃபதேபூர் சிக்ரிக்கு அருகிலுள்ள ஒரு காட்டில் வேட்டையாடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, குவாஜா மொயினுதீன் சிஷடியின் மகிமை குறித்துச் சில துறவிகள் பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டதாயும், அஜ்மீரிலுள்ள தர்காவுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று புறப்பட்டதாயும் ஒரு கர்ண பரம்பரைக் கதை உண்டு. அங்கேயிருந்து திரும்பியபின், 27 வயது வரை வாரிசு இல்லாதிருந்த அக்பருக்கு, அம்பர் இளவரசி ஹிர்க்காபாய் மூலம் ஆண் குழந்தை பிறந்ததாம். அதிலிருந்து ஆண்டுதோறும் ஆக்ராவிலிருந்து பாத யாத்திரையாகவே அஜ்மீருக்கு வரத் தொடங்கினார் என்றும் படித்திருந்தேன்.

அந்தப் பின்னணியைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே அஜ்மீர் சென்றேன். எந்த ரயிலில் ஏறி எப்படிச் சென்றேன் என்பது இப்போது நினைவில்லை. ஆனால் பையில் ஒரு வேட்டி சட்டையும் ஆஸ்துமா மருந்தும் மட்டும் வைத்துக் கொண்டு கடும் கோடையில் பிரயாணம் சென்றது மட்டும் நினைவு இருக்கிறது. தாகம் வாட்டியது. அது பாசஞ்சர் வண்டி யாகையால் சின்னச் சின்ன ஸ்டேஷன்களில் கூட நின்றது. பிளாட்பாரத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆங்காங்கே மாம்பழம் வாங்கிச் சாப்பிட்டு தாகத்தைத் தீர்த்துக் கொண்டு அஜ்மீரை அடைந்தேன். குறுகலான தெருக்கள், கசகசவென்று ஜனங்கள், மகான் மொயினுதீன் சிஷ்டியின் தர்காவுக்கு எப்படிப் போவது என்று விசாரித்த (இந்துவான) என்னைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு வழி சொன்னார்கள். பழமையான தர்க்கா அது. வாசலெங்கும் ஏழை எளியவர்களின் கூட்டம், உள்ளே போனேன். மகானின் சமாதியை வலம் வந்துவிட்டுத் திரும்பினேன். அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட சிறு புத்தகமொன்று வாங்கிக் கொண்டேன். அதிலிருந்து - ‘தந்தையின் வழியில் ஒரே ஒரு தோட்டம்தான் இருந்தது குவாஜா மொயினுதீனின் ஜீவனத்துக்கு. அதையும் விற்று ஏழைகளுக்குத் தானம் செய்தார். மக்கா நகரத்துக்கும் மதினா திருநகரத்துக்கும் பாக்தாத் நகரத்துக்கும் யாத்திரைகள் சென்றார். பிருதிவிராஜை கோரி சுல்தான் தோற்கடித்த சமயம் அவருடன் இந்துஸ்தானம் வந்தார். ஐம்பத்திரண்டாவது வயதில் அஜ்மீரை அடைந்து அற்புதங்கள் புரிந்தார். எட்டு நாள் சோந்தாற்போல் உபவாசம் இருந்து ஒன்பதாம் நாள் ஒரே ஒரு சப்பாத்தி மட்டும் சாப்பிட்டுவிட்டு மீண்டும் உபவாசத்தைத் தொடரக்கூடிய அளவு மனோதிடமும் தேக திடமும் கொண்டிருந்த பெரியார் அவர்...' என்ற வாசகங்களைக் குறித்துக் கொண்டு திரும்பினேன்.

அக்பரை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று ஒரு ராஜபுதன சமஸ்தான இளவரசனும் அவனுடைய ஏழைக் காதலியும் திட்டமிடுவதாக என் கதையை அமைத்திருந்தேன். ஆகராவிலிருந்து அஜ்மீருக்கு நடைப் பயணமாகச் செல்லும் அக்பர், நடுவே பனாசி ஆற்றைக் கடக்கும்போது, அம்பு எய்தி அவரைக் கொல்ல நினைத்திருக்கிறாள் அந்தப் பெண். வெகு தொலைவில், மறைவான இடத்திலிருந்தபடி குறி பார்த்து அம்பு எய்வது பற்றி நீண்டநாள் பயிற்சி பெறுகிறாள். 'டே ஆஃப் தி ஜெக்கால்' என்ற ஆங்கில நாவல் என்னை மிகவும் பாதித்திருந்த சமயம் அது. அதன் கதாநாயகன் நெடுந்தூரத்திலிருந்து பிரெஞ்சு ஜனாதிபதியைக் கொலை செய்வதற்காகத் துப்பாக்கிப் பயிற்சி பெறப் படாதபாடு படுகிறான். அதுபோல இவளும் அம்பு எய்யப் பாடுபட்டுக் கற்றுக் கொள்கிறாள். அதிலே தற்செயலாக ஜனாதிபதி உயிர் தப்புகிறார். இந்த நாவலில், அக்பர் அந்தக் கொலைத் திட்டத்தைத் தன் சாமர்த்தியத்தால் முறியடிக்கிறார். கதையை எழுதும் முன் தோடர்மால், தான்சேன், அக்பரின் தீன் இலாஹி மதம், அரண்மனைச் சடங்குகள், சக்கரவர்த்தியின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள், வட இந்திய நாட்டிய வகைகள், ராகங்கள், சரித்திர முக்கியத்துவம் கொண்ட இடங்கள், தகெளசியா அங்கியின் சிறப்பு- இப்படி ஏராளமான தகவல்களைப் திரட்டினேன். ஏன், அக்பருக்காகத் தயாரிக்கப்படும் விருந்தைக்கூட விட்டு வைக்கவில்லை. கதாநாயகன் ஜெய்யையும் நாயகி ரூப்மதியையும் தவிர மற்றப் பெரும்பாலோர் அசலான சரித்திரப் பாத்திரங்கள். அக்பரின் வாழ்க்கையில் நிஜமாகச் சம்பந்தப்பட்ட நபர்கள்.

Release date

Ebook: 23 December 2019