Step into an infinite world of stories
4.2
Short stories
விக்கிரமாதித்தன் என்பதற்கு பொருள் தான் இந்த முன்னுரைக்கான தலைப்பு. சிறுபிராயத்தில் வாய் மொழியாக அறிந்து கொண்ட முதல் இலக்கிய பரிட்சயம் விக்ரமாதித்தன் கதைகள் தான். அந்நாட்களில் இலக்கியம் என்று ஒரு வார்த்தை இருப்பது கூடத் தெரியாத ஒரு சூழலில், எங்கோ ஒதுங்கியிருக்கிற ஒரு கிராமத்தில், விக்கிரமாதித்தன் மட்டும் எப்படியோ புகுந்திருந்தான்.
அவனின் மதிநுட்பம், புத்திசாலித்தனம், சமயோஜிதம், பாரக்கிரமம், தைரியம், வீரம், தீரம் என்று எதன் பொருட்டோ விக்ரமாதித்தன் மீது ஒரு தனிப்பாசம். அய்யப்பாவிடம் எப்போது கதை சொல்லச் சொல்லிக் கேட்டாலும் விக்ரமாதித்தன் கதைகள் தான் சொல்வார். விக்ரமாதித்தன் கதைகள் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என்று எந்த பேதமுமின்றி அனைவரையும் கவரக்கூடிய வசிய சக்தி கொண்ட படைப்பு.
விக்ரமாதித்தன் கதைகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே வாய் மொழியாக தமிழ் மக்களிடையே சொல்லப்பட்டு வந்த நாடோடிக் கதை வகையைச் சேர்ந்தது. அதன் சுருக்கம் இவ்வளவு தான். போஜ மகாராஜன் என்கிற அரசன் ஒரு அபூர்வசக்தி கொண்ட சிம்மாசனத்தை தோண்டி எடுக்கிறான். அந்த சிம்மாசனம் விக்ரமாதித்தன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் அமர்ந்து ஆட்சி புரிந்த ஆசனம். அது தங்கத்தால் ஆனது. நவரத்தினங்கள் பதித்து அழகூட்டப்பட்டிருப்பது. அதில் முப்பத்திரண்டு படிக்கட்டுகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு அழகிய பெண் பதுமை வீற்றிருக்கும். அனைத்தும் தங்கம் அதில் நவரத்தின வேலைப்பாடுகள் என்று அமர்க்களமாயிருக்கும்.
மந்திரி பட்டி செய்கிற சமயோஜித உத்தியின் விளைவாக விக்ரமாதித்தன் காடாறு மாதம், நாடாறு மாதம் என இருந்து பட்டியின் உதவியோடு வெற்றிகரமாக இரண்டாயிரம் வருடம் திகட்டத் திகட்ட நல்லாட்சி புரிந்திருக்கிறான்.
அவன் காலத்திற்குப் பிறகு ஒரு பூகம்பத்தினாலோ, இன்ன பிற இயற்கைச் சீற்றத்தினாலோ அந்த சிம்மாசனம் பூமிக்குள் புதைவுண்டு விடுகிறது. அந்த இடத்திற்குச் சென்றாலே நம்முடைய இயற்கையான குணம் மாறி சாந்த குணமும், பிறருக்கு உதவக் கூடிய பரோபகாரக் குணமும் வந்து விடும். அதனாலேயே சந்தேகம் கொண்டு போஜன் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க உத்தரவிடுகிறான்.
அப்போது தான் அவன் கைக்கு அந்த சிம்மாசனம் வந்தடைகிறது. அந்த சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து ஆட்சி புரிய அவனுக்கு ஆசை. ஆனால் அது விக்கிரமாதித்தன் அமர்ந்து ஆட்சி புரிந்த சிம்மாசனம் அல்லவா. அதனால் அந்தப் பதுமைகள் போஜ மகாராஜனிடம் தலைக்கு ஒரு கதை விதம் விக்ரமாதித்தனின் பல வகையான திறமைகளை இவன் புரிந்து கொள்ளும் விதம் சொல்லி அவனை ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன.
முடிவில் முப்பத்திரண்டு பதுமைகள் சொன்ன விக்ரமாதித்தனின் பன்முகத் தன்மைகளை உணர்த்தும் அந்த முப்பத்திரண்டு கதைகளில் அதாவது 24 கூட்டல் 31 ஆக மொத்தம் அந்த 55 கதைகளின் மூலம் விக்ரமாதித்தனின் பேராற்றலை முழுமையாகப் புரிந்து கொண்டு விடுகிற போஜ மகாராஜன் தான் தன்னையும் அறியாமல் தனக்குள் பதுங்கியிருந்த “தான்மை” நீங்கப் பட்டவனாய், இத்தனை பெயர் பெற்ற விக்ரமாதித்தன் அமர்ந்து ஆட்சி செய்த இந்த சிம்மாசனத்தில் அமர தான் உட்பட இங்கே யாருக்கும் தகுதி கிடையாது எனக் கருதி, அதற்குத் தர வேண்டிய அத்தனை மரியாதைகளையும் விமரிசையாகச் செய்து விட்டு, அதற்கு விமோசனம் தரும் விதத்தில் அது வந்த இடமாகிய தேவலோகத்திற்கே அதனை வழியனுப்பி வைக்கிறான். அவன் இதைச் செய்வதற்கு முன்னால் ஒவ்வொரு படியாக ஏறி விக்கிரமாதித்தன் பற்றி அறிந்து கொள்கிறான் அல்லவா? அப்படி அவன் காலடி முதல் படிக்கட்டில் பட்டதும் முதல் பதுமை விக்கிரமாதித்தன் வரலாறு பற்றிச் சொல்கிறது.
ஒரு முனிவனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு விக்கிரமாதித்தன் மயானத்தில் முறுங்கை மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிற வேதாளத்தைக் கொண்டு வந்து ஒப்படைப்பதாகக் கூறிச் சென்று வேதாளத்தை தோளில் போட்டுக்கொண்டு வருகிறான். வரும் வழியில் பொழுது போகட்டுமே என்று வேதாளம் கதை சொல்ல ஆரம்பத்து விடுகிறது.
இதில் வேதாளம் தான் சொல்கிற இருபத்து நான்கு கதைகளின் முடிவிலும் ஒரு புதிர் போடும். விக்ரமாதித்தன் அந்தப் புதிரின் அர்த்தம் தெரிந்திருந்தும் அதை அவிழ்க்கா விட்டால் அவன் தலை சுக்கல்சுக்கலாய் நொறுங்கிப் போய் விடும் என திகில் கொடுக்கிறது. அதற்கு விக்கிரமாதித்தன் எப்படிப்பட்ட பதில் சொன்னான்? எல்லாக் கதைகளுக்கும் சரியான பதில் சொன்னானா? இருபத்து நான்கு கதைகளும் சொல்லி முடித்த பிறகு என்ன நடந்தது போன்ற பல சுவையான கேள்விகளுக்குப் பதில் தருகிறது இந்தப் புத்தகம்.
குழந்தை மனதுடன், தி. குலசேகர்
Release date
Ebook: 3 January 2020
English
India