Step into an infinite world of stories
4.5
Biographies
மில்லினியம் ஆண்டுக்கான வரவேற்புக் கொண்டாட்ட ஏற்பாடுகளில் உலகமே ஐக்கியமாகிப் போயிருந்த 1999 ஆம் ஆண்டின் கடைசி தினங்களில் ஒருநாள், சாதாரண எழுத்தாளரும், பத்திரிகையாளருமான எனக்கும் அத்தகைய உற்சாகம் தொற்றிக் கொள்ளக் கூடிய ஒரு செய்தி என் வீட்டு தொலைபேசி வழியாக இனிய இந்தியில் என் காதுக்குள் வந்து இறங்கியது.
என் காதுகளை என்னால் சிறிதுநேரம் நம்பத்தான் முடியவில்லை. அப்படி என்ன உலக மகா சந்தோஷ செய்தி இருக்க முடியும்?
இருந்தது. அந்தச் செய்தியில்...
'ஷ்யாமாஜி. உலகப்பயணப்பட, தமிழகத்திலிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று சொன்னவர், தன்னை உத்திரபிரதேச சுற்றுலா அதிகாரிகளுள் ஒருவர் என்று மட்டுமே அறிமுகம் செய்துகொண்டார். தொடர்ந்து அவர், 'உங்களை எங்கள் விருந்தினராக ஏற்றுக்கொள்வதில் எங்கள் சுற்றுலாத்துறை பெரு மகிழ்ச்சியடைகிறது. மில்லினியம் ஆண்டு ஜனவரி 8ம் தேதியிலிருந்து 24ம் தேதிவரை உங்களின் இந்த பயணம் இருக்கும். முழுவிவரங்களை உங்களுக்கு நாங்கள் வெகு சீக்கிரமே அனுப்பி வைக்கிறோம். உங்களை, நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். நமஸ்தே' என்று விடை பெற்றார் தொலைபேசியில்.
'உலக எழுத்தாளர்களுடன் நானுமா? இது எப்படி சாத்தியமாயிற்று?’
சில மாதங்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸின் இதயம் பேசுகிறது இதழிலிருந்து அதன் ஆசிரியர் திரு. முருகன் தொலைபேசியில் என்னை அழைத்து, 'உங்கள் பயோடேட்டாவை, தமிழக சுற்றுலாத்துறை இயக்குநரிடம் கொடுத்துவிட்டு வாருங்கள் ஷ்யாமா. உத்திரபிரதேச சுற்றுலாத்துறை பத்திரிகையாளர்களுக்கான சிறப்புச் சுற்றுலா ஒன்றிற்கு ஏற்பாடு செய்கிறார்கள். எல்லா பத்திரிகைகளுக்கும் இந்த அழைப்பை அனுப்பி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 'இதயம்' சார்பாக உங்களை பரிந்துரை செய்ய நினைக்கிறோம். தேர்வு நமது கையில் இல்லை. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கலாம் என்றார்.
அதிர்ஷ்டம் இருக்கத்தான் செய்தது.
சில நாட்களுக்குள் உ.பி. அதிகாரி சொல்லிய படியே நீண்டதொரு பயணப்பட்டியல், பங்கு கொள்ளும் இந்தியில், மற்றும் உலகப்பயண எழுத்தாளர்களின் விவரங்கள், எங்கெங்கே போகிறோம், எங்கெங்கே தங்குகிறோம், எங்கெங்கே சாப்பிடுகிறோம், எங்கெங்கே யார் யாரால் கெளரவிக்கப்படுகிறோம் என்று அனைத்து விவரங்களும் அடங்கிய தொகுப்பு வந்து சேர்ந்துவிட்டது.
பிரமித்துப் போய்விட்டேன்...
இவ்வளவு துல்லியமாக பயணத்திட்டம் தீட்டியிருக்கார்களே அப்படியே நடக்குமா? நடந்தது...
சில பத்திரிகையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரும் மிகவும் வியந்து என்னை ஒரு வெற்றிப்பட கதாநாயகி போல பார்த்தார்கள். இதயம் பேசுகிறது வெளியீட்டாளர் (காலம் சென்ற) திரு. செல்வரத்தினம் என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொல்லி, ஆசிரியர் முருகன் என்னை அவர் அலுவலத்திற்கு அழைத்துச் சென்றார்.
'என்னம்மா, பெரிய பெரிய ஆளுங்களோட ஊரைச் சுத்தி பார்க்கப் போறீங்க. நம்ம பத்திரிகை பெயரை நல்லா ஸ்தாபிதம் பண்ணிட்டு வாங்க. உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க. அவங்களுக்கெல்லாம் நம்ம சார்பா ஒரு பரிசுப்பொருள் எடுத்துட்டு போய் கொடுக்கிறீங்களா? என்றார். அத்தனை பேருக்கும் எப்படி தூக்கிச் செல்வது? என்ற யோசனையைப் புரிந்து கொண்டவராக, சுலபமா எடுத்துட்டுப் போறா மாதிரி தரேம்மா' என்றவர், பணியாட்களுக்கு உத்தரவு பிறப்பிக்க, மிக அழகிய தஞ்சாவூர் தட்டு போன்று கலைநயம் கொண்ட, வண்ண மயில் தோகை விரித்த நிலையில், எனாமல் பெயிண்டிங் செய்யப்பட்ட அழகிய தட்டுகளில் 'வித் பெஸ்ட் காம்பளிமெண்ட்ஸ் ஃபிரம் இதயம் பேசுகிறது’ என்று எழுத்துக்களை பொருத்தி என் வீட்டிற்கே அனுப்பி வைத்து, என்னையும் வாழ்த்தி அனுப்பினார்.’
இந்தப் பயணத்தில் நான் கற்றுக் கொண்டது ஏராளம். கற்றுக் கொள்ள வேண்டியவைகளின் விஸ்தீரணமும் புரிந்தது வட இந்திய மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கும் தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் இடையே இருக்கும் மாபெரும் வேறுபாடுகள், பிரச்சனைகள், தரம், என்று எல்லாம் புரிந்து கொள்ள முடிந்தது. பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் புரிந்தன. இந்தியப் பத்திரிகையாளர்கள், எதற்கும் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் அயல்நாட்டுப் பத்திரிகையாளர்கள் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதவர்களாகவும் இருப்பதாகப் பட்டது. அவர்கள் கோபம், தாபம், சந்தோஷம், வருத்தம் ஆச்சர்யம் என்று எந்த உணர்வையும் வெளிக் காட்டாமல் இருந்தார்கள். பல சந்தர்ப்பங்களில் 'எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது?’ என்ற வியந்து போனேன். அவர்களின் உலகளாவிய அறிவாற்றலும் வியக்கத்தக்கதாக இருந்தது.
இனி வாருங்கள் என்னுடன் உத்திரபிரதேச உலாவிற்கு...
- ஷ்யாமா.
Release date
Ebook: 18 December 2019
English
India