Step into an infinite world of stories
“அம்மாவுக்கு விருப்பம் இல்லாததை செய்ய மாட்டேன் என்று இவ்வளவு உறுதியா சொல்ற நீ... எதுக்காக என்னைக் காதலிச்சாய்? எதுக்கா இப்போ என் வாழ்க்கையோடு விளையாடுகிறாய்?” சத்யநந்தன் கேட்டதும், மதுவின் கண்கள் வலியைக் காட்டின.
“தப்புதான்... அம்மாவுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் நான் காதலிச்சது தப்புதான்! அதுக்கான தண்டனையைத்தான் இப்போ அனுபவிக்கிறேன்!” கண்களில் நீருடன் மது சொன்னதும், சத்யா வேதனையோடு கண்களை மூடினான்! தன்னைக் காதலித்தது தவறு என்று காதலி சொல்லும்போது, எந்த காதலனுக்குத்தான் வேதனை இராது?
ஆனால்... தானே அவளது இந்த வார்த்தைகளுக்கு காரணம் என்ற குற்ற உணர்வோடு அவளை நோக்கியவன், “சாரி... மது... வெரி வெரி சாரி!” என்றான் ஆத்மார்த்தமாக!
“இல்லை சத்யா... நீங்க சொன்னது தப்பில்லை! என் மேல்தான் எல்லா தப்பும்! அதுதான் உண்மை! ஆனால்... நீங்க என்ன சொன்னாலும் என் முடிவை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது! அதுவும் உண்மை!” என்றவள் கண்கள், ‘இத்தோடு விட்டு விடேன்’ என்று அவனிடம் கெஞ்சின.
அவள் விழிகள் வேண்டியதைச் செய்து விட வேண்டும் போலத் தோன்றினாலும், இப்போது விட்டு விட்டால், அவளை இழப்பது நிச்சயம் என்று தெரிந்தும், அவனால் விட்டு விட முடியுமா என்ன?
இப்போது அவன் சொல்லப் போகும் வார்த்தைகள் அவளைக் காயப் படுத்தும் என்று சத்யாவுக்குத் தெரிந்தது. ஆனால்... இப்போது இதைச் சொல்லா விட்டால், வாழ் நாள் முழுதும் இருவரும் வருந்த வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்தவனாக, அவளிடம் திரும்பினான்.
“இங்கே பாரு மது! ஒன்று நீ அத்தையின் ஆசையை நிறைவேற்றனும்! இல்லை... உனக்கு சந்தோசம் தரும் வாழ்க்கையை அமைச்சுக்கணும்! இது ரெண்டையும் செய்யாமல் இருந்தால், அத்தைக்கு...” என்றவன் குரல் கமறியது. தொண்டையை செருமி சரி செய்து கொண்டவன், “அத்தைக்கு ஏதாவது ஆகி விட்டால், அவங்க ஆன்மா கூட உன்னை மன்னிக்காது!”
தனது வேண்டுதலுக்கு இணங்கி இத்தோடு இந்தப் பேச்சை விட்டு விடுவான் என்று எண்ணி இருந்த மது, சத்யாவின் வார்த்தைகளில் திகைத்து அவனை நோக்கினாள்! ‘என்ன சொல்கிறான் இவன்?’
அவளுக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை! மதுவின் முகத்தில் தெரிந்த குழப்பம், அவளுக்கு தான் சொன்னது விளங்கவில்லை என்பதை உணர்த்த, சத்யா மீண்டும் பேசினான்.
“ஆமாம்... அத்தைக்கு ஏதாவது ஆகி விட்டால்... நீ சொன்ன மாதிரி அவங்க உங்க திருமணம் பற்றி பேசியதுதான் அவங்க கடைசி வார்த்தை...கடைசி ஆசையா இருக்கும்! அதை நிறைவேற்றுவது உன் கடமையும் கூட! அதனால், ஒன்று நீ மகேந்திரனை கல்யாணம் செய்து கொண்டு அவங்க ஆசையை நிறைவேற்றனும்! இல்லை என்றால், நீ மனசார விரும்பிய என்னை கல்யாணம் செஞ்சுக்கணும்... தன் ஆசை நிறைவேறவில்லை என்றாலும் கூட, தன் மகள் சந்தோஷமாக இருக்கிறாள் என்ற நிறைவாவது அவங்களுக்கு மிஞ்சும்! அதுதான் நீ அவங்களுக்கு கொடுக்க போற உண்மையான சந்தோஷமா இருக்கும்! நீ எடுக்கப் போற முடிவில்தான் நம்ம நாலு பேருடைய சந்தோஷம்... இன்னும் சொல்ல போனால்... இன்னும் ரெண்டு குடும்பங்களுடைய சந்தோஷசம் அடங்கி இருக்கு என்பதை மனதில் வைத்து பதில் சொல்லு! இப்பவே சொல்லணும் என்று இல்லை! நல்லா யோசிச்சு சொல்லு! நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்!”
‘அவளது சத்யாவா ? அவனா என்னை மகேந்திரனைத் திருமணம் செய்து கொள் என்று சொன்னான்? அவனால், எப்படி அவளிடம் இப்படி சொல்ல முடிந்தது?’
Release date
Ebook: 10 April 2024
English
India