Step into an infinite world of stories
ஒரு பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை செய்வதில் ஒர் அனுகூலம் உண்டு. "சார், சார், என் கதையைப் பிரசுரியுங்கள் சார்”, என்று ஒரொரு பத்திரிகை ஆபீசாகப் போய்க் கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை. நாம் எந்தப் பத்திரிகையில் வேலை செய்கிறோமோ, அந்த ஆசிரியரை மட்டும் கெஞ்சினால் போதும். நான் ஒருவகையில் அதிருஷ்டக்காரன். குமுதம் ஆசிரியர் பெருமதிப்புக்குரிய எஸ். ஏ. பி. அவர்களை எனது ஆசானாக அடைந்தது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும். தனது இலாகாவினரை அவரே விதம்விதமாகக் கதைகள் எழுதச் சொல்வார்.
அவர் தந்த பயிற்சியும், கற்றுத் தந்த உத்திகளும், செய்த இலக்கியத் தொந்தரவுகளும் ஏராளம். அதி அற்புதமான ரசிகர். ‘ரா. கி. ர, புனிதன், ஜ. ரா. சு' என்ற மூவரை மட்டும் தனது ஆசிரிய இலாகாவில் வைத்துக் கொண்டு, இந்தியாவிலேயே அதிக விற்பனையுள்ள பத்திரிகை என்று குமுதத்துக்கு எப்படி அவர் பெருமை சேர்த்தார் என்று பலரும் ஆச்சரியப் பட்டனர். அதற்குக் காரணம் இருந்தது. ஆசிரியர் திரு. எஸ். ஏ. பி. அவர்கள் அந்த மூவரைப்போல் முப்பது மடங்கு ஒரொரு இதழுக்கும் உழைத்துக் கொண்டிருந்தார். தாமும் அதிஅற்புதமாக எழுதிக்கொண்டு தனது சகாக்களையும் எழுத வைத்து, அவர்களோடு தனது ரசனைகளையும் பகிர்ந்துகொண்டு, அவற்றை விதம் விதமான வடிவங்களில் எழுத்துக்களாக்கி மக்களுக்கு விநியோகித்தார். எல்லா வகைச் சுவைகளிலும் என்னை எழுதவைத்தார்.
நகைச்சுவை உணர்வில் அவர் அரசு. அவர் அருளால் உருவாகிய பாத்திரங்களே அப்புசாமி - சீதாப்பாட்டி தமிழகத்தில் முப்பத்தைந்து வருஷங்களாக உலவி வருகிற கதாபாத்திரங்களாக அவை இன்னும் இருந்து வருவதற்குக் காரணம் எனது ஆசான் நகைச்சுவை வள்ளல் திரு. எஸ். ஏ. பி. அவர்கள்தான். ஒரொரு கதையை உருவாக்குவதிலிருந்து அச்சில் வெளிவரும்வரை கூடவே நிழலென வருவார். மற்றக் கதைகளைவிட அப்புசாமி கதைகள் உருவாக்குவதில் அவர் பங்கு அதிகம். காட்டிய சிரத்தை அதிகம் என்றே சொல்வேன். அதில் அவரும் நானும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு குழந்தையின் கையில் கண்ணாடி ஜக்கைக் கொடுத்து அனுப்பிவிட்டுக் கூடவே போகிற அம்மா மாதிரி அவர் எனக்கு அப்புசாமி கதையில் கூடவே வருவார்.
அப்புசாமியை எப்படியெல்லாம் வறுத்து எடுக்கலாம் என்று இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கண்ணில் நீர் வருகிற மாதிரி சிரிப்போம். சுலபத்தில் திருப்தி அடைந்துவிட மாட்டார். இன்னின்ன மாதிரி எழுதினால் ஒருத்தரை அழவைக்க முடியும். இப்படி எழுதினால் சிரிக்க வைக்க முடியும் என்ற உத்திகளை வெகு நன்றாக அறிந்தவர். மற்றவர்களிடம் இருந்து அதை வெளிக்கொணரப் படாதபாடுபடுவார். நகைச்சுவை என்பது வெறும் gaS அல்ல. முதலில் ஒரு கதை இருந்தே தீரவேண்டும். அப்புறம் கொண்டு வாருங்கள் அதில் அப்புசாமியை என்று கூறுவார். நகைச்சுவை என்ற பெயரால் கதை அம்சம் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதில் வெகு கவனமாக இருந்தார்.
வெகு நாட்கள் வரை அப்புசாமி கதைகளை சிறுகதைகளாகவே அனுமதித்தார். சிறுகதை என்றால் கைக்கு அடக்கம். ஒரு நல்ல சம்பவமும் twistம் கொடுத்தாலே வாசகர்கள் திருப்தி அடைந்து விடுவார்கள். ஆனால், நாவல் என்பது, அதுவும் நகைச்சுவை நாவல் என்பது, நம்மை எங்கோ கொண்டுபோய்த் திசை தெரியாது அழுத்திவிடக்கூடும். ஆகவே நகைச்சுவை நாவல் எழுதுவது மிகவும் கஷ்டமான வேலை என்பதால் அப்புசாமி நாவலாக உருவாகாமலே இருந்தார். படிப்படியாக நாவலாகவும் உருவானார்.
இந்த வகையில் அப்புசாமி சிறுகதைகள், நாவல்கள் அனைத்தையும் புத்தக வடிவில் வெளியிட்டிருக்கும் பூம்புகார் பதிப்பகம் தமிழகத்தில் பதிப்புத் துறையில் தனக்கென ஒரு தடம் போட்டு, புடம் போட்ட தங்கமாய் விளங்கிவருகிறது. அப்புசாமியை சிறுகதைகளாக, தொடர்கதைகளாக, குறுநாவலாக உருவாக்கி யாயிற்று, “சித்திரக் கதையாகவும் நான் தலை காட்டுவேன்" என்று சித்திர தொடர்கதையாக அப்புசாமி தலை காட்டினார். ‘அப்புசாமியின் கலர் டி. வி’ சித்திரத் தொடர்கதை உருவானது. தோலிருக்க சுளை விழுங்கி என்பார்களே அந்த மாதிரி சித்திரக் கதையின் நகைச் சுவையான வசனங்களை மட்டுமே தொகுத்து, சுவை குன்றாமல் புதுமையான புத்தகமாக்கியுள்ள பூம்புகார் பிரசுரத்துக்கு எனது பிரத்தியேக நன்றிகள். எனது தாய் வீடான, பிறந்த வீடான, குமுதம் இதனை வாரா வாராம் வெளியிட்டு ஊக்கப்படுத்தியதை என்னால் மறக்க இயலாது. நண்பர் ஒவியர் ஜெயராஜ் அற்புதமான தன் திறமையை விசேஷமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது சித்திர விரல்களுக்கு என் கைகுலுக்கல்கள்.
Release date
Ebook: 15 February 2022
English
India