Step into an infinite world of stories
கீதா பரபரத்துக் கொண்டு இருந்தாள்! கால்கள் தரையில் பரவாமல், காற்றிலே மிதக்கும் வானத்துத் தேவதைபோல, வீட்டுக்கும், வாசலுக்குமாக ஓடிக்கொண்டு இருந்தாள். வெளியில் - வீதியில் ஒரு சிறு ஓசை கேட்டால் போதும், “அதோ அண்ணா வந்துவிட்டார்!” என்று வாசலுக்கு ஓடுவாள்! “சே” என்று ஏமாற்றத்துடன் திரும்புவாள். “கொஞ்சம் நில்லுடி” என்று குரல் கொடுத்துக் கொண்டே சிவகாமி அம்மாள் வந்தாள். அவள் கையில் மல்லிகைக் கொத்து இருந்தது. “இந்தப் பூவை தலையில் வைத்துக் கொள்.” கீதா அழகாக இரட்டைச் சடை பின்னியிருந்தாள். இரண்டு கருநாகப் பாம்புகள் போல அவை நீண்டு தொங்கின. “சீக்கிரம் வையுங்கள் அம்மா” என்று அவசரப்பட்டுக் கொண்ட கீதா, தாயிடம் தலையைத் திருப்பிக் காட்டினாள். அவள் கூந்தலில் மல்லிகைச் சரத்தை வைக்க சிவகாமி அம்மாள் முயற்சித்தபொழுது, வெளியில் “ஜல் ஜல்’ என்ற ஓசை கேட்டது. “அம்மா அதோ குதிரை வண்டி, அண்ணா வந்து விட்டார்” என்று கூறிக்கொண்டே கீதா வாசலுக்கு ஓடினாள். ஆசையோடு வெளியில் எட்டிப் பார்த்தாள். அது குதிரை வண்டிதான். ஆனால், அது அவளது வீட்டைத் தாண்டிப் போய்க் கொண்டு இருந்தது. அந்த வண்டியில் அவளுடைய அண்ணன் இல்லை. செந்தில்ஆண்டவன் கோயிலுக்குச் செல்லும் யாரோ அமர்ந்து இருந்தார்கள். கீதா முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் திரும்பினாள்
கூடத்தில் அமர்ந்து இருந்த சிவநேசர், “என்னம்மா கீதா உன் அண்ணன் வந்தாகி விட்டதா?” என்று கேட்டார். அவரது குரலில் கேலியும் கிண்டலும் குழைந்து இருந்தன. “இல்லேப்பா” என்று வருத்தத்துடன் கூறிக்கொண்டே கீதா உள்ளே சென்றாள். மகனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் சிவநேசருக்கும்தான் இருந்தது. ஆனால் அவர் கீதாவைப் போல சிறு பிள்ளை அல்ல. எனவே, ஆசையை அடக்கிக் கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அவருடைய மூத்த பிள்ளை குமரேசன், மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒரே மகனுங்கூட. இராணுவத்தில் பணியாற்றுகிறான். அவன் விடுமுறையில் வருகிறான் என்றால், வீட்டில் உள்ள அனைவருமே ஆவலுடன் தானே எதிர்பார்ப்பார்கள்! கீதாவின் கூந்தலைப் பிடித்து இழுத்து, பூவை வைத்துக் கொண்டே “என்னடி உன் அண்ணன் வந்தாகி விட்டதா!” என்று சிவகாமி அம்மாளும் குத்தலாகக் கேட்டாள். கீதாவுக்குக் கோபம் வந்து விட்டது. “ஏம்மா அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இல்லையா?” என்று வெடுக்கென்று கேட்டாள். “இல்லாமல் என்னடி? என் ராஜாவைப் பார்த்து எவ்வளவு காலமாகி விட்டது!” சிவகாமி அம்மாள் பேசவில்லை, பெற்ற வயிறு பேசியது. பிள்ளையைக் காணும் ஆவல் அந்தத் தாய் உள்ளத்தில் வெள்ளம் போல புரண்டு கொண்டு இருந்தது. ஆனால் கீதாவைப் போல பரபரக்கவில்லை. கீதா ஏமாற்றத்தோடும், எரிச்சலோடும் உட்கார்ந்து விட்டாள். ‘சே இந்த அண்ணா சுத்த மோசம்’ என்று அண்ணனை அர்ச்சனை பண்ணத் தொடங்கி விட்டாள். அப்பொழுது வெளியில் மீண்டும் “ஜல் ஜல்” என்ற சலங்கை ஓசை கேட்டது. அந்த ஓசை கீதாவின் காதுகளில் நன்றாக விழுந்தது. ஆனால், அவள் பிடிவாதமாக பிடித்து வைத்த பிள்ளையார் போல இருந்த இடத்திலே இருந்தாள், இன்னொரு முறை ஏமாந்தால், அவளுக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது
© 2025 PublishDrive (Ebook): 6610000768899
Release date
Ebook: 3 April 2025
English
India