Step into an infinite world of stories
Short stories
‘மாவடு பிடிக்குமா?' என்று கேட்டால், ‘பிடிக்குமாவா? என்ற துடுக்கான பதில் வெடுக்கென்று பலரிடமிருந்து வரும். பளபள பீங்கான்ஜாடியில், உப்பு மற்றும் காரப்பொடி கலந்த சாகரத்தில் பதமாக ஊறி, அவ்வப்போது குலுக்கிவிடப்பட்டு, பிரத்யேகக் கரண்டியால் பரிமாறப்பட்டகாம்புடன் பரிமளிக்கும் ஒரு நத்தம் அல்லது சேலம் மாவடு, நானிருக்க பயமேன் என்று உறுதி அளித்தால், சரியாக உறையாத தயிர்விட்டுப் பிசைந்த சாதம்கூட சுவையாக அமைந்துவிடும். தயிர் புளிக்காமல், கெட்டியாக அமைந்துவிட்டால், கேட்கவே வேண்டாம். பிரும்மானந்தம்.
நகைச்சுவையும் அப்படித்தான் என்று தோன்றுகிறது. அவ்வப்போது சவசவ என்று அமைந்துவிடும் வாழ்க்கையையும் அது ருசிகரமாக ஆக்கிவிடுகிறது. தொட்டுக்கொள்ள நகைச்சுவைக் காட்சிகள் இல்லாவிட்டால், சினிமாக்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டாகாமல், ஃபிலிம் பெட்டிக்குள் பாம்பாக முடங்கிவிடக்கூடிய அபாயம் உண்டு.
கல்கி, தேவன், நாடோடி போன்ற வித்தகர்கள், எழுத்தில் கொண்டு வந்த நகைச்சுவைக்கு ஈடு இணை இல்லை. நாற்பது, ஐம்பதுகளை பலருக்கு இன்றும் மகிழ்ச்சியுடன் நினைவுக்குக் கொண்டுவரும் அவர்களுடைய படைப்புகள், பொக்கிஷங்கள், கணினி, ஏசி போன்று தற்காலத்தில் மலிந்து இருக்கும் பல வசதிகள் இல்லாத அக்காலகட்டத்தில், உடல் உபாதைகளையும் மீறி, அவர்கள் செய்தது சாதனை அல்ல. தவம்.
தங்கள் பங்கிற்கு, அவ்வாறு பேணப்பட்ட நகைச்சுவைக்காக, வாராவாரம் வட்டார ஏடுகளில் ஒதுக்கப்பட்ட இடத்தில், 'தமாஷா வரிகள்’ என்கிற தலைப்பில் நான் ஒரு சிறிய முயற்சியாக எழுதிவரும் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று உங்கள் கைகளில் தவழ்கிறது. மெல்லிய நகைச்சுவையில், மாவடுவாக நன்றாக ஊறியிருக்கும் என்று நம்புகிறேன்.
விரைவில், ஐநூற்றி ஐம்பது வாரங்களைத் தாண்ட இருக்கும் இக்கட்டுரைகளைப் படித்து, அவ்வப்போது மெயிலிலும், நேரிலும், தொலைபேசியிலும் பாராட்டிவரும் வாசகர்களுக்கு என் நன்றிகள். இதற்கு வித்திட்ட, வட்டார ஏடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன், கட்டுரைகளுக்கான படங்களைத் தீட்டி, காலம் தவறாது அளித்துவரும் ஓவியர் நடனம் மற்றும் சிறந்த முறையில் புத்தகத்தை பதிப்பித்திருக்கும் அல்லயன்ஸ் சீனிவாசன் அவர்களுக்கும் தான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஜாடியை குலுக்கி, அகப்பையில் சிக்கும் எந்த மாவடுவையும் சுவைக்கலாம் என்பதுபோல், புத்தகத்தைப் பிரித்து, எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் படிக்கலாம். சுவைக்கும் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
ஜே.எஸ்.ராகவன்
Release date
Ebook: 18 December 2019
English
India