Step into an infinite world of stories
Fantasy & SciFi
சைக்கோபாத் கதைகளோ படங்களோ ஏன் மக்கள் மனதில் தீவிரமாக ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற கேள்விக்கான பதில் எந்த அளவு எளிமையானதோ அதே அளவு சிக்கலானதும்கூட. மனப்பிறழ்வு கொண்ட நபர் என்று யாரும் தனியாக இருக்கிறார்களா என்ன? மாறாக ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாக படர்ந்திருக்கக் கூடிய வெறுப்பு, அவமானம், இயலாமை, கழிவிரக்கம். பழிவாங்கும் உணர்ச்சிகளுக்கான வடிகாலாகத்தான் சைக்கோ பாத் கதைகள் திகழ்கின்றன. எல்லோராலும் சைக்கோபாத் குற்றவாளிகளாக மாறமுடியாது.
நீங்கள் ஒரு சைக்கோ பாத் குற்றவாளியைப் பற்றிய ஒரு செய்தியைப் படிக்கிறீர்கள், ஒரு கதையைப் படிக்கிறீர்கள், ஒரு திரைப் படத்தைப் பார்க்கிறீர்கள். அந்த குற்றவாளிக்கு பெரும்பாலும் ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கும். அதில் சிதைந்துபோன ஒரு பால்யமோ, துரோகமோ, கைவிடப்படுதலோ, அவமானமோ இருக்கும். அந்தக் காரணம் அந்தக் குற்றவாளின்மீது உங்களுக்கு உடனடியாக ஒரு அனுதாபத்தையும் கருணையையும் உண்டாக்குகிறது. அந்தக் குற்றவாளியை நீங்கள் கடுமையாக வெறுத்துக்கொண்டே நேசிக்கவும் தொடங்குகிறீர்கள்.ஏனெனில் அந்தக் குற்றமிழைக்கும் நபர் எப்போதும் உங்களுக்குள் இருக்கும் ஒரு இயலாமை மிக்க நபர்தான். அவர் உங்கள் ஆளுமையின் இருண்ட பக்கம். அந்தக் குற்றத்தில் உங்களுக்கு ஒரு மானசீகமான பங்கேற்பு உடனடியாக தொடங்குகிறது.
வஸந்தின் 'சத்தம் போடாதே' திரைப்படம் தமிழில் வந்த 'சிவப்பு ரோஜாக்கள்,' 'மூடுபனி,' வரிசையில் வைத்துப் பார்க்கவேண்டிய கிளாஸிகள் சைக்கோபாத் படம் என்பதில் சந்தேகம் இல்லை. வஸந்த் இந்த வரிசையில் இயக்கிய மற்றொரு மறக்க முடியாத படம் 'ஆசை'. என்பதும் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. ஆண் பெண் உறவுச் சிக்கல்கள் சார்ந்த குற்ற மனப்பான்மையைக் கொண்ட பல முக்கியமான படங்கள் தமிழில் தொடர்ந்து வந்திருக்கின்றன. மூன்று முடிச்சு, வாலி, ஜூலி கணபதி என அதற்கு ஒரு பட்டியலே இருக்கிறது.
சத்தம் போடாதே படத்தில் ஒருவன் விவாகரத்து செய்துவிட்ட தன் பழைய மனைவியை கடத்திச் செல்கிறான். அவள் வேறொருவனை திருமணம் செய்து கொண்டுவிட்டாள் என்பது அவனது ஈகோவை கடுமையாக காயப்படுத்துகிறது. அவனது ஆண்மைக்குறைபாடு காரணமாக அவள் அவனை விவாகரத்து செய்துவிட்டு மறுணம் செய்து கொள்கிறாள். ஒரு ஆணினுடைய பிரச்சினை ஒரு பெண் தன்னை நிராகரிப்பதல்ல, மாறாக தனக்குப் பதிலாக வேறொரு தேர்வை மேற்கொள்வதுதான். அப்படி அவள் வேறொரு தேர்வை மேற்கொள்வதன் மூலமாக நிராகரிக்கப்பட்ட ஆண் தன்னுடைய இருப்பு முற்றிலுமாக நிர்மூலமாக்கபட்டதாக உணர்கிறான். முக்கோண காதல்கள் பெரும் துயரங்களில் முடிவடையும் எல்லா சம்பவங்களிலும் இந்த அவலத்தைக் காணலாம். இந்த அவலத்தைதான் சத்தம் போடாதே படத்தில் வெகு நுட்பமாக திரைக்கதையாக்கியிருக்கிறார் வஸந்த். இது உண்மையில் நம்முடைய காலத்தின் ஆண்பெண் உறவுகள் சார்ந்த ஒரு மையமான பிரச்சினை.
சைக்கோபாத்தாக வரும் கதாபாத்திரத்தை வஸந்த் வெகு நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்.மிகவும் தந்திரமாக புத்திக்கூர்மையுடன் தங்கள் நோக்கங்களை நோக்கி நகரும் இத்தகைய இயல்பு கொண்டவர்கள் எந்தவிதத்திலும் சந்தேகிக்க முடியாதவர்களாக இருப்பார்கள். படம் முழுக்க இந்த கதாபாத்திரம் அவ்வளவு துல்லியமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மனைவியாக வரும் கதாபாத்திரமும் வஸந்த் உருவாக்கிய மறக்க முடியாத பெண் பாத்திரங்களில் ஒன்று. ஆண்மைக் குறைபாடு காரணமாக விவாகரத்துக் கோரும் பெண்களின் எண்ணிக்கை குடும்பநல நீதிமன்றங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் ஒரு தமிழ் சினிமாவில் இத்தகைய காரணங்களுக்காக ஒரு பெண் ஒரு ஆணை விவாகரத்து செய்வது அத்தனை எளிதல்ல.ஆனால் வஸந்த் இதை வெற்றிகரமாக கடந்து செல்கிறார். அவர் காட்டும் பெண் இந்த யுகத்தை சேர்ந்தவள். அவள் வேறொரு வாழ்க்கையை நோக்கி வெகு இயல்பாக கடந்து செல்கிறாள். அவளுக்கு அதில் சங்கடங்கள் ஏதுமில்லை. தமிழ் சினிமாவின் பெண் பிம்பத்தை கலைக்கும் தருணம் இந்தப் பாத்திரம்.
வஸந்த்தின் சத்தம் போடாதே திரைப்படத்தின் திரைக்கதை வடிவம் ஒரு சிக்கலான கதையை எப்படி நுட்பமாக சுவாரசியத்துடன் நகர்த்திச் செல்வது என்பதை பிரதிபலிக்கும் பிரதியாக இருக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
- மனுஷ்ய புத்திரன்
Release date
Ebook: 3 January 2020
English
India