Fantasy
மஜீத் மஜீதி ஈரானில் உள்ள தெஹ்ரான் நகரில் 1959-ல் பிறந்தார். மத்தியதர குடும்பத்தை சேர்ந்தவர். 1978-ல் நடந்த இசுலாமிய புரட்சியை தொடர்ந்து இவருக்கு நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு, பாய்காட் என்ற படத்தில் 1985-ல் நடித்தார். இவர் 1992-ல் இயக்கிய முதல் படம் பதூக். கேன்ஸ் திரைப்படவிழாவில் பங்கேற்றது. 1997-ல் சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தை இயக்கினார். மான்ட்ரியல் உலகத் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது இந்த படத்திற்கு கிடைத்தது. 1999-ல் வெளியான கலர் ஆஃப் பாரடைஸ் படமும் அப்படியே. 2000-ல் வெளிவந்தது பரன். 25-வது மான்ட்ரியல் உலக திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இப்படமும் சிறந்த படத்திற்கான விருதினை தட்டிச் சென்றது. ஐரோப்பிய ஃபிலிம் அகதாமிக்கும் நாமினேட் ஆனது.
2005-ல் தி வில்லோ ட்ரீ வெளியானது. இந்தப் படம் தெஹ்ரான் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளை பெற்றது. 2008-ல் தி ஸாங் ஆஃப் ஸ்பேரோஸ் படத்தை இயக்கினார்.
2003-ல் இவரின் திரைப்பட சாதனைக்காக விக்டோரியா டெசிகா விருது பெற்றிருக்கிறார்.
பரன் இந்த கதையில் வரும் நாயகியின் பெயர். இது ஒரு எளிய காதலின் கதை. 1990-களில் மத அடிப்படைவாதிகளான தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றிய காலக்கட்டத்தை தொடர்ந்து, ஈரானில் அரங்கேறும் இந்தக் கதை, காதலின் இலக்கணத்தை கச்சிதமாய் தன்வசம் கொண்டிருக்கிறது. பரன் என்றால் ஆப்கன் மொழியில் மழை என்று அர்த்தம். மழை பேசாது. உணர்த்தும். குளிர்விக்கும். செழிக்க வைக்கும். காதல் கொள்ளச் செய்யும். இந்தக் குறியீடுகளே மழையின் மொழி.
அதேபோல நாயகி பரன், படத்தில் எந்த இடத்திலும் பேசுவதில்லை. ஆனால் அவள் லத்தீப்பிடம் உணர்த்தி விட்டுச் சென்ற உணர்வின் படிமங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை. காதல் இருக்கிற வரை, மனிதம் இருக்கிற வரை, உலகின் ஜீவிதமான ஈரமிருக்கிற வரை அவை சாசுவதித்திருக்கும்.
Release date
Ebook: 3 January 2020