Step into an infinite world of stories
Fiction
ஒரு சமயம் பெரம்பூரில் நடந்த 'வாஷிங்டனில் திருமணம்' நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். ஒரு முறை தலைமை தாங்கினார். சாவியும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் பெருந்தலைவர் காமராஜ், சாவியின் இல்லத்துக்கு வரப் போவதாகத் தகவல் வந்ததால், நாடகத்துக்குச் செல்வதைக் கேன்ஸல் செய்து விட்டு, காமராஜை வரவேற்க வீட்டிலேயே இருந்து விட்டார் சாவி. 'என்னைவிட காமராஜர் உங்களுக்கு முக்கியமாகப் போய் விட்டாரா?' என்று எம்.ஜி. ஆருக்குக் கோபம் உண்டானதில் வியப்பில்லை.
எம்.ஜி.ஆர். சாவி மீது கோபப்படும்படியான இன்னொரு பெரிய விஷயமும் நடந்தது. தினமணி கதிரில் வாசகர்களின் கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். பதில் சொல்லிக் கொண்டிருந்தார். சில வாரங்களுக்குப் பின்னர், சோ-வைத் தாக்கி அடிக்கடி பதில் சொல்லத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். அந்தக் குறிப்பிட்ட பதில்களைப் பிரசுரிக்காமல் நிறுத்தி விட்டார் சாவி. இப்படிச் சில வாரங்கள் கடந்தன. பின்னர், அந்த வாரத்துக்கான பதில்களோடு சாவியைத் தேடி வந்தார் எம்.ஜி. ஆரின் உதவியாளர் வித்வான் வே. லட்சுமணன். எம்.ஜி.ஆரின் பதில்களைக் கொடுத்து விட்டு, 'நீங்கள் அவர் எழுதும் சில பதில்களைப் பிரசுரிப்பது இல்லையாம். கட்டாயம் அவற்றைப் பிரசுரிக்கும்படிச் சொன்னார்' என்றார். 'மாட்டேன். ஒருவரைக் குறிப்பிட்டுக் காயப்படுத்துகிற மாதிரியான பதில்களை நான் பிரசுரிக்க மாட்டேன். பத்திரிகை ஆசிரியராக ஒன்றைப் பிரசுரிப்பதும், நிறுத்தி வைப்பதும் என் உரிமை!' என்றார் சாவி.
'அப்படியானால் எம்.ஜி.ஆரின் கோபத்துக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம். அடுத்த வாரம் அவர் பதில்கள் எழுதித் தருவதைக் கூட நிறுத்தி விடலாம்' என்றார் வே. லட்சுமணன். இது சாவியைக் கோபப்படுத்தியது. ‘அடுத்த வாரம் என்ன? இந்த வாரமே அவரின் பதில்களை நிறுத்தி விட்டேன் என்று அவரிடம் போய்ச் சொல்லுங்கள்' என்று வந்த பதில்களையும் கையோடு வே. லட்சுமணனிடம் பிரித்துப் பார்க்காமலே திருப்பி அனுப்பி விட்டார் சாவி.
ஒரு பத்திரிகையாளராக நடுநிலையுடன் செயல்படத் தான் எப்போதும் விரும்பியிருக்கிறார் சாவி. தேர்தலில் வென்று முதலமைச்சராக ஆன பின்பு, அவரை வரவேற்று தம் பத்திரிகையில் தலையங்கம் வெளியிட்டார் சாவி. மேலும், 'தோட்டம் முதல் கோட்டம் வரை' என்னும் தலைப்பில் எம்.ஜி.ஆரின் அரசியல் பயணம் குறித்துச் சில வாரங்களுக்கு அற்புதமான தொடரும் வெளியிட்டுக் கௌரவித்தார். ஏ.வி.எம். தயாரித்த ‘அன்பே வா' படப்பிடிப்பைக் காண அவர்களின் அழைப்பின் பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே ‘புதிய வானம், புதிய பூமி' என பாடல் காட்சியில் தம்மோடு சாவியையும் நடந்து வரச் சொல்லி கட்டளையிட்டார் எம்.ஜி.ஆர். கோட் சூட் அணிந்தபடி கம்பீரமாக நடந்து வருவார் சாவி. அப்போது எம்.ஜி.ஆரைக் காண சில ராணுவ வீரர்கள் விரும்பினார்களாம். எம்.ஜி.ஆரும் அவர்களுடன் உரையாடி, புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த வீரர்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர், தன் தாயார் தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில் வசிப்பதாகக் கூறி, அவருக்குத் தன் நலத்தைத் தெரிவித்து, தான் வாங்கி வைத்திருக்கும் ஒரு எளிய புடவையைத் தன் தாயாரிடம் சேர்க்க வேண்டும் என்றும் விரும்பினாராம்.
சென்னை திரும்பியதும் முதல் காரியமாக அந்தப் புடவையை, அந்த வீரர் கொடுத்த கடிதம் மற்றும் தனது அன்பளிப்பாக ஒரு பெரிய தொகை ஆகியவற்றை வைத்து பேக் செய்து, தனது உதவியாளரை அழைத்து, ஒரு காரில் உடனடியாகக் கிளம்பிச் சென்று, அந்த வீரரின் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்து, அவரின் தாயாரிடம் அந்தப் பார்சலை சேர்த்து விட்டு வரும்படி உத்தரவிட்டார். இந்த மனிதாபிமானப் பண்பை வேறு எவரிடமும் நான் பார்க்கவில்லை. அவரை 'மக்கள் திலகம் என்று அழைத்தது மிகவும் சரியே' என்று சிலாகித்துச் சொல்வார் சாவி.
Release date
Ebook: 11 December 2019
English
India