Step into an infinite world of stories
உயிரெழுத்துப் பன்னிரண்டு, மெய்யெழுத்துப் பதினெட்டு, இரண்டும் புணர்ந்த உயிர்மெய் எழுத்தென்ப இருநூற்றுப் பதினாறு. ஆகத்தமிழ் எழுத்துக்கள் இருநூற்று நாற்பத்தாறு. ஆயுத எழுத்தும் சேர்த்து இருநூற்று நாற்பத்தேழு. இன்று வழக்கொழிந்து வருகிற ஆயுத எழுத்து ஒரு அத்து மீறலா? அது குறிலா, நெடிலா, ஒற்றா, உயிரா, உயிர்மெய்யா என்பதில் எனக்கின்று தெளிவில்லை. ‘ங’ப்போல் வளைக்க ஆயுத எழுத்தான ‘ஃ’க்கு தன் சொந்தக் குடும்பத்தைச் சார்ந்த வேறு எழுத்துக்களும் கிடையாது. அதனாலென்ன? கம்பன் சொற்களில், ஆயுத எழுத்து, ‘கூட்டு ஒருவனை வேண்டாக் கொற்றவன்.’ ஆயுத எழுத்து கலந்து வரும் சொற்கள் மிகக் குறைவு தமிழில். சொல்லிப் பாருங்கள் - அஃது, இஃது, எஃகு, பஃறுளியாறு... ஆனால் ‘ஃ’ எனும் எழுத்தின் ஒலியை வேறொரு எழுத்து தரவும் இயலாது. அது தானே நில்லாது, மொழி முதலிலும் ஈற்றிலும் வாராது. என்றாலும் அதற்கு மாற்று இல்லை. ஆனால் ஆயுத எழுத்தை மொழியில் இருந்து எடுத்து விடலாம் என்றனர் சிலர். ‘ங’வின் சுற்றத்திலும் ‘ஞ’வின் சுற்றத்திலும் பல எழுத்துகளைக் குறைத்து விடலாம் என்றனர். நாம் தூக்கிச் சுமக்கிறோமா? அது பாட்டுக்கு சிவனே என்று ஒரு ஓரமாய்க் கிடந்துவிட்டுப் போகட்டும் என்றனர் பெருந்தன்மையாய்ச் சிலர். நான், எனது எழுத்தையும் ஒரு ஆயுத எழுத்தாகவே கருதினேன். அவ்வாறு கருதி, மன சமாதானம் இழந்தகாலை, எழுத்தை ஆயுதமாக மாற்றிக்கொள்ள எனது கட்டுரைகள் உதவின. சமீபத்தில் அசோகமித்திரன், ‘த சன்டே இந்தியன்’ இதழில் எழுதிய கட்டுரையில், கட்டுரை எழுத நிர்ப்பந்தப்பட்டு, நாஞ்சில் நாடன் எனும் நாவலாசிரியனைத் தொலைத்தோம் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் உண்மை இல்லாமல் இல்லை. புத்தாயிரத்தில் எனக்கோர் புதிய நாவல் கிடையாது. யோசித்துப் பார்க்க வருத்தமாகவும் இருக்கிறது. இன்னொரு பள்ளி, ஏதுனக்கு இயல்பாக வருகிறதோ அதை முனைந்து செய் என்கிறது. அதையும் தள்ளிவிடுவதற்கு இல்லை. மேலும், ‘சும்மா கத கித எளுதிக்கிட்டு கெடப்பவன்’ எனும் இலக்கிய, திறனாய்வு மதிப்பீடுகளை எனது கட்டுரைகள் மாற்றி உள்ளன. எனது கட்டுரைகள் வாசிக்கப்படுகின்றன என்பதும் அறிவேன். இஃதோர் லாப நட்டக் கணக்கல்ல. நாவல் எழுதும் முயற்சியையும் நான் இன்னும் கைவிட்டு விடவில்லை. எந்த வடிவத்திலேனும் எனது பங்களிப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு இருப்பது முக்கியமானது என்று கருதுகிறேன். எனவே, ‘காவலன் காவான் எனின்’ எனும் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. எல்லாம் கடந்த ஈராண்டுகளில் எழுதப்பட்ட புதிய கட்டுரைகள். எனது கருத்துகளோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. எனது வேலையும் அத்துடன் முடிந்ததாகக் கொள்ளலாம். சமூகத்துக்கான தேர்ந்த கருத்துகளை தீர்த்துச் சொல்கிறவர்களைத்தான் நாம் அறிஞர் என்றும் ஆய்வாளர் என்றும் அழைக்கிறோம். ஆனால் அவர்களுடைய முதல் தகுதி, விருப்பு வெறுப்பு அற்றவராக இருக்க வேண்டும் என்பது. எனவே வாசியுங்கள், யோசியுங்கள். - நாஞ்சில் நாடன்
Release date
Ebook: 2 July 2020
English
India