Step into an infinite world of stories
Fiction
நேயர்களே! இப்போது நாம் கூறத்தொடங்கும் இக்கதையானது மிக்க அழகான ஒரு சிறு கிராமத்தில் தொடங்குகிறது. இக்கதை பெரும்பாலும் உண்மையாய் நடந்த விஷயங்களையே ஆதாரமாகக் கொண்டு வரையப் பட்டது. ஆகையால் இக்கதாநாயகியின் அரிய நடக்கைகளும் குணங்களும் கவனிக்கத்தக்கவை.
நீர்வளம் நிலவளம் முதலிய சகலவளங்களும் குறைவின்றி நிறைந்த ஒரு நாட்டில் ஆலம்பட்டி என்ற ஒரு சிறு கிராமமுளது. அக்கிராமம் நறுமணமுடைய நந்தவனங்களும், நல்ல மரங்கள் நிறைந்த தோட்டங்களும், செழிப்பான பயிர் வகைகள் நிறைந்த புலன்களும் சூழப் பெற்றது. அக்கிராமத்தில் சுமார் நூற்றைம்பது வீடுகளேயுண்டு. அவற்றில் ஒரு பலசரக்குக் கடையும், ஒரு ரொட்டிக் கடையும், ஒரு கசாப்புக் கடையும், ஒரு நாவிதன் கடையும், ஒரு ஹோட்டலும் உண்டு. அங்குள்ள மக்கள் அனைவரும் பயிரிடும் விவசாயிகளே. ஊரில் டாக்டர் கேசவன் என்ற ஒரு வைத்தியர் இருக்கிறார். அவர் அக்கிராமத்திலும் சுற்றுப் பக்கங்களிலுள்ள சில கிராமங்களிலும் வைத்தியம் பார்ப்பவர். அவருக்குச் சுமாரான நல்ல வருமானமுண்டு. அக்கிராமத்திற்கு அருமைநாதர் என்ற ஒரு குரு உண்டு. அக்கிராமம் புராதனமான ஒரு ஆலங்காட்டில் இருக்கிறது. அதைப்பற்றியே அதற்கு ஆலம்பட்டி என்று நாமதேயம் உண்டாயிற்று.
அக்கிராமத்திற்குச் சுமார் இரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு சிறு குன்றின் மேல் ஒரு பெரிய மாளிகையிருக்கிறது. அம்மாளிகையைச் சுற்றி அழகான ஒரு பெரிய தோட்டம் இருக்கிறது. அத்தோட்டத்தில் நீடித்த வயதையுடைய அனேக மரங்களுண்டு. அழகிய புள்ளிமான்களும், கிளைமான்களும், முயற்கூட்டங்களும் அதில் எந்நேரமும் சந்தோஷமாய் மேய்ந்து விளையாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். அத்தோட்டத்தில் ஒரு புறம் ஒரு அழகான ஏரியுண்டு. அதில் பலவிதமான நீர்ப் பறவைகளும், மச்சங்களும் வசித்துக் கொண்டிருக்கும். அங்குள்ள மாளிகை விசாலமாயும் மிக்க அழகாய் அலங்காரம் செய்யப்பட்டதாயும் இருக்கும். அதையும் அத்தோட்டத்தின் வனப்பையும் காணும் போது அவைகளின் சொந்தக்காரர் மிகச் செல்வமுடையவர்களென்று நன்கு விளங்கும். அம்மாளிகையின் சொந்தக்காரர் இரங்கநாதம் பிரபு என்றவர். அவருக்கு ஏராளமான பூஸ்திதியுண்டு!
அந்தக் கிராமமுழுதும் அதைச் சூழ்ந்துள்ள தோட்டங்கள் புலங்கள் யாவும் அவருடையனவே. அவர் தாம் மிக்க செல்வந்தரென்றும், ஏழைகளெல்லாம் தம் க்ஷேமத்திற்கும் சௌகரியத்திற்கும் தொழில் செய்வதற்காகவே படைக்கப் பட்டவர்களென்றும் மனதில் எண்ணிக் கொண்டு அவ்வாறே நடப்பவர். அவர் எந்த விஷயத்திலும் தன் மனநாட்டப் படியே நடப்பவர். அவர் விருப்பத்திற்கு யாராவது இடையூறு செய்தால் அவர்கள் விஷயத்தில் சற்றாவது ஈவிரக்கம் காட்டாமலே அவர்களை இம்சைப்படுத்துவார். அந்தக் கிராமத்திற்கும் அதைச் சூழ்ந்துள்ள மற்றும் சில குக்கிராமங்கட்கும் அவரே நியாயாதிபதி. அவருக்குச் சுமார் 50 வயதிருக்கும். அவர் மனைவிக்கு நாற்பது வயது. அவருக்கு ஜெகநாதன் என்ற ஒரே புத்திரன் உண்டு. அவனுக்கு நமது கதை தொடங்கும்போது இருபத்தோரு வயது. அப்பிரபுவிற்குச் சுமார் நாற்பது வயதுடைய ஒரு தங்கையும் உண்டு. அவளுக்கு மணமே நடக்கவில்லை. இப்போது அக்கிராமத்தைப் பற்றிய விஷயங்களில் நமது கதைக்கு எவ்வளவு அவசியமோ அவைகளைக் கூறி விட்டோமாகையால், இனி கதையைத் தொடங்குவோம்.
Release date
Ebook: 11 December 2019
English
India