Step into an infinite world of stories
'மதிப்புரை' என்ற தலைப்பிலேயே அமரர் கல்கி அவர்கள் ஒரு சுவையான கட்டுரையை எழுதினார். 'ஏட்டிக்குப் போட்டி' தொகுப்பில் உள்ள இந்தக் கட்டுரை வெளியானபோது (14.1.1930) அவர் 'ஆனந்த விகட'னில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கவில்லை. அடுத்த ஆண்டில்தான் ஆனந்த விகடனில் 'மெய்யாசிரிய'ராகிறார்.
தம்முடைய சொந்த நூலான 'சாரதையின் தந்திரம்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுவிட்டு மதிப்புரைக்கு அனுப்பி, ஏமாற்றமடைந்த கதையைப் படு சுவாரஸ்யமாக அவர் அதில் எழுதுவார்.
"மொத்தம் ஐம்பது புத்தகங்கள் மதிப்புரைக்கு அனுப்பினேன். 48 மதிப்புரைகள் வெளியாயின. இவற்றின் பயனாக மொத்தம் மூன்றரைப் புத்தகம் விலையாயிற்று.” (ஒரு வாசக சாலைக்குப் பாதி விலைக்குக் கொடுத்த புத்தகத்தை அரைப் புத்தகம் என்று கணக்கிட்டேன்.)
அமரர் கல்கி அப்போது வேடிக்கையாக எழுதி விட்டாலும், முன்னுரைகள், மதிப்புரைகள் என்று எழுதுவதிலும் படிப்பதிலும் ஓர் ஆனந்தம் இருக்கவே செய்கிறது. அதிலும் அவை 'கல்கி' எழுதியவையாக இருந்தால் சிரஞ்சீவித் தன்மை பெற்று, எழுபது ஆண்டுகள் ஆனாலும் சுவாரஸ்யம் குன்றாதிருக்கின்றன! அமரர் கல்கி தம்முடைய பல நூல்களுக்குக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். மற்ற ஆசிரியர்கள் சிலரின் நூல்களுக்கும் முன்னுரை எழுதியிருக்கிறார். இவை தவிர, தம்முடைய சொந்தப் பத்திரிகையான 'கல்கி'யிலும் பல நூல்களுக்குத் தாமே பல மதிப்புரைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
இந்தத் தொகுப்பில் அமரர் கல்கி எழுதிய முன்னுரைகளும் மதிப்புரைகளும் இடம் பெறுகின்றன.
தம்முடைய நூல்களுக்கு எழுதியவற்றுள் 'பாங்கர் விநாயகராவ்’ நூலுக்கு அவர் எழுதிய முன்னுரை வித்தியாசமானது, மிகவும் பிரபலமானது. முன்னுரையே 55 பக்கங்களுக்கு நீண்டிருக்குமாயினும், அது திருச்செங்கோடு காந்தி ஆசிரம வாழ்க்கையை விவரிப்பதால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஏறக்குறைய அவருடைய சுயசரிதையைப் போலவே அமைந்திருக்கிறது. இவ்வளவு விரிவான முன்னுரையை வேறு எந்த நூலிலும் பார்த்திருக்க முடியாது. இன்னும், 'அலைஓசை', 'சங்கீத யோகம்', 'ஏட்டிக்குப் போட்டி', 'பொய்மான் கரடு', 'சிவகாமியின் சபதம்', 'சோலைமலை இளவரசி' போன்ற தம்முடைய நூல்களுக்கும் முன்னுரை எழுதியுள்ளார். இவை இந்தத் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. மேற்கண்ட நூல்களைப் படிக்கும்போது, அவசியம் இந்த முன்னுரைகளைப் படித்துப் பார்க்கக் கேட்டுக் கொள்கிறோம்.
அமரர் கல்கியின் முன்னுரைகளை இன்றைக்கு எடுத்துப் படித்துப் பார்க்கும்போதும் எதிர்காலத்தில் எடுத்துப் படிக்கும்போதும், சுவையும் பயனும் ஒன்று போலவே இருக்கும்; ஏராளமான தகவல்களை உள்ளடக்கியிருக்கும். சம்பிரதாயமான வறட்டு முன்னுரைகளாக ஒன்றைக்கூடக் காண முடியாது. அதுதான் 'கல்கி'யின் குணவிசேஷம் - அல்லது தனித்தன்மை! இந்தத் தொகுப்பு முழுமையானது என்று சொல்ல முடியவில்லை.
ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பிலும் உள்ள தொகுப்பாசிரியர் குறிப்புக்கு பெரும்பாலும் நான் ஆதாரமாக எடுத்துக் கொண்டது அமரர் சுந்தா எழுதிய 'பொன்னியின் புதல்வர்' வரலாற்று நூலைத்தான் என்பதையும் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
- சுப்ர.பாலன்
Release date
Ebook: 11 December 2019
English
India