Step into an infinite world of stories
இந்திராபாய் என்ற இந்நாவல் ஒரு துப்பறியும் நாவல். இதில் உள்ள முக்கிய விஷயம் முஷ்டிக்கரம் என்ற கள்ளனுக்கும் துப்பறியும் கிருஷ்ணாராவுக்கும் உள்ள போராட்டமே. ஆயினும் இந்திராபாய் என்பவள் பன்முறை முஷ்டிக்கரத்தினிடம் மிக்க பிராணாபத்தில் சிக்கிக்கொண்டு அவற்றைத் தைரியத்தோடு சமாளித்ததுமன்றி, அவனைப் பிடிக்கும் முயற்சியை விட்டுவிட்டால் அவனால் நமக்கு ஆபத்து நேராதென்று தெரிந்திருந்தும் முரடர்களான ஆடவர்களெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்த அத்தகைய கள்ளனுக்குச் சற்றும் அஞ்சாது கடைசி வரையில் அவனைப் பிடித்தே தீர்வதென்ற வைராக்கியத்தை விடாமலிருந்தாள். ஒரு பெண்ணினிடம் உள்ள அத்தகைய தைரிய நடக்கை புகழத்தக்கதே யாதலின் அவளையே கதாநாயகியாய் முதலில் வைத்தோம்.
துப்பறியும் நாவல்கள் பல வெளி வந்திருக்கின்றன. ஆயினும் எல்லாவற்றைக் காட்டிலும் இது மிக்க அபூர்வமானதாகவே இருக்கிறது என்பது இதை வாசிப்போர்க்கு நன்கு விளங்கும். இதில் உள்ள முஷ்டிக்கரம் என்ற கள்ளன் கல்வியறிவோடு, பௌதீக சாத்திரம், இரசாயன சாத்திரம் முதலிய பல சாத்திரப் பயிற்சியடைந்து புதுக் கருவிகளைக் கொண்டு ஒருவரும் கண்டறியக் கூடாத விதமாய்க் குற்றங்களைச் செய்வதும், தன்னிடம் இருப்பவர்கள் கூட தன் உண்மை யுருவை யறியா வண்ணம் மறைத்துக்கொண்டு தன் காரியங்களை நடத்துவதும் வாசிப்போர்க்கு இத்தகைய காலங்களில் இதுகாறும் உண்டாகாத வியப்பையுண்டாக்கும். இந்திராபாய் சிக்கிக்கொள்ளும் ஒவ்வொரு ஆபத்தும் நெஞ்சு திடுக்கிடச் செய்யத்தக்கதே. அவற்றினின்றும் கிருஷ்ணாராவ் அவளை மீட்பதும், முஷ்டிக் கரத்தைப் பிடிப்பதில் அவன் காட்டும் வீரதீரம் பொருந்திய சாமர்த்தியச் செய்கைகளும் கள்ளன் சாமர்த்தியத்திலும் பின்னும் வியப்பையளிக்கும். இவர்கள் இருவர் நடக்கைகளையும் பற்றி ஆழ்ந்த நோக்கத்தோடு அறிவையூன்றி வாசிப்போர்க்கு அனேகம் மேலான படிப்பினைகளும், இலௌகீக ஞானமும், மனப் பயிற்சியும் சித்திக்கும் என்பது உண்மை. மேல் போக்காய்க் கதையை மட்டும் வாசிப்போர்க்கு வெறுங்கதையாகத்தான் தோன்றும். ஆன்றோர் இதில் தோன்றக்கூடிய சொற்பிழை முதலியவற்றைப் பொறுத்து, இதையும் ஆதரிப்பார் களென்றும் நம்புகிறோம்.
Release date
Ebook: 2 July 2020
English
India