Step into an infinite world of stories
Biographies
பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பிரபலங்களைப் பார்க்கும்போதும், அவர்களது பேச்சுக்களைக் கேட்கும்போதும், அவர்களின் வெற்றிக்குப் பின் மறைந்திருக்கும் அனுபவங்களைப் பற்றி அறிந்துகொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் ஏற்படுவது இயல்புதான். ஆனால், எல்லா வி.ஐ.பி.களுமே தாங்கள் கடந்து வந்த பாதையை எல்லோரிடமும் மனம் விட்டுப் பகிர்ந்து கொள்வதில்லை. பத்திரிகைத் துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து வருவதாலும், புகழ்பெற்ற வார இதழின் ஆசிரியர் என்பதாலும், பிரபலங்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், பலருடனும் நல்லதொரு நெருக்கமான நட்பும் வாய்த்திருக்கிறது.
நான் சந்தித்த வி.ஐ.பி.களின் பன்முகத்தை வாசகர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, நான் ஆசிரியராக இருக்கும் `ராணி’ வார இதழில் `வி.ஐ.பி.களின் பர்சனல் பக்கங்கள்’ என்ற தொடர் பேட்டிகளை எழுத ஆரம்பித்தேன். கலை, இலக்கியம், அரசியல் என பல துறைகளிலும் தனி முத்திரை பதித்து வெற்றிகரமான மனிதர்களாக, சாதனை படைத்து வரும் வி.ஐ.பி.களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து வெளியிட்டு வந்தேன். வாசகர்கள் மத்தியில் அந்த பேட்டிக் கட்டுரைகளுக்கு மகத்தான வரவேற்புக் கிடைத்தது. இதை ஒரு தனி புத்தகமாக வெளியிட்டால், பலரும் படித்துப் பயன்பெறுவார்களே என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இப்புத்தகம்.
ஒவ்வொரு வி.ஐ.பி.களையும் சந்தித்துவிட்டு வரும்போதும் எனக்குள் நிகழ்ந்த மாற்றங்களை, உத்வேகத்தை, உற்சாகத்தை எழுத்தில் வடிப்பது கடினம். எத்தனை தடைகள், எத்தனை அவமானங்கள், வலிகள், எத்தனையெத்தனை துரோகங்கள்… இவை எல்லாவற்றையும் கடந்து, விடா முயற்சியுடன் உழைத்து இவர்கள் இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. இந்த உன்னத மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள், வாசகர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும் என்பது நிச்சயம்.
`வி.ஐ.பி.களின் பர்சனல் பக்கங்கள்’ என்றால் அவர்களுக்குப் பிடித்த விஷயங்கள், பிடித்த உணவு, பிடித்த நபர்கள், அவர்களின் மனதுக்கு நெருக்கமான கடவுள்கள் என்று எல்லா தகவல்களும் இருந்தால்தானே சுவாரஸ்யமாக இருக்கும். இந்த நூலிலும் அதுபோன்ற விவரங்கள் ஏராளம் உள்ளன. வாசகர்கள் அவற்றைப் பெரிதும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.
நிகழ்காலத்தில் நம்முடன் வாழும் சாதனையாளர்களின் சரித்திரங்களை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கெல்லாம் இந்தப் புத்தகம் ஓர் அற்புத வரம். இதில் இடம்பெற்றிருக்கும் 24 வி.ஐ.பி.களுமே 24 முத்துக்கள். இந்த முத்துக்களுக்குள் மூழ்கித் திளைக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
Release date
Ebook: 28 March 2025
English
India