Step into an infinite world of stories
Fiction
நகைச்சுவையில் குளிர் காய்வது ஓர் இனிய சுகம். சொற்களை சிக்கிமுக்கிக் கற்களாகத் தட்டி, தெறித்த புன்னகைப் பொறிகளை வேள்வித் தீயாக வளர விடுபவர்கள் மிகச் சிலரே. நகைச்சுவைத் தீயில் 'புகைச்சல்' இருக்காது, நீர் வந்தாலும் கண்கள் எரியாது, சூழ்நிலை மாசுபடாது என்று இருப்பினும்...
...இவ்வாறு ஒரு நகைச்சுவைத் தொகுப்பின் முன்னுரையை ஆரம்பிப்பது ஒரு ஜாலியான தேநீர் விருந்தை ‘கொசகொச' புளி உப்புமாவுடன் தொடங்குவது போலாகும் என்பதால் மேற்படி பாராவை டெலிட் செய்துவிட்டு மெனுவை மாற்றி விடுகிறேன்.
சினிமா தியேட்டரில் ஒருவர் தன் நாயுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தார். வாலை ஆட்டியும், முனகல் சத்தம் போட்டும் நாய் சினிமாவை ரசிப்பதைப் பார்த்து வாயைப் பிளந்த பக்கத்து சீட்டுக்காரர், “என்ன அதிசயம் சார் உங்க நாய் படத்தை ரசிக்கிறதோ!" என்று கேட்டாராம்.
“எனக்கும் ஆச்சரியமா இருக்கு. இந்த சினிமாவோட கதையை நாவலாகப் படிச்சபோது அதை ஜிம்மி துளிக்கூட ரசிக்கவில்லை.”
படிப்பதைவிடப் பார்ப்பதை விரும்பி நாடும் தற்காலத்தில் நகைச்சுவை எழுத்துக்கு சாமரங்கள் வீசப்படுவது இல்லை. சிரிப்பதையே ஏதோ சாமி குத்தம் போலக் கருதி, விரட்ட வேண்டிய கவலைகளை வளரவிட்டு, முகத்தை காய்ந்த, இஸ்திரி போடாத காடா துணியாகச் சுருக்கிக் கொள்ளும் மனிதர்கள், சிரிப்பு என்கிற செலவில்லாத மருந்தை பாட்டி வைத்திய சுக்கு கஷாயத்தைப் போலப் புறக்கணிப்பது கொடுமை.
சிறு வயதில் சிரிப்பு மூட்டும் விளையாட்டில் சிறுவன் நெம்பர் ஒண்ணு கைகளைக் கட்டி, வாயை சிறு கிறுக்கலாக மூடி, படு சீரியஸாக நிற்க, அவனைச் சிரிக்க வைக்க வேண்டிய சிறுவன் நெம்பர் இரண்டு முகத்தை அஷ்டகோணலாக்கி, மூக்கை நாக்கு நுனியால் தொட்டு, 'வெவ்வெவ்வே' காட்டி முயற்சி செய்வான். விளையாட்டின் ஸப் - ரூல் (3)(ஏ) யின்படி கிச்சு கிச்சு மூட்டக் கூடாது. மிமிக்ரி செய்யக்கூடாது. செஞ்சால் அழுகுணி. அவ்வாறு சிரித்தவர்கள், சிரிக்க வைத்தவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் சலிப்பு என்கிற முகமூடியை அணிந்து விடுகிறார்கள். சிரிப்பை பாக்கெட் கிழிந்த அரை டிராயரில் தொலைத்து விடுகிறார்களோ?
சிரிப்பது சுலபம். சிரிக்க வைப்பதுதான் கடினம்.
"உங்களுக்குக் கலகலப்பாக, நகைச்சுவையாக எப்படி எழுத வருகிறது?" என்று கேட்டபோது பழம் தின்னும் (உள்ளங்களை) தேட்டை போட்ட சீனியர் சிரிப்பு எழுத்தாளர் ஒருவர் அமர்த்தலாகச் சொன்னார். "ரொம்ப ஈசி. வெத்துப் பேப்பர் பேனாவுடன் உட்கார வேண்டியது. மோட்டு வளையை ஆராய வேண்டியது. நெத்தியில் முத்து முத்தா ரத்தம் அரும்பும் வரை சிந்திச்சா, தானே ஹ்யூமர் எழுத வருது கழுதை. நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்களேன்."
- ஜே.எஸ்.ராகவன்
Release date
Ebook: 11 December 2019
English
India