ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
பெண்ணெழுத்து
பெண்மக்களின் கையடக்க கற்பனையாய் காட்சிபடுத்தப்படும் பொம்மைகளுக்கு, பின்னலிட்டு, பொட்டிட்டு, சேலை கட்டி அழகு பார்க்கும் வித்தையை, வணிகமாக்கி, விதவிதமான வண்ணங்களில் உடை, தலையலங்காரம், காலணி போன்றவற்றை மாற்றச்சொல்லி, அவர்களுக்கு விளையாட கொடுத்து இதுதான் உன் உலகம் என்று பெண்ணுக்கு கோடிட்டு சொல்லும் வியாபார உலகம் இது. பின்க், நீலம் என்ற நிற இலக்கணத்தை ஆண்-பெண் பிள்ளைகளுக்கு மாற்றிவிட்டால், குறையாய் கருதும் மேலைநாட்டு கலாச்சாரக் கூறுகளை இங்கும் கடன்பெற்று, பெண்பிள்ளை என்னும் முத்திரைக்கு வலு சேர்த்து வாழ்கிறதும் இச்சமூகம்தான்.
இதிலிருந்து மீறிய சமூக கட்டுடைப்புகள் எங்கும் நிகழ்ந்து வந்தாலும், கலாச்சார தழைகள், சாதீய கூறுகள் இங்குமங்குமாய் வியாபித்து பெண்ணின் கால்களைப் பிடித்திழுக்காமல் விடுவதில்லை. பெண்ணின் தேடல், பெண்ணின் பார்வை, பெண்ணின் இன்னல், பெண்ணின் மகிழ்ச்சி என பெண்ணின் உணர்வுகளை பெண்ணே எழுத இங்கு ஏகமாய் சக்தி தேவைபடுகிறது அவளுக்கு. பெண்ணைக் குறித்த பார்வை பெண்ணினிடமிருந்தே துவங்கவேண்டும்; அப்போதுதான் பெண்ணின் மனதில் காலம்காலமாய் ஏற்றப்பட்டு புரையோடிப்போன ஆண் சிந்தனை உடையும்; பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று சொல்லித் திரியும் பட்டிமன்ற சொல்லாடல்கள் மாறும்; அதை ரசிக்கும் பெண்களின் உளப்பாங்கும் மாறுபடும் என்பனவெல்லாம் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன.
இதை மாற்றி கையாளும் பெண்ணெழுத்துகள் இங்கு பிறக்கும்போதெல்லாம் இவையெல்லாம் ஓர் எழுத்தா என்னும் ஆண் விமர்சனங்களைக் கடந்துதான் வரவேண்டியுள்ளது. பெண் எழுத்துகளைக் கண்டுக்கொள்ள மனமில்லாது, ஒதுக்கிவைத்து இயங்கும் இந்த இலக்கிய உலகம் ஒரு மாபெரும் மாய உலகம்தான். எழுத்தில் என்ன ஆண் எழுத்து பெண் எழுத்து என்று கேள்விகளையும் கூட அதுவே வைக்கிறது. வீடு, குழந்தைகள் மட்டுமா உலகு என்னும் வியத்தகு கேள்வியையும் முன்னெடுக்கிறது, அதன் இயக்கத்தில், அதற்குள் முயங்கும், முடங்கும், முடங்க வைக்கப்படும் பெண்களால்தான், ஆண் உலகம் விரிந்து பரந்து தன்னிச்சையாய் இயங்குகிறது என்பதயறியாமல்.
'இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை, பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள்.’ எழுத்தாளர் அம்பையின் எதிர்க்கும் இந்த குரலுடன் இயைந்து செல்கிறது பெண் எழுத்தாளர்களின் மனபோராட்டமும். பெண்ணெழுத்துகளில் சுட்டிக்காட்டப்படும் சமூக முரண்கள் எல்லாம் அவளின் குறைகளாய் பேசப்படுகின்றன. தனிமனித சாடல்கள் அவளை நோக்கியே வருகின்றன. இதைதான் அம்பை அவர்கள் சுட்டுகிறார்.
ஆண் எழுதும் எழுத்துகளில் பெண் பார்வை இல்லையா, அவர் எழுதவில்லையா, இவர் எழுதவில்லையா என்னும் கேள்விகள் வைக்கப்பட்டன சமீபத்தில் கலந்துக்கொண்ட ஒரு கலந்தாய்வில். மீசை முடி குறித்து எழுத ஓர் ஆணுக்கு அதிக உரிமை இருக்கிறது என்பதை மறுக்கமுடியாதவர்களால், பெண்ணுடலைக் குறித்து பெண் எழுத, அதே உரிமையும் உணர்வும் இருக்கிறதென்ற கூற்றையும் மறுக்கமுடியாது.
ஆண் பெண் எழுத்து என்று பாகுபடுத்த வேண்டிய அவசியமின்றி போகும் காலம்வரை பெண் தன் உணர்வுகளை சிந்தனைகளை சமூகபார்வையை எழுத்தாய் படைக்கவேண்டிய அதிக கட்டாயத்தில் இருக்கிறாள். இங்கே பெண்ணெழுத்து மிக தேவையாய் இருக்கிறது. பெண்ணெழுத்தை சமமாய் பாவிக்கும்வரை இந்த மெல்லிய கோடு அழிக்கப்படாமல் இருக்கும்.
என்னுடைய இந்த சிறுகதை நூலான ‘மண்சட்டி’ என்பதையும் இவ்வரிசையில் வைக்கிறேன். இதில் பெண்ணை முதன்மைபடுத்திய கதைகள், அவளை உணர்வதற்கான சந்தர்ப்பங்களைக் காட்டும் கதைகள் இருக்கின்றன என நம்புகிறேன். இந்த கதைகள் பெண்ணெழுத்தாய் உங்கள் முன் நிற்கின்றன. இதற்கு அணிந்துரையாய் வாசகனின் எண்ணவோட்டத்தையே எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.
தொடர்புக்கு,
artahila@gmail.com
9443195561
‘வலசை’ என்னும் சிறுகதை, ‘அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டி 2017’ யில் இரண்டாம் இடம் பெற்றது என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன். இதிலிருக்கும் கதைகளில் சில, கல்கி, கணையாழி, கனவு போன்ற இதழ்களில் வெளிவந்தவை. கதைகளை வெளியிட்டு, வாசகர்களின் வாழ்த்துகளையும் கருத்துகளையும் புரிந்துக்கொள்ள உதவிய இதழாசிரியர்களுக்கு அன்பும் நன்றியும்.
அகிலா,
மனநல ஆலோசகர்,
கோவை.
วันเปิดตัว
อีบุ๊ก: 18 พฤษภาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
