Fiction
பிரபஞ்சத்தின் எல்லா சிருஷ்டியிலும் கதை சொல்லிகள் இருப்பதாக நான் நம்புகிறேன். சொற்களில் பின்னப்படும் கதைகள் மட்டுமே படைப்பிலக்கியம் அல்ல. இயற்கையின் படைப்பே ஓர் இலக்கிய காவியம். அதன் ஒவ்வோர் அசைவும் உடயிர்த்துடிப்பும், ஓசைகளும், எண்ணற்ற கீதங்கள் இசைப்பவை.
இயற்கையின் சீற்றத்தில், பேரழிவுகளில், எழினில், பல நிற பல மொழி பல கடவுள்கள் கொண்ட மனிதர்களின் மனமாச்சரியங்களில் மனதை உலுக்கும் ரகசியங்கள் புதைந்திருக்கின்றன, சொல்லக் காத்திருக்கின்றன. அதைக் கேட்க, புரிந்துகொள்ளக் கூடிய செவிகளிடம் சொல்ல, அவற்றைக் கேட்கும் பொறுமைதான் தேவை நமக்கு, சூட்சுமமும் கரிசனமும் தேவை. பேச முடியாத ஊனம்களும் பார்வையற்ற குருடர்களும், காது கேளாதவர்களும், பேதலித்த மனங்களும், இன யதிர் காலத்தில் புவியின் திசையைப் புரிந்துகொள்ள இயலாத தடுமாற்றத்தில் இருக்கும் பெரிசுகளும் கதைகள் சுமக்கிறார்கள். இறக்கத் தெரியாமல் தவிக்கிறார்கள். கதாசிரியர்கள் எப்படி இத்தனைக் கதைகள் புனைகிறார்கள் என்பது ஆச்சரியமில்லை. இன்னும் சொல்லப் (வேண்டிய கதைகள் சொல்லப்படாமல் வரிசையில் காத்து நிற்கின்றன என்பதுதான் ஆச்சரியம். ஒவ்வொரு கணமும் நூறாயிரம் கதைகள் நம்மைச்சுற்றி காற்றலையில் மிதக்கின்றன. ஒரு பெருமூச்சில், ஒரு சிரிப்பில், ஒரு வார்த்தையில், ஒரு கண்ணசைவில், ஒரு மரணத்தில், புலம்பெயர்ந்த பரிதவிப்பில், காரணமற்ற சமூக நிர்ப்பந்தத்தில் - கதைகள் ஒளிந்து நிற்கின்றன. அவை உன் புலன்களுக்கு வெளிச்சமாகும் போது கதை ஜனிக்கிறது.
அந்த வெளிச்சம் ஓர் ஆன்மிக தரிசனம். மனதை நெகிழவைக்கும் தரிசனம். தூய்மைப்படுத்தும் அனுபவம். இந்தத் தொகுப்பில் இருக்கும் பதினோரு கதைகளும் அப்படிப் பிறந்தவை. பொதுபவாகப் புனை கதைகள் நிஜ வாழ்வின் அனுபவத்தில் எழுதப்படுபவை என்றாலும் நூலிழையான நினைவை ஒட்டி முழுவதுமான கற்பனைக் கதைகள் அநேகம். மிக இலக்கியத் தரம் வாய்ந்த பல கதைகள் அப்பாடப் பிறந்திருக்கின்றன. இந்தத் தொகுப்பில் இருக்கும் அத்தனைக் கதைகளிலும் பெரும் மாந்தர்கள் (ஒன்றிரண்டு கதைகள் தவிர) அநேகமாக நான் நேரில் சந்தித்தவர்கள். கதைப்பின்னாலும் சம்பவங்களும் அவர்களது நிஜ வாழ்வில் நிகழ்ந்தவை. இல்லையென்றாலும், அவர்கள் உணரும் பரிதவிப்பும் துயரமும் அவர்கள் நிஜமாக அனுபவிப்பது என்று நினைக்கிறேன். அவர்களையெல்லாம் சந்தித்தபின், அவர்களது நினைவு என்னைப் பல நாட்களுக்கு ஆட்டிப்பிடித்தது. மனதின் அந்தகார ஆழத்திற்குச் சென்று வெளிச்சம் காணத் துடித்தது. ஒவ்வொன்றும் வெளியே வரக் காத்திருந்தது. கணினியின் பலகைக்கு முன் அமர்ந்ததும் தாமாக எழுதிக்கொண்டன. யாரும் எந்தப் பத்திரிகையும் கேட்டு எழுதக் காத்திருக்கவில்லை.
ராமேசுவரம் அகதி முகாமில் சந்தித்த தம்பதிகள், எனது தோட்டக்காரர் ராமப்பா, காது கேளா சுப்பம்மா, நகுமோமுவில் உருகும் காமாட்சி, மூளை மூப்புக் கணவனை சமாளிக்கும் ராதா, மொழி புரியாத இந்திய முதியோர் இல்லத்திற்கு வந்து சேரும் அமெரிக்க ஆங்கிலம் பேசும் சங்கரி, வயசு காலத்தில் வாழ்வின் குறிக்கோள் என்ன என்று சந்தேகிக்கும் சாவித்ரம்மா, குழந்தை பிறக்காத குற்றத்துக்காக வேதனைப்பட்ட அமுதா - எல்லாரும் எனக்குப் பரிச்சயமானவர்கள். அவர்கள் என்னைத் தங்கள் கதைகளை எழுதச் சொல்லவில்லை. ஆனால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத வகையில் பாதித்தார்கள். அவர்களது கதைகள் என்னளத் துன்புறுத்தின. எந்த வகையிலோ என்னைக் குற்றவாளி ஆக்கின, நான்தான் அவர்களது துன்பங்களுக்குக் காரணம் என்பதுபோல், சகஜீவிகளின் துயரங்களுக்கும் சந்தோஷங்களுக்கும் நாம் எல்லாரும் கூட்டாகக் காரணம் என்று படுகிறது. இதன் உணர்தலே நம்மைத் தூய்மைப்படுத்துவதாகத் தோன்றுகிறது. இக்கதைகளை சொற்களில் வடித்து உருவம் கொடுத்த பிறகு ஒரு ஞானஸ்னானம் கிடைத்ததுபோல என் மன உளைச்சல் விடுபட்டது. எழுதப்படும் கதைகளால் கதை மாந்தர்களுக்கு விடிவு கிடைக்கும் என்று நினைப்பது அபத்தம். ஆனால் கதைகளைப் படிப்பவர் மனதில் அவை சிறிது சலனம் ஏற்படுத்துமானால் என் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கொள்ளலாம்.
- வாஸந்தி
Release date
Ebook: 3 January 2020