Step into an infinite world of stories
Fiction
அன்புள்ள உங்களுக்கு...
வணக்கம்.
நான் இங்கு நலம். நீங்கள் எங்கோ அங்கு நலமா?
ஊரில் மழை உண்டா? சென்னையில் சரியான மழை இல்லை. மழைக்கான ஏக்கம்தான் இருக்கிறது. ரேஷன் அட்டை வாங்கி விட்டீர்களா? உங்கள் பெயர், முகவரி சரியாக இருக்கிறதா?
இந்த மாதிரி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, தகவல்களையும், மன உணர்வுகளையும் பரிமாறிக் கொள்ள மிகச் சிறந்த சாதனமான கடிதத்தை இப்போது மெல்ல மெல்ல மறந்து கொண்டேயிருக்கிறோம். மக்களிடம் கடிதம் எழுதும் பழக்கம் மிகமிகக் குறைந்து விட்டது. தொலைபேசி, அலைபேசி, வலைபேசி என்று நேரடியாக பேச வாய்ப்புகள் அதிகரித்துப் போனதால் எழுத்து தேய்ந்து பேச்சு அதிகமாகி விட்டது. தவிர இண்ட்டெர்நெட்டில் ஈமெயில் கடிதங்களும், செல்போனில் நறுக்குச் செய்திச் சௌகரியங்களும் நம்மை ஆக்கிரமித்து விட்டன. இந்த நறுக்குச் செய்திச் சேவை காரணமாக வாழ்த்து அட்டைகள் கூட வசீகரம் இழந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எதிர் காலத்தில் பேனா, பென்சில்களின் தேவையே இருக்காது என்கிறார்கள். ஆனால் கடிதங்களில் உள்ள ஆத்மார்த்தத்தை, நிஜ உணர்வுகளை, அன்பின் ஆழத்தை இவையெல்லாம் ஈடு செய்ய முடியாது என்று கருதுபவன் நான். திருமணத்திற்கு வாழ்த்துத் தந்தி அனுப்புவதை விட, நான்கு வரி வாழ்த்துக் கடிதம் எழுதுவதே எனக்குப் பிடிக்கும். இன்றைக்கும் முன்போல் நீளமாக இல்லாவிட்டாலும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கடிதம் எழுதும் பழக்கத்தை விடாமல் தொடர்கிறேன்.
ஆகவே... குங்குமம் வார இதழில் கதைக்குப் பதிலாக முதன்முறையாக ஒரு கட்டுரைத் தொடர் எழுதச் சொன்னபோது, அதை வாரா வாரம் ஒரு கடிதமாக அமைத்து கடிதத் தொடராக எழுதினேன். இந்தச் சமூகத்தின் மேல் எனக்குள்ள பரிவான, கவலையான, அக்கறையான பார்வைகளை கதைகளில் மறைமுகமாகப் பதிவு செய்து வந்திருந்தாலும் இந்தக் கடிதத் தொடர் மூலம் எனது எண்ணங்களை நேரடியாகப் பகிர்ந்து கொள்ள முடிந்தது.
இந்தத் தொடருக்கு வாசகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ந்தேன். அதே மகிழ்ச்சி இப்போது இந்தத் தொடர் புத்தக வடிவில் உங்களிடம் சேர்ந்திருக்கும் போதும் மகிழ்கிறேன்.
பிரியங்களுடன்...
பட்டுக்கோட்டை பிரபாகர்
Release date
Ebook: 18 December 2019
English
India