Step into an infinite world of stories
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். அதில் தேறிவிட்ட மகிழ்ச்சி எனக்கு இப்போது இருக்கிறது.
சொல்கிற முறையினால் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களைக்கூட எல்லோருக்கும் இணக்கமாகச் சொல்லிவிட முடியும் என்று இந்த நாவலை எழுதியதன் மூலம் நான் கண்டுகொண்டுவிட்டேன்.
கதிரில் தொடர்கதையாக இது வந்தபொழுதும், வந்து முடிந்த பிறகும் நூற்றுக்கணக்கான வாசகர்கள் கடிதம் எழுதி இருந்தார்கள். வெளிவந்து முடிந்த பிறகு வாசகர் கடிதங்களை அடுக்கித் தொடர் கதைக்குப் 'புண்ணியாக வாசனம்' நடைபெறாத முதல் தொடர்கதை இதுதானென்று நான் நினைக்கிறேன். வந்த கடிதங்களையெல்லாம் கதிர் அலுவலகத்திலிருந்து நான் வாரிக்கொண்டு வந்து விட்டேன். இதற்கு வந்த வாசகர் கடிதங்களைப் பிரசுரிக்கக் கூடாது என்கிற நோக்கமெதுவும் எனக்குக் கிடையாது.
இந்த நாவல் இன்னொரு மாதிரியான ஆட்டம். எப்படிக் காய்களின் தன்மை மாறுவதில்லையோ அதுபோல் இங்கே பாத்திரங்களின் தன்மை மாறவில்லை. இந்த ரகசியம் தெரியாமல் பலபேர் சதுரங்கக் காய்களை வைத்துக்கொண்டு சொக்கட்டான் விளையாடினார்கள். எனவே தான் நான் இரண்டாவது ஆட்டம் ஆடினேன்.
கங்காவினுடைய பாத்திர இயல்புகளைக் கூர்ந்து படித்த வாசகர்கள் அவளுக்கு இப்படி ஒரு முடிவு ஏற்படப்போவதை முன்கூட்டியே உணர்ந்திருப்பார்கள். பாத்திரப் படைப்பு என்பது ஒரு பெயர் சூட்டிவிடுவதோ, அங்கவருணனை நடத்திவிடுவதோ அல்ல. மனம், அறிவு, சிந்தனை, குண இயல்பு, சூழ்நிலைகளின்போது வெளிப்படும் உணர்ச்சிகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அறிந்து அனுபவமாக வெளிப்படுவதைத் தீட்டுவதாகும். இதிலே என் விருப்பம், உங்கள் விருப்பம் ஆகிய விவகாரங்கள் புகுந்து அந்த 'இசைவை'க் கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் படைப்பாளிக்கு இருக்கிற பெரிய கடமை.
அதனை நான் நிறைவேற்றி இருக்கிறேன்.
கதை படிக்கிறவர்களுக்குத்தான் அது ஆரம்பித்துத் தொடர்ந்து முடிகிறது. எழுதுகிறவனைப் பொறுத்தவரை 'முடிந்து' போன ஒன்றைப் பற்றித்தான் அவன் எழுதுகிறான் என்று புரிந்து கொண்டால், 'ஐயோ! என்ன இப்படி முடித்துவிட்டீர்களே!' என்று அவனிடம் அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை என்பதை உணரலாம்.
ஒரு நாவலின் முடிவைக் குறித்துத் தாங்கள் மிகவும் வருந்தி, துயருற்றுக் கண்ணீர் விட்டதாக எழுதுகின்ற வாசகர்களுக்கு நான் ஒன்று சொல்லுவேன்: 'உங்களைவிட அதிகமாக வருந்தி, துயருற்று, கண்ணீர் உகுத்துத்தான் அந்த ஆசிரியன் அந்த முடிவை எழுதி இருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.' இராமன் சரயூ நதியிலே மூழ்கி மாள வேண்டுமென்று யார்தான் ஆசைப்படுவார்கள்?
சீதையைப் பூமி பிளந்து விழுங்கியதில் யாருக்கு சம்மதம்?
டெஸ்டிமோனாவைச் சந்தேகித்து ஓதெல்லோ அவள் கழுத்தை நெறித்துக் கொன்றது யாருக்கு உடன்பாடு?
அம்பிகாபதிக்குக் கொலைத் தண்டனையைச் சிபாரிசு செய்ததில் யாருக்கு மகிழ்ச்சி?
பாலை மணலில் அந்தக் காயலில் பைத்தியமாகத் திரிவதில் யாருக்குத் திருப்தி?
இந்த முடிவுகளை அறிந்தே அந்தக் கதைகளை அவர்கள் படைத்தார்கள். 'வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் உங்களைச் சுற்றி நிகழும் வாழ்வின் மோகத்தை மறந்து திரிகிறீர்களே, இதையும் பாருங்கள்' என்று காட்டுவதற்காகவே அவர்கள் அவற்றைப் படைத்தார்கள்.
நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? ரொம்ப நல்லது. அதற்காகத் தான் அந்த முடிவு! அந்த வருத்தத்தின் ஊடே வாழ்வின் போக்கைப் புரிந்துகொண்டால் வருத்தம் என்கிற உணர்ச்சி குறைந்து வாழ்வில் அப்படிப்பட்டவர்களை, அந்த நிகழ்ச்சிகளைச் சந்திக்கும்போது மனம் விசாலமுறும்.
ஆனால் நம்மவர்கள் ரொம்ப நல்லவர்கள். இராம கதையைப் பட்டாபிஷேகத்தோடு நிறுத்திக் கொள்ளுகிறார்கள். இந்தக் கதையின் முடிவு பிடிக்காதவர்கள் அந்த மாதிரித் தங்களுக்கு வசதியான ஓர் இடத்தில் தான் நின்று நிறுத்திகொள்வதுதான் நல்லது!
இந்த நாவலைப் பொறுத்தவரைக்கும் இதைப் பற்றிச் சொல்லப்பட வேண்டிய விஷயங்களெல்லாம் இதன் ஊடாகவே உணர்ந்துகொள்ளப்பட வேண்டியவை என்பதனால் இதன் நயங்களை எடுத்து நான் பொழிப்புரையாற்றப் போவதில்லை.
ஒரு முன்கூட்டியே திட்டத்துடன் ஒரு நியதியின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் இது. பொதுவாக வழக்கத்திலிருக்கின்ற பத்திரிகை நிர்ப்பந்தங்களையெல்லாம் என் பொருட்டுத் தளர்த்தித் தினமணி கதிரில் இதனை எழுத வைத்த எனது நண்பர் 'சாவி' அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பலபேரால் கேட்கப்பட்ட இன்னொரு கேள்வி, 'காலங்கள் மாறும்' என்று இருந்த தலைப்பு ஏன் இவ்விதம் மாற்றப்பட்டது, என்பது. அதைவிட இந்தத் தலைப்பு பொருத்தமாக இருப்பதாக நான் நினைத்ததைத் தவிர வேறு காரணம் ஒன்றுமில்லை.
சென்னை - 04.06.70
- த. ஜெயகாந்தன்
Release date
Ebook: 3 January 2020
English
India