Step into an infinite world of stories
4.5
Lyric Poetry & Drama
ஊசிகள் செய்ய அல்ல, ஈட்டிகள் செய்யப் பிறந்தவன் நான் என்று என் சிறுகதைகள் குறித்ததொரு பிரகடனத்தை முன்னர் வெளியிட்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரை சிறுகதைகளில் நுட்பத்தைவிட அது ஏற்படுத்தும் தாக்கம் முக்கியம்
கவிதைகளைப் பொறுத்தவரை என் நிலை இதற்கு நேர் எதிரானது. அவை ஈட்டிகள் அல்ல. மலைப் பள்ளத்தாக்கில் உதிர்ந்து, காற்றில் சுழன்று இறங்கும் மலர் இதழ் எழுப்பும் ஒலி. அந்த மெல்லிய சப்தம் உங்கள் காதுகளை எட்டாமலே போகலாம். ஆனாலும் அவை என் அகமொழி.
கவிதை இதற்கு நேரதிர் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அரசியல் மேடைகளின் அலங்காரத்தையும், உரத்த குரலையும் அது வரித்துக் கொண்டிருந்தது. எழு,விழி, கொடு,பறி, மறு, எரி,சுடு என அது ஆணைகள் இட்டுக் கொண்டிருந்தது.காதல் கவிதைகள் கூட இரைச்சலாக இருந்தன. மலரின் மெல்லிது காமம் என்பதை ஒலிபெருக்கி வைத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். யாப்பிலக்கணத்தைப் பின்பற்றி எழுதப்படுவதாகச் சொல்லிக் கொண்டாலும், வடிவச் சிறப்பின் காரணமாக இல்லாமல், மொழியின் செழுமை காரணமாக அவை இயங்கின.
நான் இவை இரண்டிலிருந்தும் விடுதலை பெற விரும்பினேன். அதற்கு நானறிந்த வழி இதன் நேர் எதிர் திசையில் பயணிப்பதுதான்.
சிறுகதைகள் தமிழின் எல்லைகளை விரிவுபடுத்தின. ஆனால் கவிதைகள் தமிழுக்குச் செழுமை சேர்த்தன. சங்கம் தொட்டு, சமகாலம் வரை பொங்கிப் பெருகும் அந்த ஜீவ நதியிலிருந்து ஒரு கை அள்ளிப் பருகிய எவரும் இதற்குச் சான்றளிக்க முடியும்.
இந்தப் பெருமிதமும், செழுமையும் தந்த கவிமனம்தான் என்னைக் கவிதைகள் எழுத உந்தின. ஐரோப்பிய-அமெரிக்க இலக்கிய வாசிப்பின் தாக்கத்தால் இங்கே புதுக்கவிதை இயக்கமாக வேகம் கொண்ட 'எழுத்து' இதழில் என் கவிதைப் பயணம் தொடங்கிய போதும், ஐரோப்பியக் கோட்பாடுகளால் அல்ல, தமிழ்க் கவிதை மரபால் வசீகரிக்கப்பட்டே நான் என் கவிதைகளை எழுதுகிறேன். அவற்றில் பின் நவீனத்துவ இருண்மைகளைக் காண இயலாது. மரபின் ஒளிப்புள்ளிகள் தென்படுமேயானால் அது இயல்பானது.
என் அகமொழியை வாசிப்பதால் உங்களுக்கு என்ன லாபம்? இதோ இந்த முன்னிரவில், என் ஜன்னலுக்கு வெளியே பொலிந்து கொண்டிருக்கும் நிலவு, உங்கள் வீட்டு முற்றத்தில், ஜன்னலில், தோட்டத்தில், பால்கனியில், வீதியில்,மொட்டைமாடியில் ஒளியூட்டிக் கொண்டிருக்கக் கூடும். இடமல்ல, நிலவுதான் முக்கியம். கவிதைகள் அல்ல, கவிமனம்தான் முக்கியம்.
கிழிந்த கூரையின் வழியே நிலவை ரசிக்கும் பாஷோவின் கவி மனம் நமக்கும் வாய்த்துவிட்டால் அதைவிட ஆனந்தம் வேறேது?
மாலன்
Release date
Ebook: 10 December 2020
English
India