Step into an infinite world of stories
Fiction
அன்புள்ள உங்களுக்கு...
வணக்கம்.
இந்தத் தொகுப்புகளில் எனது இருபத்தி ஏழு வருட சிந்தனைச் சிதறல்கள் பரவிக் கிடக்கின்றன. அந்தந்த சமயங்களில் என்னை பேனா எடுக்க வைத்த ஒரு சம்பவமோ, ஒரு செய்தியோ, ஒரு சிந்தனைப் பொறியோ, ஒரு கோபத் துடிப்போ, ஒரு இயலாமை வெறுப்போ, ஒரு ஆசையோ, ஒரு கற்பனைத் துகளோ உருவம் மாறி சிறுகதைகளாகியிருக்கின்றன. நமது புகைப்பட ஆல்பத்தில் பின்னோக்கிச் செல்ல செல்ல நமக்குள் ஒரு ஆச்சரியம், வியப்பு, சந்தேகம் என்று கலந்து கட்டி உணர்வுகள் அலையடிக்குமே... அதே உணர்வுகளுடன் பல வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்ட இந்தக் கதைகளை நான் பார்க்கிறேன். எல்லா புகைப்படங்களிலும் கண்கள், மூக்கின் அமைப்பு எப்படி மாறாத அடையாளங்களாக இருக்குமோ, அப்படி எழுத்து நடையின் அடையாளங்கள் மட்டும் அங்கங்கே மாறாமல் இருப்பதையும் உணர்கிறேன்.
நான் ஏன் சிறுகதை எழுதினேன், எழுதுகிறேன் என்று யோசித்தால் முதலில் மனதிற்கு வருகிற பதில் ‘பிடித்திருக்கிறது' என்பதேயாகும். ஐந்தாறு பக்கங்களில் ஒரு விஷயத்தை பளிச்சென்று சொல்ல சிறுகதைதான் மிகச் சிறந்த வடிவமாக இருக்கிறது.
நான் ஒரு மிகச் சிறந்த படிப்பாளி இல்லை. உலக இலக்கியங்களை கரைத்துக் குடித்தவன் இல்லை. பல மொழிகளில் சாதித்த நிறைய எழுத்தாளர்களை எனக்கு பெயரளவில் மட்டுமே பரிச்சயம். எனவே இவரைப் போல இந்த மாதிரி விஷயங்களை சிறுகதையில் சொல்ல வேண்டும் என்றோ... அவரைப் போல இந்த மாதிரி அமைப்பில் சிறுகதைகள் எழுத வேண்டும் என்றோ திட்டமிட்டு எழுதிய எழுத்துக்கள் அல்ல என்னுடையவை.
என் குடும்பத்தில் யாரும் பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் கூட எழுதிப் போட்டதில்லை. எழுதத் துவங்கிய காலத்தில் காகிதத்தின் ஒரு பக்கம் மட்டுமே எழுதவேண்டும் போன்ற அடிப்படை விஷயங்கள் கூட எனக்குத் தெரியாது. பத்திரிகைகளில் சிறுகதைகளோடு ஓவியங்களும் வருவதைப் பார்த்து ஆரம்ப காலத்தில் ஓரிரண்டு சிறுகதைகளோடு உள்ளூர் ஓவியர்களிடம் ஓவியம் வரையச் சொல்லி வாங்கி இணைத்து அனுப்பி அபத்தம் செய்திருக்கிறேன்.
துவக்க காலத்தில் என் படைப்புகளை அடிக்கடி அச்சில் பார்க்கிற அவசரமும் பரபரப்பு ஆசையும் அதிகம் இருந்ததால் என் சிறுகதை முயற்சிகளும் சிறுகதைகளாக வந்திருக்கின்றன. எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்கிற முதிர்ச்சியும், தேர்வு மனப்பான்மையும் எழுத எழுத எனக்குள் இயல்பாக இணைந்து கொண்டன. இயல்பாக இணைந்து கொண்டன. எழுதியவற்றில் பல கதைகளை பத்திரிகை ஆசிரியர்களும் வாசகர்களும் பாராட்டிய போதுதான் சிறப்பான கதையின் அம்சம் என்ன என்கிற தெளிவு பிறந்தது. பல கதைகள் பரிசு பெற்றுத் தந்தபோதுதான் அதீதமான தன்னம்பிக்கை ஏற்பட்டது. பல கதைகளை வேற்று மொழிகளில் மொழி பெயர்க்க அனுமதி கேட்டு கடிதங்கள் வந்தபோது தான் என் சிறுகதைகளின் தகுதி மேல் எனக்கு மரியாதை பிறந்தது. எனது சிறுகதை ஒன்று ஒரு கல்லூரியில் தமிழ் இளங்கலை மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்ட செய்தி அறிந்தபோது அந்த அங்கீகாரத்தில் உள்ளம் நெகிழ்ந்தது. சின்னத் திரையில் எனது பல சிறுகதைகள் குறும்படங்களாக வடிவம் பெற்ற போதும் அதே மனநிலைதான்.
இந்த மொழிமாற்றம், பரிசுகள், வடிவமாற்றம் என்கிற பிற்கால அங்கீகாரங்களை குறி வைத்து அதற்காக மெனக்கெட்டு எந்த ஒரு சிறுகதையையும் நான் எழுதவில்லை என்பதே உண்மை. எனக்கு சரியென்று பட்ட கருத்தை எனக்கு இயல்பாக வந்த வடிவத்தில் எழுதி வந்தபோது நான் மனதில் வைத்துக் கொண்ட ஒரே ஒரு விஷயம்... தெளிவு மட்டுமே. என் கதைகள் சாதாரண வாசகர்களுக்கும் எளிமையாக புரிய வேண்டும் என்கிற ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்குள் இருந்து வந்தது, வருகிறது. இந்தத் தொகுப்புகளில் சிறப்பான கதைகள் என்று பலரால் அங்கீகரிக்கப்பட்ட கதைகளோடு, என் முயற்சி, பயிற்சி கதைகளும் கலந்து கட்டிதான் இடம் பெற்றிருக்கின்றன. ஆங்காங்கே அவை இடறினால், நெருடினால் மன்னிக்க.
இந்த சமயத்தில் நான் நெகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்க வேண்டிய நபர்களில் முதலில் என் பெற்றோர். வர்த்தக வம்சத்தில் பிறந்த என்னை கலைத் துறையில் அவர்கள் முழு மனதோடு ஊக்குவிக்காமல் போயிருந்தால் இந்தப் புத்தகம் உங்கள் கையில் இருந்திருக்காது. இந்தக் கடிதத்தை நீங்கள் படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். அதேப் போல் எனக்கு அமைந்த நல்ல நண்பர்களும், 'உனக்கு வேற வேலை இல்லையா?' என்று சலிப்பு காட்டாமல் தொடர்ந்து ஊக்குவித்தார்கள்.
- பட்டுக்கோட்டை பிரபாகர்
Release date
Ebook: 18 December 2019
English
India