Step into an infinite world of stories
செவந்த இதழ்களின் இடையே முத்துப் பற்கள் ஒளிவீச மதுமதி கலகலவென்று நகைத்தாள். சிறு கேலி இழையோடிய சிரிப்பு. சற்று நேரம் மகளின் சிரிப்பில் தன்னை மறந்த தந்தை மீண்டும் தான் சொன்னதையே வலியுறுத்திப் பேசினார். “மெய்யாகவே பிரபுவைக் கெடுத்தது அந்த கோபிதான்.” சிரிப்பை நிறுத்திவிட்டு, “பல் முளைக்காத பாப்பா அவரைக் கையில் தூக்கிக் கொண்டு போய்ச் சாக்கடையில் தொபீர் என்று அந்தக் கோபி போட்டு விட்டாரா அப்பா?” என்று கண்களை விரித்தாள் மகள். தன்னை மீறிப் புன்னகை செய்துவிட்டு மதுவின் காதைப் பிடித்துத் திருகினார் அவர். “உதைக்க வேண்டும் உன்னை வாயைப் பார்.” “பாருங்களேன். என் வாய் மிகவும் அழகாக இருப்பதாகத்தான் என் ஃபிரண்ட்ஸ் சொல்கிறார்கள்” என்றாள் கண்ணில் குறும்புடன். “ஃபிரண்ட்ஸ்? பெண்கள்தானா... அல்லது?” “கேட்கக் கூடாத கேள்விகளுக்கெல்லாம் இவ்விடம் பதில் சொல்லப்பட மாட்...டா...து” என்று கன கம்பீரத்தில் தொடங்கி கிளு கிளு சிரிப்பில் முடித்தாள் மகள். ஆனால் தந்தை அந்தச் சிரிப்பில் சேரவில்லை. அவள் கிளுகிளுத்து முடிக்கும்வரை காத்திருந்து விட்டு, “பாப்பா, இந்த ‘ஜெட்ஸெட்’ மாதிரி நீ ஆகிவிடக் கூடாது” என்றார் மெல்லிய ஆனால் உறுதியான குரலில். அவரை நேர் பார்வையாகப் பார்த்தாள் மதுசில கணங்கள் பார்வையைத் தாங்கிய அவர் தோல்வியை ஒப்புக் கொண்டவராகக் கைகளை உயர்த்தினார். “இது உத்தரவு அல்ல பாப்பா. வயதுக் கோளாறுக்கு நீ ஆளாகிவிடக்கூடாதே என்ற எச்சரிக்கைதான்” என்றார். பார்வையின் கம்பீரம் குறையாமலேயே, “அவசியம் அற்றது அப்பா” என்றாள். பிறகு அவளே, “என் வகுப்பில் நிறையப் பேர் என்னை அவன் அப்படிப் பார்த்தான், இவன் என்னிடம் இப்படி இளித்தான் என்று சொல்லிச் சொல்லி அதிலேயே பூரித்துப் போவார்கள். யாரும் பார்க்கவில்லை என்றால் மனம் ஒடிந்தும் போவார்கள்” என்றாள் ஒரு அலட்சியத்துடன். நீ அப்படி இல்லை என்கிறாயாக்கும்? ஏன் மது, ஒர் இளைஞன் கண்ணில் ஆவலோடு உன்னைப் பார்த்தால் உனக்குப் பிடிக்காது என்றா சொல்கிறாய்?” “அறிந்து கொள்ளும் ஆவலுக்கும் அசட்டுவிழிக்கும் வித்தியாசம் நிரம்ப இருக்கிறது அப்பா. அசிங்கக் கற்பனைகளைக் கண்ணிலேயே காட்டிக் கொண்டு உடம்பைப் பார்வையால் மேய்கிறவர்களைக் கண்டால் எனக்குக் குமட்டிக் கொண்டு வருகிறது. நேராக முகத்தைப் பார்த்துப் புத்திசாலித்தனத்தோடு பேசட்டுமே.” “அதாவது பேச்சால் உன்னை மயக்கி விடலாம் என்கிறாயா?” தலையைச் சரித்து அவரைக் கூர்மையுடன் பார்த்தாள் மதுமதி. “என்னப்பா விஷயம்? சுற்றிச் சுற்றி மயக்கத்திலேயே நிற்கிறீர்கள்” என்று விசாரித்தாள். சற்றுத் தயங்கிவிட்டு, “மதும்மா, பிரபு பார்வைக்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பான்.” “இருக்கட்டுமே தெருவில் இறங்கிப் பாருங்கள். இன்றைய நவீன சாதனங்கள், மேக்கப்பில் எல்லாருமே கவர்ச்சிகரமாகத்தான் தெரிவார்கள். கெடுப்பது மாற்ற முடியாத முழியும் பேச்சும் தான்.” “அவன் பேச்சிலும் கெட்டிக்காரன், ரசிக்க ரசிக்கப் பேசுவான்.” “ஓ.கே. அதற்கென்ன?” “இரண்டும் சேர்ந்து உன் மனதில் சலனத்தை... சிரிக்காதே பாப்பா, நான் மெய்யான கவலையோடு பேசுகிறேன்.
© 2025 PublishDrive (Ebook): 6610000770120
Release date
Ebook: 4 April 2025
English
India