Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
காப்பிய கவிப்பெருந்தகை வாலி அவர்களின் அணிந்துரை
கதையும் கதை மாந்தரும் ஏற்கனவேயே நமக்கு நன்கு பரிச்சயமான போதிலும் சிலம்பைச் சின்னச் சின்ன வார்த்தைகளில் சிறைப்படுத்தியிருப்பதும்; உரைநடைக்கு கவிதைகளுக்கே உரித்தான உத்திகளான -உவமை, உருவகம், உள்ளீடு ஆகிய மூன்றையும் நவீனப்படுத்தி ஆங்காங்கே நிரவியிருப்பதும்; வலிய வைக்காமல் இளைபுத் தொடையை இயல்பாகக் கையாண்டிருப்பதும்;
இந்த நூலுக்கு ஒரு தனித்தன்மை இருப்பதைச் சுட்டுகின்றன. சம்பவங்களை நகர்த்திக் கொண்டு போவதில் உள்ள சமத்காரமும்; கவித்துவத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்த வல்ல சொற்சாலமும்; இளமை கொழிக்கும் இசைத் தமிழோடு இறைச்சிப் பொருளை சரியான சதவிகிதத்தில் கலந்து வழங்குனிற் நேர்த்தியும்;
இனிய இளவல் கவிஞர் பா.விஜய் வாய்த்துள்ள பட்டறிவையும், பாட்டறிவையும் பறை சாற்றுகின்றன. படிக்கும் போது பல்வேறு இடங்கள் என்னை பிரமிக்க வைத்தன.
பசுந்தமிழில் பலரையும் ஈர்க்கவல்ல நவீனகாலப் பாண்டித்தியம்- பா.விஜய்க்கு வெகுவாகவே வசப்பட்டிருக்கிறது எனலாம்.
நின்று நிதானித்து சொல் உளியை சிரத்தையோடு பயன்படுத்தி செதுக்கப் பெற்ற ஒரு செந்தமிழ்ச் சிற்பம் என்று இந்த நூலை நான் முன்மொழிகிறேன்; வையம் வழிமொ ரீயும் என்பதில் எட்டுனை அய்யமும் எனக்கில்லை.
என்னை ஈர்த்த வரிகள் எவ்வளவோ! அனைத்தும் நான் சுட்டுவது ஆகக்கூடிய காரியமல்லவென்றாலும்.
பிடித்தமான சில வரிகளை நான் பட்டியலிட்டுக் காட்ட விழைகிறேன். கீழ்க்கண்ட வரிகள் என்னுள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியவை.
இளங்கோ துறவறம் பற்றி
இசைக்கையில்;
இளங்கோ ஒரு கத்திதான்!
ஆனால்
தலையெடுக்கிற கத்தி அல்ல
களையெடுக்கிற கத்தி
சோழனைப் பற்றிச்
சொல்லுகையில்;
இமயத்தை இழுத்து
இடுப்பில் கட்டிக் கொண்டு
குமரிமுனை வரைக்கும்
குருதி வழிய நடந்தவன்!''
கண்ணகி பற்றிக்
கூறுகையில்;
குற்றாலம்
கறுப்பாகிக் கொட்டுவது
போன்ற
கூந்தல்
மாதவியைப் பற்றிக்
கூறுகையில்;
குழந்தையைக் கூட
குனிந்து தூக்காத
வீர புருஷர்களையும்
ஒரு புருவ அசைவில்
புடவைக்குக் கொசுவம்
மடிக்க வைப்பாளாம்!
இப்படி எவ்ளவோ சொல்லிக் கொண்டு போகலாம். வாசகனை வசமிழக்க வைக்கும் வரிகள் ஏராளமாயிருக்கின்றன.
தொட்டால் தொடர்ந்து வாசிக்கத் தூண்டுவதே ஒரு நல்ல நூலுக்கு அடையாளம். அந்த அடையாளம் இந்த நூலை அடைகாத்து நிற்கிறது. நூலின் இறுதிப் பகுதியில், கண்ணகியின் திருவாயால் ஆலவாயின் பெருமையையும்,, கோலோச்சிய வேந்தனின் அருமையையும் அவள் சினத்தினூடே வெளிப்படல் அற்புதமாக இருக்கிறது. வரலாறும் வண்ணத் தமிழும் வரிக்கு வரி கைகோர்த்து நின்று கவிஞனின் மொழி ஆளுமையை முரசறைகின்றன.
கூடல் மாநகரைக் கண்ணகி தீக்கிரையாக்குகையில் கூறுகின்ற வாசகங்களில் இளைபுத் தொடை கோலோச்சுகிறது.
'விட்டுவிடு விட்டுவிடு' என்று தொடங்கி 'சுட்டுவிடு' 'நட்டுவிடு' என்று இயல்பாக முடிகின்ற வாக்கியங்களில் பழங்காப்பியம் புதுமுலாம் பூசிக்கொண்டு நிற்கிறது எனலாம்.
சாத்தனார் சொல்லி முடித்தபின், கடந்து சென்ற காலத்தைச் சொல்லுகையில்
மாதங்கள்
கொக்கின் வரவறிந்த
மீன்களாய் ஓடின
என்றுரைப்பது ஏரார்ந்த தமிழுக்குப் பா.விஜய்யின் பேனா ஏற்றம் சேர்ப்பதாக இருக்கிறது.
சுருங்கச் சொன்னால் 'காற்றிலம்பு ஓசையிலே' என்னும் இக்குறுங் காப்பியத்தில் படவுலகைத் தாண்டியும் ஒரு பிரபல்யத்தைக் கவிஞர் பா.விஜய்க்கு ஏற்படுத்தித் தருவதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன.
படவுலகில், பாடலாசிரியர்கள் பட்டியலில் புதிய வரவுகள் என்று நிறையக் கவிஞர்கன் இன்று பிறக்கின்றார்கள். எல்லோருமே அவரவர் எழுத்தில் அவரவர்க்குரிய மொழி ஆளுமையையும் கற்பனை வளத்தையும் பிலிற்றுகிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்கிறேன்.
தமிழின் தகவை ஒருவர் இருவர் சொல்லி முடியாது. எண்ணிறந்த கவிஞர்களின் தோறற்ம் இங்கு வைகலும் ஏற்பட வேண்டும். அவர்களது எழுதுகோல்களால் தமிழ் வலிவும் பொலிவும் மேலும் பெற்று மேதினியை வாழ்விக்க வேண்டும்.
என் இனிய இளவல் பா.விஜய் நல்ல கவிஞர்; நல்ல மனிதர்; நல்ல அன்பர்; நல்ல பண்பர்.
அவர் இதுபோன்ற இசைமிகு காவியங்களை இன்னும் யாக்க வேண்டுமென்று வாழ்த்தி, இறையருளை இறைஞ்சி, மீண்டும் என் மனமார்ந்து வாழ்த்துகளை நூலாசிரியருக்குச் சொல்லி இந்த அணிந்துரையை நிறைவு செய்கிறேன்.
சென்னை
13.10.04
வாலி
Release date
Ebook: 18 December 2019
English
India