Step into an infinite world of stories
அழகிய விழிகள் அகல விரிய, சற்று நேரம் எதுவும் தோன்றாமல் பேந்த விழித்தாள் சுமித்ரா. சில நிமிடங்கள் அவள் அறியாமலே கழிந்த பின்னர் மீண்டும் அவளுக்குச் சுற்றுப்புறம் புரியத் தொடங்கியது. ஓர் ஏளன நகை இழையோட எதிரே அமர்ந்திருந்த தங்கையின் முகமும் தெளிவாயிற்று. சித்ரா நிஜமாய்த்தான் சொன்னாளா? அல்லது ஒருவேளை விளையாட்டாய்த் தமக்கையைச் சீண்டிப் பார்த்திருப்பாளோ? அவ்வப்போது சீண்டுகிறவள்தான். ஆசைகள் உள்ளவள், ஆசை நிறைவேறாதபோது சீற்றத்தையும், சினத்தையும் சிறு கேலியாய் இழைத்துக் காட்டுகிறவள்தான். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து; ஆசைகளை வளர்த்தால்தானே வேதனை என்று சுமித்ரா கூறுகையில், “ஆசைகளை வளர்க்கக் கூடாது என்று நம் விஞ்ஞானிகளின் மர மண்டைக்குக் கொஞ்சமேனும் தெரிகிறதா, பாரேன்!” என்பாள். தமக்கை திகைத்து விழிக்கையில், “பின்னே பாரேன். அவரவர்கள் சும்மா தூங்கிக்கொண்டு இராமல், ரேடியோ, டி.வி, கலர் டி. வி., வீடியோ என்று கண்டுபிடித்துக் கொண்டு போகிறார்களே. துணியில்கூட வெறும் பருத்தியோடு நில்லாமல், நைலான், ரேயான். பாலியெஸ்டர், ஜார்ஜெட், கிரேப், சைனாசில்க் என்று எத்தனை! இதில் பிளெண்டுகள் வேறு!” என்று கண்ணை விரித்துத் தோளை உயர்த்துகிறவள் சட்டெனச் சீறுவாள். “அக்கா, நான் காஞ்சிபுரம் பட்டுக்கு ஆசைப்படவில்லை. ஏன், மைசூர் கிரேப், பின்னி பட்டுகள் கூடவேண்டாம், ஒரு சைனா சில்க்... ஒரு நைலான் ஜார்ஜெட்... இதற்குக்கூட எனக்குத் தகுதியில்லையா? வீணாவைப் பார். எத்தனை கட்டுகிறாள்? அவளைவிட நான் எதில் குறைவு? அழகிலா? என்னைவிடப் பாதி மார்க் வாங்கினவள்பி.ஏ.இல் பெயில், நான் டைப் டைரட்டரோடு போராட அவள் மாருதியில் வழுக்கிக்கொண்டு போகிறாள். எனக்குக் கார் வேண்டும் என்றுகூட இல்லை அக்கா, செலவைப் பாராமல் ஓர் ஆட்டோவில் ஏறி இடிபாடுகளுக்கு ஒதுங்கிப் போக முடிகிறதா?” என்று குமுறுவாள். பதில் கூற முடியாமல் வேறு வகையில் தங்கையைச் சமாதானப்படுத்த முயலுவாள் சுமித்ரா. “அடுத்தவரைப் பார்த்து ஏங்கக் கூடாது கண்ணம்மா. அப்புறம் பொறாமை, வெறுப்பு என்று கெட்டதெல்லாம் வந்து சேரும். பாண்டவர் மேல் கொண்ட பொறாமையால் துரியோதனன் கூட்டமே அழிந்து விடவில்லையா? அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் என்று வள்ளுவர் கூடச் சொல்லியிருக்கிறார்.” “நம் நாடு கொஞ்சமேனும் உருப்பட வேண்டும் என்றால் இந்தப் பழைய நூல்கள் எல்லாவற்றையும் சேர்த்துத் தீ வைத்துக் கொளுத்த வேண்டும்; ஆசைப்படக் கூடாது என்றால் யாருக்கு உழைக்கத் தோன்றும்? இருந்தால் உண்பதும், இல்லாவிட்டால் உறங்குவதும் என்று துருப்பிடித்துப் போய்விட மாட்டார்களா?” “அதிக ஆசைப்படுவதுதான் தவறு சித்ராம்மா!” “என் ஆசைகள் எதுவும் அதிகப்படி இல்லை!” என்று வெட்டெனப் பதில் வரும். “எதற்கும் தலை எழுத்து என்று இருக்கிறது இல்லையாம்மா?” என்று வேதாந்தத்தில் இறங்குவாள் தமக்கை. “அதை மாற்றிக் காட்டுகிறேன் பார்” என்று முடிப்பாள் சித்ரா. மாற்றிக் காட்ட எடுத்த முடிவா இது? கடவுளே! சட்டெனச் சிரித்தாள் சித்ரா. “என்னக்கா, பேச்சையே காணோம்? அதிர்ச்சியில் ஊமை கீமை ஆகிவிட்டாயா?” என்றாள் முறுவலோடு. அந்தச் சிரிப்பும் முறுவலும் நம்பிக்கை ஊட்ட, “இந்த மாதிரியெல்லாம் பேசினால் வேறு எப்படி ஆகுமாம்; இதிலெல்லாமா விளையாடுவது?” என்று செல்லமாகக் கடிந்தாள் சுமித்ரா. சித்ராவின் சிரிப்பு சட்டென மறைந்தது.
© 2025 PublishDrive (Ebook): 6610000770137
Release date
Ebook: 4 April 2025
English
India