Step into an infinite world of stories
சூழலாலும், சுய அழுத்தத்தாலும் எழுப்பப்பட்ட சுவர்களுக்குள்ளேயே நடமாடியபடி, நானறிந்த பெண்ணுலகம் மிகக் குறுகியது. வெளியுலகோடு குறைந்த பரிச்சயமே கொண்டது. அவர்களின் வாழ்வனுபவமும் கொஞ்சமே. அவற்றை அவர்கள் சொல்வதேயில்லை. இத்தகைய பெண் வாழ்வை, அவர்களின் உணர்வுகளை யூகித்துக் கற்பனையில் விரித்தெழுதுவது எனக்குப் பிடித்தமாக இருக்கிறது. “பொம்பளப் பிள்ள” என்று பிறந்ததுமே கவலைச் சொல் வாங்கிக் கண்டிப்பான கவனத்தோடும், கட்டிக் கொடுக்க வேண்டிய பதற்றத்தோடும் வளர்க்கப்பட்டு, பதின் பருவத்தில் இன்னும் கண்காணிக்கப்பட்டு, பாதியில் அறுபட்ட படிப்போடு, சிறுமிப் பருவத்திலிருந்து கன்னிமையின் கனவுலகையோ, இளமையில் சுதந்திரத்தையோ உணராமல் இருக்கும்போதே மணமுடித்துத் தரப்படும் பெண்கள் 17, 18 வயதிலேயே பெண் குழந்தை பிறந்து, மகளுக்கு மணமானால் இந்தப் பெண்கள் பாட்டிகள், 35 வயதிலேயே பாட்டியான பெண்களை நான் பார்த்திருக்கிறேன். கணவர், குழந்தை, நகை, நட்டு, மாமியார், நாத்தனார் என்ற வட்டத்துக்குள்ளேயே சுற்றி வந்தாலும் அதுகுறித்த புகாரோ, வருத்தமோ இன்றி மாறாத புன்னகையோடு வளைய வரும் பெண்கள். அவர்களுடைய உணர்வுகள், கனவுகள், உளைச்சல்கள், துக்கங்கள், சந்தோஷங்கள், சஞ்சலங்கள் இவற்றையெல்லாம் எழுத, எழுத நான் எண்ணிலடங்கா திசைகளில் இழுத்துச்செல்லப்பட்டேன். வேலைகளைக் கை செய்ய, மனம் என் கதாபாத்திரங்கள் பேசுவைதக் கேட்டுக் கொண்டிருக்கும். அப்பட்டமான உண்மைகளை நான் அறிந்ததேயில்லை. அறிந்தாலும் அவற்றை அப்படி அப்படியே எழுதுவதில் எனக்கு எந்தச் சவாலும் இல்லை. இந்த நாவலில் கதாபாத்திரங்கள் கற்பனா விரிவோடும், சுயசரிதைத்தன்மை இன்றியும் இருக்க வேண்டுமென விரும்பினேன். ஆனால் அவர்களோ நானறியாத வேறு உலகில் உலவுகிறார்கள். என் தின வாழ்வினூடே சதா குறுக்கும், மறுக்கும் திரிந்தார்கள். ஒரு புதினமென்பது மதுரை - சென்னை ரயில் வண்டி போலத் தொடர்ச்சியாக இருக்க வேண்டியதில்லை என எண்ணுகிறேன். அத்தகையதொரு தொடர்பை வாசக மனம் வாசிப்பில் தானாகவே ஏற்படுத்திக் கொள்ளும் என நம்புகிறேன். - உமாமகேஸ்வரி
Release date
Ebook: 8 March 2022
English
India