Step into an infinite world of stories
Fiction
தமிழ்நாட்டின் மேலைப் பகுதியான கொங்குநாடு வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், நனி நாகரீகமும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட நாடு. தமிழகத்திற்கு எண்ணற்ற அறிஞர்களையும், புலவர்களையும், வள்ளல்களையும்; கல்வியாளர்களையும், தொழிலதிபர்களையும் ஈன்றளித்த பெருமை கொங்கு நாட்டிற்கு உள்ளது.
தமிழ்நாட்டில் பல வட்டார மொழிகள் பேசப்பட்டாலும் இப்பகுதி மக்களால் அன்பு நெறி சொட்டச் சொட்ட பேசப்படும் 'கொங்கு தமிழ்' உலகோர் போற்றும் உன்னத வட்டார மொழியாகத் திகழ்கிறது.
பண்டைய தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய நாடுகளை பெற்று சிறப்போடு விளங்கியதைப் போலவே, தொண்டை நாடும், கொங்கு நாடும் தனிப் பிரிவுகளாக விளங்கியதை தண்டியலங்காரத்தில் "வியன் தமிழ்நாடு ஐந்து", திருமூலரின் திருமந்திரத்தில் "தமிழ் மண்டிலம் ஐந்து'' போன்ற கூற்றுகள் மெய்ப்பிக்கின்றன.
கொங்குநாடு தனக்கென தனி எல்லையையும், கலை, பண்பாடு, பழக்கவழக்கம், வரலாற்றுப் பெருமை, நாகரீகம், ஒழுக்கம் போன்றவற்றையும் கொண்டிருந்தது. இத்தகை சிறப்பு வாய்ந்த கொங்குநாடு 24 உள் நாடுகளைக் கொண்டது. இந்த செய்தியினை கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம், பழம்பாடல் போன்றவற்றின் மூலம் அறியமுடிகிறது.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களும், கரூர் மாவட்டத்தின் குளித்தலை, திண்டுக்கல் மாவட்டத்தின் பழநி போன்ற பகுதிகளை உள்ளடக்கியதே கொங்குநாடு.
அன்னைத் தமிழுக்கு செந்தமிழ் பா சூட்டி அழகு பார்த்த புலவர்கள் தமிழில் ஏராளம், ஏராளம். அந்தவகையில் கொங்கு நாடும் எண்ணற்ற புலவர்களையும், இலக்கிய, இலக்கணங்களையும் தமிழுக்குக் கொடையாக வழங்கியுள்ளது.
சங்க காலத்தில் அந்தி இளங்கீரனார் (அந்தியூர்), பொன்முடியார் (மொம்முடி), பெருந்தலைச் சாத்தனார் (பெருந்தலையூர்), ஒரோடகத்துச் சுந்தரத்தனார் (ஓலகடம்), குடவாயில் கீர்த்தனார் (கொடுவாய்), காக்கை பாடினியார் போன்ற பல புலவர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்ததை அறியமுடிகிறது. குறிப்பாக கரூரில் மட்டும் பத்து புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.
மணமக்களை மங்கலச் சொற்களால் வாழ்த்துவது உலக மக்களின் மரபாகும். இத்தகை மங்கல வாழ்த்து சங்க இலக்கியத்தில் ஏராளமான இடங்களில் பயின்று வருகின்றன.
கொங்கு நாட்டு மங்கல வாழ்த்து கொங்கு வேளாளக் கவுண்டர்களின் திருமணங்களில் நடைபெறும் மிக முக்கிய சீராகும். மங்கலன் என அழைக்கப்படுகிற நாவிதர்குலப் பெருமகன் இதனை திருமணத்தின் போது பாடுவார். இது கம்பரால் பாடி அருளப்பட்டது என வழி வழியாக கொங்கு நாட்டு மக்களால் நம்பப்பட்டு வருகிறது. இது கவிச்சக்கரவர்த்தி கம்பரால் இயற்றப்பட்டதா? இல்லையா? என்ற ஐயம் நிறுவப்படாமலேயே உள்ளது.
கொங்குநாட்டிற்கு அரிதாக கிடைத்த இந்த மங்கல வாழ்த்து இலக்கிய நயம் மிகுந்து விளங்குகிறது. முறையான பதிப்போ, நூலோ இல்லாத காரணத்தாலும், வாய்வழியாக பயின்று வந்த காரணத்தாலும் இப்பாடலில் பல வரிகளை மாற்றியும், சேர்த்தும், நீக்கியும் என காலப்போக்கில் பல மாறுதல்களை சந்தித்துள்ளது.
இந்த மங்கல வாழ்த்துப் பாடல்களின் மூலம் பல செய்திகளை நம்மால் அறிய முடிகிறது. இருப்பினும் ஒரு சில செய்திகள் மட்டும் இங்கு கையாளப்பட்டுள்ளன. திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் பூக்களுக்கு எக்காலத்திலும் தனிச்சிறப்பு இருந்துள்ளது. பல பூ வகைகள் இருந்தாலும் கொங்கு சமுதாயத்தில் கீழ்க்காணும் பூக்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
முல்லை, இருவாச்சி, முனைமுறியா செண்பகப்பூ, நாரும் கொழுந்தும் நந்தியா வட்டமும், வேரும் கொழுந்தும் வில்வ பத்திரமும், மருவும் மரிக்கொழுந்தும், புன்னை, கொன்னை பூக்கள் எல்லாம் கொண்டு வந்து கொண்டை மாலை, தண்டை மாலை, சோபனச் சுடர்மாலை போன்ற மாலைகளைச் செய்து மணமக்களை அலங்கரித்தனர் என்ற செய்தியையும் அறியமுடிகிறது.
மேலும் மணமக்களுக்கு வழங்கிய சீர்வரிசைகளை 'பெட்டிகளும்,பேழைகளும், பொன்னும், சீப்பும், பட்டுத்துணி நகையும், பார்க்கக் கண்ணாடியும், சத்துச் சர்ப்பணி, தங்கம் பொன் வெள்ளி நகை, முத்துச் சரப்பணி மோகன மாலைகளும்' போன்ற வரிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
பல்வேறு தமிழறிஞர்கள் இந்நூலை பதிப்பித்திருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்நூலினை பல நூல்களை ஆய்வு செய்தும், இணையத்தின் உதவியுடனும் காலத்தின் சுழற்சியால் இந்நூல் மறைந்து போய்விடக்கூடாது என்ற நோக்குடன் பதிப்பித்துள்ளேன்.
கால ஓட்டத்தில் இதுபோன்ற மங்கல வாழ்த்துப் பாடலை கொங்கு சமுதாயம் மறந்து வருவது வேதனைக்குரிய செயலாகும். இனிவரும் காலங்களில் அனைத்து இல்லத் திருமணங்களிலும் இப்பாடல் பாடப்பெற்றாலே இப்பதிப்பின் பெரு வெற்றியாகும்.
நேயத்துடன்
உழவுக்கவிஞர் உமையவன்
Release date
Ebook: 2 June 2020
English
India