Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Nindru Olirum Sudargal

2 Ratings

3.5

Language
Tamil
Format
Category

Fantasy

‘தமிழ்த் திரையுலகக் குணச்சித்திரங்களின் நடைச் சித்திரம்’ என்கிற சிறு விளக்கக் குறிப்போடு இப்புத்தகத்திற்கு ‘நின்று ஒளிரும் சுடர்கள்’ என்று நான் தலைப்பிட்டிருக்கிறேன்.

‘கருப்பு-வெள்ளைக் காலங்கள்’ என்ற தலைப்புத்தான் முதலில் மனதில் தோன்றியது. அது ஏதோ சரித்திரப் பின்னணியைக் கொண்டதானற ஒன்றை உணர்த்தி விடுமோ என்கிற ஐயப்பாட்டிலும், கவிதைத் தொகுப்பிற்கான தலைப்பாக உணரக் கூடும் என்ற நினைப்பிலும், மக்களுக்குப் பழகிய மொழியில் இருத்தல் அவசியம் என்கிற உணர்தலிலும் மேற்கண்ட தலைப்பும், அதன் குறிப்பும் மனதுக்குள் உருவாகி நிலைத்திட அதையே வைக்க முடிவு செய்தேன்.

எழுபதுகள் வரையிலான கால கட்டத்தின் தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் பலர். ஏறக்குறைய அவர்கள் எல்லோருமே நாடகப் பின்னணியிலிருந்து திரையுலகுக்குள் வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இளம் பிராயத்திலேயே நாடகக் கம்பெனிக்குள் நுழைந்து, அங்குள்ள எல்லா வேலைகளையும் ஒரு எடுபிடியாய் இருந்து செய்து கற்று, பின்பு சின்னச் சின்ன வேஷங்களாய்த் தரப்பட்டு அதனிலும் தேர்ந்து முன்னணிக்கு வந்து, ஒரு கைதேர்ந்த கலைஞனாய்த் திரையுலகுக்குள் அரிதான, அதிர்ஷ்டமான, பரிந்துரையுடனான வாய்ப்புக் கிடைக்கப் பெற்று அதன் மூலம் படிப்படியாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப் பாடுபட்டு, காலம் கனிந்த பொழுதுகளில் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலெல்லாம் நீங்கா இடம் பெற்றவர்களாய் வலம் வந்து வெற்றி கண்டவர்கள் இவர்கள்.

மிகச் சிறந்த குணச்சித்திரங்களாகவும், தேர்ந்த நகைச்சுவை நாயகர்களாயும், எந்தவிதக் கதாபாத்திரத்திற்குள்ளும் தங்களைக் கச்சிதமாய்ப் பொருத்திக் கொள்பவர்களாயும், பல பரிமாணங்களில், தங்களை ஒதுக்க முடியாத ஒரு நிலைத்த ஸ்தானத்தில் நிறுத்திக் கொண்டு ஸ்திரம் பெற்றார்கள் இவர்கள்.

எழுபதுகள் வரையிலான கருப்பு வெள்ளைப் படங்கள் பலவும் வெறும் படங்களாக இல்லாமல், வாழ்க்கைப் பாடங்களாக அமைந்தவை எனலாம். மனித மேன்மைகளை, வாழ்க்கையின் சீர்மைகளைத் தூக்கிப் பிடித்தவை என்றும் நிறுவலாம். அப்படியான திரைப்படங்களின் தொடர்ந்த வெற்றிக்கு தங்கள் நடிப்பாற்றலினால் உத்தரவாதம் வழங்கியவர்கள் பலர். எந்தக் கதாபாத்திரம் ஆனாலும் இவரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஸ்தாபித்தவர்கள். சின்ன வேஷம், பெரிய வேஷம் என்ற வித்தியாசம் பார்க்காதவர்கள். பரஸ்பரத் திறமைகளை மதிக்கத் தெரிந்தவர்கள்.

அன்றைய காலகட்டத்தில் குடும்பப் படங்களே மேலோங்கி நின்றன. உறவுகளின் மேன்மையும், ஊடாடும் வாழ்க்கைச் சிக்கல்களும், சீர் குலைந்துவிடக் கூடாத குடும்ப அமைப்பின் கட்டுக் கோப்பினை விவரிப்பவையாக அமைந்து, அன்பு, கருணை, பாசம், நேசம், ஒற்றுமை, சந்தோஷம் இவைகளை முன்னிறுத்தி ஒழுக்கமும் பண்பாடும் மிக்க வாழ்க்கையினை வலியுறுத்தி, திரைப்படங்கள் என்பதே சமுதாயத்தின் மேன்மைகளுக்கும், மேம்பாடுகளுக்கும்தான் என்று சீராக வலம் வந்தன.

அப்படியான சிறந்த திரைப்படங்களில் தங்களைக் கச்சிதமாகப் பொருத்திக் கொண்டு அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டிய தமிழ் நடிகர்கள் பலர். அவர்கள் பல படங்களில் குணச் சித்திரங்களாகவும், நகைச்சுவை நாயகர்களாகவும், வில்லன்களாகவும், கதாநாயகர்களாகவும் இன்னும் பல்வேறுவிதமான சின்ன வேஷங்களிலும், தங்களின் திறமையைத் திறம்பட நிரூபித்திருக்கிறார்கள். ஏற்காத வேடமில்லை என்ற ஏற்புடையவர்கள்.

அப்படியானவர்களில் முக்கியமான நடிகர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் குறிப்பிட்ட நடித்த அந்தப் படங்களின் வெற்றிக்கு எவ்வகையில் உதவியிருக்கிறார்கள் என்பதையும், இயக்குநரின் காட்சிப்படுத்தலில் எவ்வாறு பொருத்தமாய்த் தங்களை இருத்திக் கொண்டு, தங்களின் பல பரிமாணத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் இப்புத்தகத்தின் காட்சி ரூபத்திலான வசன நடைச்சித்திரங்கள் மூலம் உணர்ச்சி பூர்வமாயும், நெகிழ வைக்கும் தன்மையிலும், விளக்கியிருக்கிறேன்.

நடைச்சித்திரங்கள் என்று சொல்லும்போது குறிப்பிட்ட காட்சிகளின் வீரியத்திற்குக் காரணமான வசனகர்த்தாக்களையும் நினைவு கூறுவது கடமையாகிறது. சத்தான காய்கறிகள் இல்லையெனில் தேர்ந்த சமையல் அமைவது எப்படி? அவர்களுக்கெல்லாம் இந்தத் தொகுப்பின் மூலம் நன்றி பாராட்டுகிறேன்.

சிறந்த நடிப்பு, அழுத்தமான வசனங்கள், செழுமையான கதாபாத்திரங்கள் என்கிற வட்டத்திற்குள் நின்று எனக்குள் தோன்றிய பல நடிப்பு வேந்தர்களுள் சிலர் வருமாறு - நடிகர் திலகம், எஸ்.வி. ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, வி. நாகையா, டி.எஸ். பாலையா, எம்.ஆர். ராதா, வி.கே. ராமசாமி, எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.எஸ். துரைராஜ், ஏ. கருணாநிதி, நாகேஷ் ஆகியோர்.

இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்தான். அவர்கள் நடித்த மிகச் சிறந்த திரைப்படங்களும் இருக்கிறதுதான்.

அன்பன்,

உஷாதீபன்.

Release date

Ebook: 15 September 2020

Others also enjoyed ...