Step into an infinite world of stories
4
Lyric Poetry & Drama
வாசகர்களுக்கு வணக்கம்
உடைந்த நிலாக்கள் பாகம் 2 என்பது
உடைந்த நிலாக்கள் பாகம் 1-ன் வெற்றியால்
வெளிச்சப்பட்ட ஒன்றல்ல...
நெடுநாள் தவம்!
சின்ன வயசின் பள்ளிச்சீருடை நாட்களில்
உள்மனசுக்குள் உலா வந்த
பறக்கும் கம்பள ராஜகுமாரர்களும் பாக்தாத் பேரழகிகள் பற்றிய
அம்புலிமாமா கதைகளும்
எனக்குள் ஒரு சரித்திர தாகத்தை தோற்றுவித்தது.
கனவுகளில் எத்தனையோ போர்கள் நிகழ்ந்து
கத்தி சத்தம் உளறலாய் வெளிப்பட்டிருக்கிறது!
இந்த உணர்வு மெல்லப் படியேறிப் படியேறி
வரலாற்று நாவல்களை கரைத்துக் குடிக்கும்
மனோநிலைக்கு என்னைத் தள்ளியது!
மந்திர தந்திர ஜாலங்கள் நிரம்பிய அந்த அம்புலிமாமா உலகில் இருந்து நான் உயர்ந்து தமிழ் மன்னர்களின், வீர புருஷர்களின் வாழ்க்கையை
எழுத்தாய் வாசிக்கும் போது உதிரத்தில் இறங்கி உயிரில் குளம் கட்டித் தேங்கியது!
சாண்டில்யன் அவர்களின் வர்ணணைகளில் வழுக்கி விழுந்து அந்த எழுத்து நடைக்குள் புதைந்து எழுந்து திடீர் திருப்பங்களில் திக்குமுக்காடி,
வரலாறு வகுக்கப்பட்ட வியூகங்களில் வியப்பின் விளிம்பு தடவி நெகிழ்ந்த அனுபவமும்...
கோவி.மணிசேகரன் அவர்களின் கவிதைப் பூச்சு பூசப்பட்ட சரித்திர தொடர்களில் ஐக்கியமாகி, பைத்தியமாகி, புத்தி பேதலித்து தலைக்
கிறுக்கோடு திரிந்து எனக்குள் நிகழ்ந்த வரலாற்றுக் காதலும்...
கல்கி அவர்களின் எதார்த்தமான எழுத்துக்குள் சரித்திரம் சித்து விளையாட்டு விளையாடி வாசிப்பவரின் கண்களுக்குள் காட்சி வந்து
விரிந்து மலர்ந்து நேருக்கு நேர் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திய பாதிப்பும்...
எனக்கு சரித்திரம் சொல்ல வேண்டும் என்ற கனவை உள் வெளி அகம் புறம் எங்கும் அலைபாயச் செய்தது! அந்த அலையோட்டத்தின் சிறுசிறு ஆர்ப்பரிப்பே என் உடைந்த நிலாக்கள் பாகம் 2 என்ற இந்தப் புத்தகம்!
உடைந்த நிலாக்கள் பாகம் 1, ‘பாக்யா’ வார இதழில் வெளியாகி கவிதை சிம்மாசனத்தில் அமர்ந்து வீதிஉலா வந்தது போலவே உடைந்த நிலாக்கள் பாகம் 2-ம் 'பாக்யா’ வார இதழில் மதிப்பிற்குரிய என் ஆசான் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் ஒத்துழைப்போடும் வாசகர்களின் கைதட்டல்களோடும் வெளியாகி இப்போது முழுவடிவப் புத்தகமாய் மொட்டவிழ்ந்திருக்கிறது!
இந்தப் புத்தகம் ஒரு தனித்துவத்தோடு விளங்க முகப்பு அட்டையை முனைப்போடு வடிவமைத்துக் கொடுத்த இனிய நண்பர் டிசைனர் சசி அவர்களுக்கும், இந்த நிஜம் சார்ந்த கவிதை கதைகளுக்கு நிழலோவியம் தந்து மெருகு கூட்டும் ஓவியர் ஷாம் அவர்களுக்கும், என் நட்சத்திர எண்ணிக்கையிலான நன்றிகள்!
இதோ இனி உங்கள் களம்!
சரித்திரம் சார்ந்த காதலின் வேர் முனையில் இருந்து வழியும் நிஜத்தின் தேன் பருக உங்கள் பட்டாம்பூச்சி கண்கள் பயணப்படட்டும்...
வணக்கங்களுடன்
பா.விஜய்
Release date
Ebook: 18 December 2019
English
India