Step into an infinite world of stories
Fiction
மறுநாள் காலை ஆறு மணிக்கு ஒரு பிராமண மாமி வந்து விட்டாள்! அகிலாதான் வரவேற்றாள். ‘‘என் பேரு சுலோச்சனா! நான் மடிப்பாக்கத்துலேருந்து வர்றேன்!’’ ‘‘ஒக்காருங்க மாமி!’’ ரமேஷ் வர, தாரிணி மெல்ல எழுந்து வந்தாள்! அம்மா அகிலா எல்லா விஷயங்களையும் சொன்னாள்! “அதுக்கென்ன? நான் இப்ப முதலே பொறுப்பை ஏத்துக்கறேன்! சம்பளம் பற்றி ஏதாவது சொன்னாளா?” “நீங்க சொல்லுங்க!” “பத்துரூபா குடுத்துடுங்க! பஸ் சார்ஜ் இருக்கில்லையா? சமயத்துல காத்தால பஸ் கிடைக்கலைனா, ஷேர் ஆட்டோ புடிச்சு வரணும்!” “ராத்திரி சமையலைக் கூட செஞ்சு வச்சிட்டுப் போகணும்!” “கண்டிப்பா!” “உங்க வீட்ல எத்தனை பேர் மாமி?” “சின்ன வயசுல அவர் என்னை விட்டுட்டு வேற ஒருத்தியோடப் போயிட்டார். ஒரே பெண் குழந்தை - வத்சலா! இப்ப இருபது வயசு! ப்ளஸ் டு பெயில்! அவளும் இந்த மாதிரி சமையல், பங்களா வேலைனு சம்பாதிக்கறா! ஒரு நாளைக்கு நான் வரமுடியலைனா, அவ வந்து செஞ்சு தருவா!” “சரி மாமி!”“இந்த வீட்டுப் பழக்கம் எப்படி? யாருக்கு என்ன ருசி? எல்லாம் சொன்னா அதன்படி செஞ்சு தர்றேன். சில வீடுகள்ல உப்பு, உறைப்பு நிறைய வேணும், இப்ப பி.ப்பீ, சக்கரைனு எல்லா வியாதிகளும் இருக்கற காரணத்தால பார்த்து சமைக்க வேண்டியிருக்கு!” கேட்டுத் தெரிந்து கொண்டாள். “இப்ப டிபனுக்கு சேமியா கிச்சடி பண்ணி, சட்னி அரைக்கட்டுமா?” “சரி, மாமி!” மாமி மளமளவென செயலில் இறங்கி விட்டாள். காலை ஏழரைக்கு ஆவி பறக்கும் சேமியா கிச்சடி, தேங்காய் கொத்துமல்லி சட்னி, ஒரு கத்தரிக்காய் கொத்சு என தயார் செய்து விட்டாள். டிகிரி காபியும் தயாராக, சாப்பிட்ட குடும்பத்தார் அசந்து போனார்கள். அப்படி ஒரு ருசி! “அத்தே! மாமி பிரமாதமா செய்யறாங்களே?” “ஆமாம் தாரிணி! ரெண்டு நாள் பார்க்கலாம். வந்த புதுசுல ஜோர் இருக்கும்! போகப்போக தேயுதானு பார்க்கணும்!” மதிய சமையல் அதை விடப் பிரமாதம்! ஒரு கூட்டு, பொரியலை வைத்து நெய்ல வத்தக்குழம்பு, எலுமிச்சை ரசம் என மாமி அசத்தினாள்! தேவைக்கு அதிகமான பேச்சு இல்லை! சுறுசுறுப்பான செயல்பாடு! அடுத்த நாள் இட்லி, தோசை தேவைக்கு ஊறப்போடுதல், மாவு அரைத்தல், பொடி செய்தல் என நேரத்தை விணாக்காமல் உழைத்தாள். இரவு உணவை தயாரித்து ஏழு மணிக்கு புறப்பட்டாள்! செல்போன் வைத்திருந்தாள்மகள் வத்சலாவுடன் அவ்வப்போது பேச்சு! அந்த ஒருவாரத்தில் மாமியின் தயாரிப்பு அட்டகாசம்! ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு சமையல். காலையில் வரும் போதே காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்துவிடுவாள்! பொருட்களை அதிகம் விரயம் செய்யாமல் சிக்கனமாகக் கையாண்டு அசத்தி விட்டாள்! தாரிணிக்கு என்ன பிரச்னை என்று இன்றுவரை கேட்கவில்லை. வம்பு, தும்பு இல்லை. “பத்தியச் சமையல் செய்வீங்களா மாமி?” “உனக்கு ஒடம்புக்கு என்னானு சொல்லு, அதுக்குத்தக்க செஞ்சு தர்றேன்!” “மாமி! அவளுக்கு கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலை! அதனால என்னால முடியலைனுதான் உங்களை வேலைக்-கு வச்சிருக்கோம்!” “குழந்தையே இல்லையா?” அகிலா எல்லா விபரங்களையும் சொல்லி விட்டாள்! மாமிக்கு கண்கள் கலங்கியது! திரும்பி ரகசியமாக துடைத்துக் கொண்டாள். “விடும்மா குழந்தே! நல்ல மாமியார் -தங்கமான புருஷன்! உங்க அன்பு, பாசம், குடும்ப இணக்கத்தை ஒரு வாரமா நான் பார்க்கறேனே! இது குடுப்பினை இல்லையா? மனசைத் தேத்திக்கோ! பகவான் எப்ப, எதை, எப்படி தரணும்னு எழுதி வச்சிருப்பான்! அது நமக்குத் தெரியுமா? சரி விடு! ஆபரேஷன் ஆயிருக்கு! வயிறெல்லாம் புண்ணா இருக்கும்! அதுக்குத்தகுந்த பத்தியச் சமையலை உனக்கு நான் செஞ்சு தர்றேன்!” “சரி மாமி!” “இதப்பாரு! மனசைத் தெளிவா வச்சுக்கோ! எந்த டாக்டரும் நம்மை குணப்படுத்த முடியாது! மனசுதான் மகத்தான வைத்தியர்!”
© 2024 Pocket Books (Ebook): 6610000510474
Release date
Ebook: 16 January 2024
English
India
