Step into an infinite world of stories
4
Lyric Poetry & Drama
உலகம் எங்கும் யுத்தம். ஒரு நாள் ஏவுகணைகளை ஏவிக்கொண்டு நிலாவையும் இவர்கள் உடைத்துவிடக்கூடும். அப்போது 'உடைந்த நிலாக்கள்' உலவும். ஆனால் இந்த 'உடைந்த நிலா'க்களோ காதலால் 'உடைந்த நிலா'க்கள்!
தலைப்பையே ரசித்தேன்.
தேயும் நிலா, மறையும் நிலா என்ற சொற்றொடர்கள் உண்டு. 'உடையும் நிலா' என்ற சொற்கோர்வை ஆழமானது.
கோவை மாவட்டத்தில் பிறந்து பிரம்மாண்டமாக உயர்ந்த உடுமலை நாராயணக் கவியாரின் மண்ணில் உதயமாகி ஒளிவீசும் நிலா நம் கவிஞர் பா. விஜய். பாக்யா வார இதழில் பல வாரங்களாக இவரெழுதிய கவிதை வரலாற்றை, வரலாற்றுக் கவிதையைப் படித்தேன்... முழுவதுமாய்.
சரித்திர காலங்களில் கால் வைத்து, வெளிநாட்டிலிருந்து உள்நாடு வரை கவிதை வாகனத்தில் ஏறிச் சுற்றுப் பயணம் செய்தது போலிருந்தது. மறைந்து போன, மறைக்கப்பட்ட காதல் நிகழ்ச்சிகளைக் கவிதைகளாய்த் தொகுப்பது இதுதான் முதல்முறை என எண்ணுகிறேன்.
கி.பி., கி.மு.வில் நடந்த நிஜங்களை நம் கண்முன்னே நிறுத்துகிறார் கவிஞர்.
இதைப் படிக்கும் எல்லோருக்கும் தானும் காதலிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வையும், காதல் என்றால் என்னவென்று பொருள் விளக்கத்தையும் கொடுக்கும்.
நல்ல சொல்லாட்சி - சிறந்த கற்பனை வளம் - நிறைந்த அர்த்தம் - ஆகியவையோடு இந்நூல் நெய்யப்பட்டிருக்கிறது.
'உடைந்த நிலா’க்களில் என்னைக் கவர்ந்த நிலா 'கம்பர் செய்த கொலை' என்ற கவிதை! என் இளம் வயதில் பாகவதர் நடித்து வெளிவந்த 'அம்பிகாபதி' படம் பார்த்திருக்கிறேன். அதை மீண்டும் கவிஞர் பா.விஜய் எழுதிய எழுத்தின் மூலம் இரண்டாம் முறையாய்ப் பார்த்த மனநிறைவு ஏற்படுகிறது.
உதடுகளோடு உதடுகள் ஒட்டாமல் முத்தம் தரும் அமராவதியிடம், "தமிழில் உயிரெழுத்துக்களை உச்சரிக்கையில் உதடுகள் ஒட்டாதது போல் உன் முத்தம் இருக்கிறதே!'' என்று கூறி, ''நீயே சொல்லிப் பார்... அ... ஆ... இ... ஃ வரை உதடுகள் ஒட்டாது!" என்று அம்பிகாபதி பேசுவதாக அமைத் காட்சியமைப்பும், வசன முறையும் ரசிக்கத் தக்கது.
சங்க காலத்தில் இருந்து இக்கவிதையை எழுதியிருந்தால், குலோத்துங்கச் சோழனே, பரிசில் பல தந்து அரசவைப் புலவராக்கிக் கெளரவித்திருப்பான். அதே போ, 'பெண்மையே சரண’த்தில் சூரியனுக்குச் சொந்தமான பூ தாமரையா? சூரிய காந்தியா?' என்று விவாதத்தோடு கவிதைகளை ஆரம்பித்துத் தீர்ப்புத் தரும் முறை அற்புதமானது.
'முகாரி ராகத்தில்
பூ + தீ = வாலிபம்
வாலிபம் + பூ = காதல்
வாலிபம் + தீ = காமம்
ஆசை + கவிதை = பருவம்
பருவம் + கவிதை = காதல்
பருவம் + ஆசை = காமம்
என்று கவிதைக் கணக்குப் போட்டு என் புருவங்களை மேலுயர்த்தியிருக்கிறார் கவிஞர்.
புதுக்கோட்டைக்கு அருகில் நடந்த ‘வெள்ளையம்மா வெள்ளைச்சாமி' நிஜங்களைத் தத்ரூபமாக அந்தக் கிராமிய மண் வாசனையடிக்கும் வார்த்தைகளோடு பின்னிப் பின்னிக் கவிதை புனைந்திருக்கும் முறை புவியீர்ப்பு போல் ஈர்க்கிறது.
தஞ்சையின் சரபோஜி மன்னரின் வாழ்வைப் பற்றிய கவிதையைப் படித்ததும் என்னுள் பழைய நினைவுகள் மனதில் புள்ளி வைத்துக் கோலம் போட்டன. நான் சரபோஜி மன்னரின் நிறுவனத்துப் பள்ளியில்தான் படித்தேன்.
முத்தம்பாள் சத்திரத்தில் அவள் நினைவாக ஒரு கவியரங்கம் நடத்த வேண்டும். உண்மைகளை வெளியே கூற வேண்டும் என்ற நீண்டநாள் ஆசையைக் கவிஞர் பா.விஜய் பூர்த்தி செய்து விட்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவை முத்தம்பாள் சத்திரத்தில் நடத்த வேண்டும் என்பது என் ஆசை!
நான் படித்த பள்ளியின் அஸ்திவாரத்தடியில் மறைந்திருந்த ரகசியத்தை வெளிக்கொணர்ந்த இக்கவிதைத் தொகுப்பிற்கு அணிந்துரை வழங்குவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
உளிச் சத்தத்தில் ஒரு பெண்ணை வர்ணிக்கையில்
'தலைகீழாய் தொங்கும்
தங்கநிற வினாக்குறி போன்ற
நாசி!
ஒரு விரால் மீன்குஞ்சு
தாராளமாய் வசிக்குமளவு
இருக்கும் தொப்புள்”
என்ற கவிதையில் முந்தைய வரிகளில் கவிஞரின் உவமை நயமும், பிந்தைய வரிகளில் கவிஞரின் வயதுக்குள் இருக்கும் வாலிபத்தின் துள்ளலும் தெரிகிறது. இந்நூலில் ஒவ்வொரு கதையைக் கவியாக்கம் செய்கிற போதும், அதைத் துவங்குகிற முறை வித்தியாசமான முறையாகக் காணப்படுகிறது.
இந்நூல் ஒவ்வொரு கதையைக் கவியாக்கம் செய்கிற போதும், அதைத் துவங்குகிற முறை வித்தியாசமான முறையாகக் காணப்படுகிறது. இந்தப் புதிய முறை கவிதைகளுக்கு மேலும் மெருகூட்டுகிறது.
திரைப்படப் பாடல்களில் பாடல் எழுதிப் பவனி வருகிற கவிஞர் பல புதிய படங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
கவிஞருக்கு என் வாழ்த்துகள்! அனைவருக்கும் என் வணக்கங்கள்!
இப்படிக்கு
உவமைக் கவிஞர்
சுரதா
Release date
Ebook: 18 December 2019
English
India