Step into an infinite world of stories
எழுதப்படும் புதினத்துக்கெல்லாம் முன்னுரை எழுதவேண்டிய அவசியம் இல்லை. மிக அவசியமானால் ஒழிய ஒரு சமூக நாவலுக்கு விளக்கமோ ஆசிரியரை அதை எழுதத்தூண்டிய காரணமோ அளிக்க வேண்டியதில்லை. ‘விட்டுவிடுதலையாகி’ என்ற இந்த புத்தகத்திற்கு அதற்கான தேவை இருப்பதாக உணர்கிறேன்.
இது முழுமையாக ஒரு புனை கதை என்றாலும் வரலாறு சம்பந்தப்பட்டது. உண்மையில் நிகழ்ந்த சில சரித்திர நிகழ்வுகளை ஊடாக வைத்துப் பின்னப்பட்டது. மேல் ஜாதி ஆதிக்க சமூக மத அமைப்பில் இருந்த சட்ட திட்டங்களுக்கு முன்னவர்களுக்கு செளகரியமான நியம நிஷ்டைகளும் பெண்களுக்கு அநீதி இழைப்பதாகவே, அநீதி என்று கூட உணரப்படாமல், இருந்தன, இப்பவும் பலவித ரூபத்தில் இருக்கின்றன என்பதைப் பற்றி இருவேறு கருத்து இருக்கமுடியாது. நான் ஒரு ஆய்வுக்காக சேகரித்த விவரங்களுமே இந்த நாவல் எழுதுவதற்கான முக்கிய உந்துதல். இதில் வரும் கதை மாந்தர்கள் அனைவரும் கற்பனைப் பாத்திரங்கள்.
பல ஆண்டுகளுக்கு முன் இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியையாகப் பணி ஆற்றியபோது ஒரு முறை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கலைகளில் ஆர்வமுள்ளவருமாகவும் இருந்த திரு. குகனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் எதேச்சையாகச் சொன்ன ஒரு வாக்கியம் என்னை ஆழமாகப் பாதித்தது. அதைப் பற்றி மேலும் ஆராயும் ஆவலைத்தூண்டிற்று. “நாட்டியத்தை அத்தனை உன்னத நிலைக்குக் கொண்டு போன பாலாவைப் பற்றி இப்பொழுது யாரும் பேசுவதில்லை” என்றார். ‘கலைச் சேவையை வேள்வியாக நினைத்த அந்த காலத்து தேவதாசிகளின் சேவையையும் பங்கையும் மறந்து போனதைவிட வேதனை தரும் ஒரு முக்கிய விஷயம் அவர்களுடைய ஆட்டம் ஆபாசம் என்று பிற்கால உயர் ஜாதி நாட்டிய மணிகள் சொல்வது’ என்றார். ‘கலை என்பது தினசரி வாழ்வோடு சம்பந்தப்பட்ட அந்தக் குடும்பங்களில் எல்லாம் கலைக்கு இருந்த அர்ப்பணிப்பும் லயிப்பும் ஞானமும் மற்ற குடும்பங்களில் நிச்சயம் இருக்க முடியாது’ என்று அழுத்தமாகச் சொன்னார் திரு. குகன் அவர்கள்.
கட்டுரை எழுதும் சாக்கில் சில மிக உன்னத கலைஞர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. தஞ்சாவூரில் பிரபல பாடகி சாத்தியக்குடி மீனாட்சி சுந்தரத்தம்மாள், திருவிடை மருதூரில் வசித்த நாட்டிய மேதை ஜெயலக்ஷ்மி - இவருடைய குற்றாலக் குறவஞ்சி மிகப் பிரசித்தம், புதுக்கோட்டையில் தபஸ்வியைப் போல வாழ்ந்த திருக்கோக்கர்ணம் ரங்கநாயகி, (மிருதங்க வித்துவான்), சிதம்பரத்தில் வசித்த திருவாரூர் கமலாம்பாள் எல்லோரையும் சென்று பார்த்து அவர்களுடன் அளவளாவியது மறக்கமுடியாத அனுபவம். கலையைப் பற்றிப் பேச்செடுத்ததும் அவர்கள் முகத்தில் தோன்றிய அசாதாரண ஒளியும், ஆர்வத்துடன் எனது வேண்டுகோளுக்கு உடனடியாகப் பாடியும் உட்கார்ந்தபடியே அபிநயித்தும் காட்டியபோது எனக்கு தெய்வதரிசனம் ஆனதுபோல சிலிர்ப்பு ஏற்பட்டது. எல்லாரும் அப்போது எழுபது, எண்பது வயது கடந்தவர்கள்.
நான் எழுதிய கட்டுரைக்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பிற்று. அந்த எதிர்ப்பு முதலில் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. பிறகுதான் எழுதிய விதம் ஏன் ஏற்புடையதாக இருக்கவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அது அவர்கள் மறக்க நினைத்த அமைப்பின்மேல் என்று மெல்லத்தான் புரிந்தது. இந்த வெறுப்பின் ஆழம் என்னை திகைக்க வைத்தது. அந்த முழுமையான நிராகரிப்புக்குப்பின் பல சோகக் கதைகள் புதைந்திருக்கும் என்று தோன்றிற்று. அந்தக் கதைகளைத்தேடிச் சென்ற எனது பயணமே இந்த நாவலின் வித்து.
நான் இங்கு ஒரு சமூக வரலாற்றை எழுதவில்லை. அதன் தாக்கத்தின் விளைவை எனது கற்பனைப் பாத்திரங்களின் மூலம் கண்டுகொள்ள முனைந்தேன். மூன்று தலைமுறை பெண்களின் வாழ்க்கைப் போராட்டக் கதையாக விரிந்தது. இதன் கதாநாயகி முதல் தலைமுறையைச் சேர்ந்த கஸ்தூரி, அவளது கால்கட்டம் கொந்தளிப்பு மிகுந்த காலம். பல கேள்விகள் எழுந்த காலம். காற்றில் புரட்சி இருந்தது. சுதந்திர வேட்கை இருந்தது. அரசியல் உணர்வு எல்லாரையும் தாக்கிற்று. இவற்றிலிருந்து ஒட்டாமல், தனது கலைமட்டுமே தனக்குப் பிரதானம் என்று வாழ்ந்தவள் கஸ்தூரி. அவளது கலை அவளுக்கு ஏற்படுத்திய பரவசத்தையும், அவளது நம்பிக்கைகள் சிதறுண்டு போனதும் அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் நானும் அனுபவித்தேன். புரட்சியை ஏற்படுத்தும் கலகக்குரலை எழுப்பும் லக்ஷ்மி பெண்ணிய சரித்திரத்தில் தனி இடம் பெற்றிருக்கும் டாக்டர் முத்துலக்ஷ்மியின் வார்ப்பில் அமைந்த பாத்திரம். ஆனால் சரித்திர குறிப்புகள் மட்டுமே அந்தப் பாத்திரத்துடன் சேர்ந்தவை. முத்துலக்ஷ்மியின் நிஜ வாழ்வுக்கும் எனது கதாபாத்திரம் லக்ஷ்மிக்கும் துளியும் சம்பந்தமில்லை. புனைகதை எழுதுபவரின் எழுத்துச் சுதந்திரத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன், அவ்வளவே.
- வாஸந்தி
Release date
Ebook: 3 January 2020
English
India